எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டு விழா

பயத்தை வென்று வரலாறு படையுங்கள்!

– நளின் விமல்குமார், டெக்னிகல் டைரக்டர், எஸ்.என்.எஸ் கல்விக் குழுமம்

கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் 20 வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. மாணவர்களின் உற்சாகமான கை தட்டலுடனும், காதை கிழிக்கும் விசில் சத்தத்துடனும் கல்லூரியின் ஆண்டுவிழா இனிதே தொடங்கியது.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் செந்தூர்பாண்டியன் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை வாசித்து கல்லூரி மாணவர்கள் இதுவரை செய்த சாதனைகளை எடுத்துக் கூறினார்.

மேலும், கல்லூரி நிர்வாகத்திற்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டதோடு மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெங்களூரு டி.சி.எஸ் – இன் ஜெனரல் மேனஜர் மற்றும் ஹெட் (Academic Interface Programme) சந்திரா கொடுரு மற்றும் கௌரவ விருந்தினராக பங்கேற்ற சென்னை எல் & டி இன்ஃபோ டெக் லிமிடெட், டீம் லீட் ஸ்பேசலிஸ்ட் யோகீஷ் குமார் ஆகியோருக்கு மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்வில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களுக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளில் முதல் தர வரிசை பெற்ற மாணவர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

மகிழ்ச்சியான தருணம்!

– சுப்பிரமணியன், தலைவர், எஸ்.என்.எஸ் கல்வி குழுமம் 

இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின் இந்த கல்லூரி ஆண்டு விழா நடைபெறுகிறது. எஸ்.என்.எஸ் தொழில் நுட்பக் கல்லூரி என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இக்கல்லூரியின் முதல்வராக 2002 முதல் 2006 ஆம் ஆண்டு வரை இருந்துள்ளேன். இதன் வளர்ச்சியை நான் கண் கூடாக பார்த்துள்ளேன். இதற்கு இங்கு பணியாற்றிய அத்தனை ஊழியர்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்களே முக்கியக் காரணம்.

கல்லூரி தரவரிசைப் பட்டியல்களில் எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி டாப் 10 க்குள் வரவேண்டும் என்ற தனது ஆசையையும் இந்த சிறந்த தருணத்தில் அவர் பதிவிட்டார்.

2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரி ஆரம்பத்தில் 18 மாணவர்களை மட்டுமே கொண்டு இயங்கியது. ஆனால் தற்போது பல ஆயிரம் மாணவர்களை கொண்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதற்கு நம் அனைவரின் கடின உழைப்பே காரணம். மேலும், தேசிய தர மதிப்பீட்டில் A++ அங்கீகாரம் பெற்றதும் பெருமைமிகு தருணம் என்றார்.

நடப்பாண்டில் கல்லூரியின் பல சாதனைகளை எடுத்துக் கூறவும், மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு விருதுகள் வழங்குவதற்காகவும், கலாச்சார நிகழ்வுகளை கொண்டாடுவதற்காகவும் இந்த ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. மாணவர்களின் கல்லூரி வாழ்வில் ஆண்டுவிழா என்பது மிகவும் முக்கியமான தினமும் கூட. மாணவர்களாகிய உங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த மகிழ்ச்சியான நாளாக இந்நாள் இருக்கும் எனக் கூறினார்.

வாய்ப்புகளை தவற விடாதீர்கள்!

– யோகீஷ் குமார், டீம் லீட் ஸ்பேசலிஸ்ட், எல் & டி இன்ஃபோ டெக் லிமிடெட், சென்னை     

கல்லூரிகளில் நடைபெறும் கலாச்சார நிகழ்வுகள் எவ்வளவு முக்கியம் என்பதை நான் கார்ப்பரேட் உலகத்தில் நுழையும் போதே உணர்ந்தேன் என்றார்.

கல்லூரியில் களங்களில் ஆரம்பத்தில் மேடைகளில் ஏறி மைக்கை பிடித்து பேச பயமாகவும், தயக்கமாகவும் இருந்தாலும் அந்த அனுபவம் வாழ்க்கைக்கு உதவும்.

இங்கு கிடைக்கும் அனுபவங்களே பணிபுரியும் இடத்தில் உதவும். எனவே இங்கே கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கல்லூரி காலங்களில் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவும் பல போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள். அது வெளி உலகத்திற்கு செல்லும் போது மிகப்பெரிய அளவில் உதவும் என்றார்.

இந்தியாவிலேயே எல்&டி நிறுவனத்தில் அதிக அளவில் பணி நியமனம் செய்யப்பட்ட கல்லூரிகளின் பட்டியலில் டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி டாப் 10 – க்குள் இடம்பெற்றுள்ளதையும் பெருமிதம் படக்கூறினார்.

தோல்வி அனுபவங்களும் வெற்றிக்கு உதவும். முயற்சி செய்தால் அடைய வேண்டிய இலக்கை நிச்சயம் அடைய முடியும். கற்கும் அனுபவங்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அபதுல் கலாம் அவர்களின் “நான் பறந்து கொண்டே இருப்பேன்” என்ற பாடலை கூறி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

 எல்லையைத் தாண்டி செல்லுங்கள்!

