கே.ஐ.டி கல்லூரியில் 14-ம் ஆண்டு விழா

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும் 14-ம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.நாகராஜன் கலந்துகொண்டு 148 முன்னணி நிறுவனங்களில் தேர்வு பெற்ற சுமார் 629 மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும் போது, மாணவ மாணவிகள் வாழ்வில் சிறந்த வெற்றியாளர்களாக உருவாவதற்கான சிறப்பு ஆலோசனைகளை வழங்கினார். எதிர் வரும் காலங்களில், பொறியியல் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும், அதைப்பெறுவதற்கு மாணவ மாணவிகள் தங்களது தனி திறமைகளை வளர்த்து கொள்வது பற்றியும், அதே சமயத்தில், மாணவ மாணவிகள் தங்களது உடல் நலன், மனநிலை மற்றும் சிந்தனை திறன்களில் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும் எனவும் எடுத்து கூறினார்.

மேலும் இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் மோகன்தாஸ்காந்தி, நடப்பு கல்வியாண்டில் ஓராண்டாக நடைபெற்ற பல்வேறு கல்வி சார்ந்த நிகழ்வுகள், விளையாட்டுப்போட்டிகள், ஆண்டு அறிக்கையை வாசித்தார். முன்னதாக இக்கல்லூரியின் டீன்-வேலை வாய்ப்புத் துறைத்தலைவர் மகாலட்சுமி கல்லூரியில் மாணவர்களுக்கு நடைபெற்ற திறன் மேம்பாட்டு வகுப்புகள் மற்றும் கல்லூரி வளாக வேலைவாய்ப்பு நிகழ்வுகளை எடுத்துக் கூறினார். மேலும், கல்லூரியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியர்கள், விளையாட்டுகளில் சிறந்து விளங்கியவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்களுக்கு பொங்கலூர்.நா.பழனிசாமி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வர் ரமேஷ், பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.