ஜூன் 10 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் திமுக, அதிமுகவில் யாருக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக, அதிமுகவில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்‍காலம் நிறைவடைய உள்ளது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்‍காலம் ஜுன் 29 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தி.மு.க.வைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, என்.வி.என்.சோமு, அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்‍காலம் வரும் ஜுன் 29ம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகம், மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்‍கை கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறுகிறது.

அம்மாநிலத்தில் 11 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்‍காலம் வரும் ஜூலை 4 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலுக்‍கு வேட்பு மனு தாக்‍கல் மே 24 ஆம் தேதி தொடங்கி, வரும் 31 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் உள்ளன.  ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அப்படிப்பட்ட சூழலில் இப்போது திமுகவுக்கு கூட்டணியையும் சேர்த்து 159 பலத்துடன் இருப்பதால் 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுகவுக்கு தனித்து 66 உறுப்பினர்களும், கூட்டணியாக 75 உறுப்பினர்களும் இருப்பதால் இரு இடங்களை பெற முடியும்.

திமுக, அதிமுகவுக்கு போதுமான எண்ணிக்கை இருப்பதால் இப்பதவிகளுக்கு போட்டி ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, திமுகவுக்கு 4 பதவிகளும், அதிமுகவுக்கு 2 பதவிகளும் கிடைக்கும்.  இரு கட்சிகளுமே கூட்டணிக்கு ஏதாவது ஒரு இடத்தை விட்டுக்கொடுக்குமா என்பது இனிமேல் தான் தெரியவரும்.

ஆளும் கட்சியான திமுகவில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடுதலாக உள்ளது. தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வைத்திருக்கும் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, என்.வி.என்.சோமு ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது சமூக ரீதியான பார்வையுடன் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதில் கனிமொழி, என்.வி.என்.சோமு அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் தேர்வானவர். எனவே அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம். அதேபோல, தில்லி சிறப்பு பிரதிநிதியாக இருக்கும் ஏ.கே.எஸ்.விஜயனின் பதவி காலமும் நிறைவடையும் நிலையில் உள்ளது. காலம் காலமாக திமுகவுக்கு இலவசமாக வாக்களித்து வந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் திமுகவில் அளிக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தில், கடந்த பேரவைத் தேர்தலில் அந்த வாக்குளில் கணிசமானவை அதிமுக, பாஜக கூட்டணியை நோக்கி நகர்ந்தது. இதை உணர்ந்துகொண்ட திமுக, விஜயனுக்கு தில்லி சிறப்பு பிரதிநிதி வாய்ப்பை வழங்கியது.

இதற்கு முன்பு இந்த சமூத்தில் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கவேலுக்கு  மட்டுமே திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஏ.கே.எஸ்.விஜயனுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. உதயநிதி ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி உள்ளது.

மதிமுகவில் மாவட்டச் செயலராக இருந்து, திமுகவுக்கு வந்து, இப்போது திமுகவின் மாநில இளைஞர் அணி துணைச் செயலராக இருக்கும் எஸ்.ஜோயல், உதயநிதியின் தீவிர ஆதரவாளர். இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஏற்கெனவே தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் அல்லது கோவில்பட்டி தொகுதியை தனக்கு ஒதுக்கும்படி உதயநிதி மூலம் கடும் நெடுக்கடி கொடுத்தார். ஆனால், 2001 இல் இருந்து தொடர்ந்து வெற்றிபெற்று வரும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கே மீண்டும் திருச்செந்தூர் பேரவைத் தொகுதி வழங்கப்பட்டது. மேலும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரசுக்கு  ஒதுக்கப்பட்டது. கோவில்பட்டியில் சமூக ரீதியாக ஜோயுலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஜோயல் காய்நகர்த்தி வருகிறார்.

திமுகவில் புதிய முகங்களை பொறுத்தவரை நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்து, திமுகவின் செய்திதொடர்பாளராக இருக்கும் யாதவ சமூகத்தை சேர்ந்த ராஜீவ் காந்திக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. உதயநிதி ஆதரவாளராகவும், தமிழ் தேசிய திராவிட கருத்தியல்வாதி, வழக்குரைஞர்  என பன்முக பார்வையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். 2009 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றிபெறுவதற்கு ராஜீவ் காந்தி பிரித்த வாக்குகளே முக்கிய காரணம் என்பது சுவாரசியமான விஷயம்.