– சந்திரா கொடுரு, ஜெனரல் மேனஜர் மற்றும் ஹெட் (Academic Interface Programme), டி.சி.எஸ், பெங்களூரு 

மாணவர்களுக்கு தேவையான முக்கியமான சில பண்புகளை எடுத்துக் கூறி, நமக்கான ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு அதற்குள் மட்டும் அடங்காமல், எல்லைகளைத் தாண்டி செல்ல வேண்டும் எனக் கூறினார்.

அனைவருக்கும் சமமான மதிப்பளியுங்கள். இது வாழ்வின் முக்கியமான தகுதி. மேலும் ஒருவர் வாழ்வில் வெற்றி அடையவும் இப்பண்பு முக்கியக் காரணமாக உள்ளது.

உங்களுக்கான இலக்கை நிர்ணயித்து, பின்னர் அதை நோக்கி பயணியுங்கள். உங்கள் துறையில் நீங்கள் சிறந்து விளங்க கடினமாக உழைத்து அதில் வெற்றி அடையுங்கள். குறுகிய இலக்கை நிர்ணயித்து அதோடு நின்று விடாமல், உங்களுக்கான இலக்கை உயரமாக வையுங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

உங்களை சுற்றி நடக்கும் மாற்றங்களை கவனியுங்கள். வெளியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் மாற்றங்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் பாதிக்கலாம் அதற்கு ஏற்றவாறு தயாராக இருக்க வேண்டும். மாற்றங்களுக்கு தகுந்த மாதிரி உங்களை மாற்றி அமைத்துக் கொண்டு செயல்படுங்கள்.

பிறருடன் பகிர நினைப்பதை மிக எளிமையான வார்த்தைகளை கொண்டு அவர்களுக்கு புரியும் படி கருத்துக்களை முன்வையுங்கள். கல்லூரிக்குள் முடிந்தவரை ஆங்கில மொழியை அதிக அளவில் கையாளுங்கள். அது பின்னாட்களில் உதவும்.

வாழ்க்கையில் உயர்ந்த இலக்குகளை கொண்டு இருக்க வேண்டும். மதிப்பும் நியாயமான வகையில் வாழ்வது மிக அவசியம். அறிவும், உழைப்பும், நல்ல குணமும் இருக்கும் ஒருவரின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது.

பிடித்ததை செய்யுங்கள்!

– அருணாச்சலம், இயக்குனர், எஸ்.என்.எஸ் டெக்னிகல் இன்ஸ்டிடியூசன்ஸ்

கல்லூரியில் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் பார்க்க முடியும் ஒரு விழா உண்டு என்றால் அது ஆண்டு விழா தான் என்றார்.

மாணவர்கள் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் செல்வதை விட அங்கு சில ஆண்டுகள் பணிபுரிந்து, பின்னர் தொழில் முனைவோர் ஆக வேண்டும். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை உருவாக்கி பிறருக்கு வேலை கொடுக்கும் அந்தஸ்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

படித்த இளைஞர்களுக்கு இங்கு பல வேலைவாய்ப்புகள் உள்ளது. அதில் எதற்கு ஆசைப்படுகிறோமோ அதில் முயற்சி செய்து அதனுள் நுழைய வேண்டும். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அங்கு போய் நம் வாழ்க்கையை தொடங்க அவர்களின் மொழியையும் நாம் தெரிந்து இருப்பது முக்கியம்.

படித்த வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்று இல்லை, நமக்கு பிடித்தமான வேலையையும் செய்யலாம் எனக் கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் பல சவால்களை சந்திக்க நேரிடும் அதை தைரியமாக எதிர்கொள்ளுங்கள் எனப் பேசினார்.

பணத்தைவிட பணியின் ஆர்வம் பெரிது!

– நளின் விமல்குமார், டெக்னிகல் டைரக்டர்

எஸ்.என்.எஸ் கல்லூரி மாணவர்களால் எதை நினைத்தாலும் செய்ய முடியும் என்றும், இடத்திற்கு தகுந்தவாறு தங்களை மாற்றி அமைத்து, அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும் எனக் கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

இந்த உலகத்தில் அனைவரும் தங்களின் தேவைக்கு தேவைப்படும் பணத்திற்காக பணிபுரிகிறார்கள். ஆனால் ஒரு தருணத்தில் நம்மால் பணத்திற்காக மட்டுமே வேலை செய்ய முடியாது.

நம் வளர்ச்சிக்காகவும், நமக்கு பிடித்தவற்றை செய்வதற்காகவும் வேலை செய்ய வேண்டும். எந்த காரணத்திற்காகவும் உங்களுக்கு பிடித்தமான வேலையைச் செய்ய தவறி விடாதீர்கள். பணத்தைவிட நம் மனதிற்கு பிடித்தமான வேலையை செய்வதே முக்கியம்.

எல்லா வெற்றியாளர்களுக்கும் பின்னால் அவர்களின் கடின உழைப்பும், தியாகமும் இருக்கும். நம்மை ஈர்த்த பல வெற்றியாளர்களும் இதைத் தாண்டியே வெற்றியை அடைந்து இருப்பார்கள்.

உங்கள் திறமை மீதும் உங்கள் உழைப்பின் மீதும் நம்பிக்கை வையுங்கள் எதைக் கண்டும் பயம் கொள்ளாதீர்கள் புது வரலாறு படையுங்கள்.