அதேபோல, கன்னியாக்குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க மீனவர்கள் இடையே திமுகவில் சரியான பிரதிநிதி இல்லை என்ற அதிருப்தி எழுந்துள்ளது. இதனால், கடந்த பேரவைத் தேர்தலில் இச்சமூகத்தை சேர்ந்த வாக்குகள் நாம் தமிழருக்கு 7 சதவீதம் பெற முக்கிய காரணமாக இருந்தது. கன்னியாக்குமரி மாவட்ட அரசியலை பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என்பதை மையப்படுத்தி கிறிஸ்தவ சமூக வாக்குகளை திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து பெற்று வருகிறது. ஆனால், கிறிஸ்தவ மீனவர்களுக்கு அரை நூற்றாண்டு காலமாக உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்ற மனக்குறை உள்ளது.

2021 இல் நடந்த கன்னியாக்குமரி மக்களவை இடைத்தேர்தலில் விஜய் வசந்த் 52 சதவீத வாக்குகளையும்,  பொன் ராதாகிருஷ்ணன் 40 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். இப்படி பட்ட சூழலில் நிர்ணய சக்தியாக இருக்கும் கிறிஸ்தவ மீனவர்கள் நாம் தமிழருக்கு சென்றுவிட்டால் இது 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு நெருக்கடியை உருவாக்கும். ஆகவே அந்த சமூகத்துக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.

ஜெயலலிதாவுக்காக தனது ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவரும், அதிமுக, அமமுக கூடாரத்தில் வலுவான சக்தியாக இருந்து,  இப்போது திமுகவில் ஐக்கியமாகி இருக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு இதுவரை முக்கிய பதவி கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஸ்டாலினுக்கு உள்ளது. ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டிருந்தால் இப்போது அமைச்சரவை பட்டியலில் செந்தில்பாலாஜி போல அவரும் கோலோச்சியிருக்கக்கூடும். அவரே இந்த மனக்குறையை பல இடங்களில் பகிர்ந்துள்ளார். எனவே, இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், 2024 மக்களவைத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.எஸ்.மகனான ஓ.பி.ரவீந்திரநாத்க்கு எதிராக களம் இறக்க பொருத்தமான நபர் இவர் என்பதால் இவருக்கு வாய்ப்பு கொஞ்சம் குறைவு தான்.

அதேபோல, கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்த மருத்துவர் மகேந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கோவை மக்கள் நம்புகின்றனர். ஆனால், கோவையில் 1996 க்கு பிறகு நீண்டகாலமாக திமுக தனது சொந்த சின்னத்தில் மக்களவை உறுப்பினர் பதவியை பெற முடியாத சூழல் உள்ள நிலையில், படித்த அரசியல்வாதியான மகேந்திரனை அடுத்தமுறை கோவையில் களம் இறக்குவது தான் திமுகவுக்கு சரியான முடிவாக இருக்கும் என்பது கட்சி மேலிடத்தின் கணக்கு. அண்ணாமலை கோவையில் களம் இறங்கக்கூடும் என்ற பேச்சு பலமாக எழுந்துள்ள நிலையில் படித்த அரசியல்வாதியான மகேந்திரனை இப்போது பயன்படுத்தாமல் அடுத்தமுறை களம் இறக்குவதே தனக்கு சாதகமாக இருக்கும் என ஸ்டாலின் கணக்கு போடலாம்.

அதிமுகவில் இரண்டு பதவிகளில் ஒன்று எடப்பாடி பழனிசாமியின் மனசாட்சியாக திகழும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கிடைக்கும் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கட்சிக்காக சிறைக்குச் சென்றுவந்துள்ளதால் அவருக்கு அனுதாபமும் இருக்கிறது. அடுத்தப்பதவியை ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளருக்கு பெற்றுத்தருவாரா அல்லது எடப்பாடி பழனிசாமியிடமே விட்டுவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவ்வாறு ஓ.பி.எஸ். கைக்கு கிடைத்துவிட்டால் மதுரையை சேர்ந்த முன்னாள் துணை மேயரும்,  யாதவ சமூகத்தை சேர்ந்த தனது ஆதரவாளருமான கோபாலகிருஷ்ணனுக்கு இந்த பதவியை ஓபிஎஸ் பரிந்துரை செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், சிறுபான்மையினருக்கு ஒரு பதவி கொடுக்க வேண்டும் என்ற பார்வையில் அதிமுக வழக்குரைஞர் அணி நிர்வாகியும், ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்ந்த இன்பதுரைக்கும் அதிர்ஷ்டம் அடிக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

மேலும், பாஜகவில் அதிக பிராமணர்கள் பதவியில் இருந்தாலும் கூட,  அதிமுகவுக்கு பிராமண சமூகத்தினர் தொண்டு தொட்டு வாக்களித்து வருகின்றனர். திமுகவை தோற்கடித்தே தீர வேண்டும் என்றும், ஜெயலலிதாவை முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அந்த வாக்குகள் அதிமுகவுக்கு தொடர்ந்து விழுந்து வருகிறது. 2016 பேரவைத் தேர்தலில் அதிமுக ஒரு சதவீத வித்தியாசத்தில் வெற்றிபெற காரணம், பிராமணர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காமல், அதிமுகவுக்கு வாக்களித்தது தான்.  அப்போது ஒரு வேளை பிராமணர்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்காது.

அப்படி இருந்தாலும் அதிமுகவில் உரிய பிரதிநிதித்துவம் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்ற மனக்குறை பிராமணர்களுக்கு உள்ளது. மைத்ரேயனுக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு வழங்கப்படாதது கூட, அந்த சமூகத்தினரிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. அதேபோல கும்பகோணம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதனுக்கு பேரவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்காமல் கூட்டணி கட்சியான ஸ்ரீதர் வாண்டையாருக்கு இந்த முறை கட்சித் தலைமை ஒதுக்கியது. இது பிராமணர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும், அமைச்சராக இருந்த  துரைகண்ணு இறந்து ஒன்றரை ஆண்டு ஆன பிறகும் இப்போதும் தஞ்சை வடக்கு மாவட்டத்துக்கு செயலர் பதவியை நியமிக்காமல் வைத்தியலிங்கத்திடமே கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அதிருப்திகளால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பிராமணர் வாக்குகள் பாஜக பக்கம் நகர்ந்துள்ளது. அதன் காரணமாக தென்சென்னை, ஸ்ரீரங்கம், கும்பகோணம் பகுதிகளில் பாஜக கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இதை சரிகட்டுவதற்கு பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கொடுத்து வாய்ப்பளித்தால் அது 2026 பேரவைத்தேர்தலில் அதிமுகவுக்கு பக்கபலமாக இருக்கும்.

கூட்டணிக்கு திமுக விட்டுக்கொடுக்குமா?: அடுத்தமாதம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி அழகிரிக்கு முடிகிறது. அடுத்து ஒரு பெண் தலைவருக்கு, தலைவர் வாய்ப்பு கிடைக்கும் என அழகிரியே கருத்து தெரிவித்துள்ளதால் அவர் மீண்டும் தலைவராக வாய்ப்பு குறைவு தான்.  காங்கிரசுக்கு தமிழகத்தில் ராசியான தலைவராக இருந்து, இரண்டு தொடர் வெற்றியை பெற்றுத்தந்த அழகிரிக்கு மாநிலங்களவை பதவியை சோனியா காந்தி பெற்றுத்தரக்கூடும்.

ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக அழகிரி இருப்பதால் அவருக்கு ஒரு பதவியை ஸ்டாலின் விட்டுக்கொடுக்கலாம்.  2021 பேரவைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்க வேண்டும் என கலக குரல்கள் எழுந்தன.

அப்போது பீட்டர் அல்போன்ஸ்,  அழகிரி ஆகியோர்தான் திமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதற்கு கைமாறாக பீட்டர் அல்போன்ஸ்க்கு சிறுபான்மை வாரியத் தலைவர் பதவியை திமுக வழங்கிவிட்டது. இப்போது அழகிரிக்கும் கைமாறாக மாநிலங்களவை பதவி கிடைக்கலாம். யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது இன்னும் ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும்.