இந்தியாவில் 19.4 % பேருக்கு கழிப்பறை வசதி இல்லை – ஆய்வில் தகவல்

முன்பெல்லாம் கழிப்பறை குறித்து பொது வெளியில் பேசத் தயங்கிய ஒரு காலம் இருந்திருந்தாலும், சுகாதாரத்தில் அவை முக்கிய பங்கு வகிப்பதால் தற்போது நிலைமை மாறி கழிவறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

ஆனாலும் இந்தியாவில் 19.4 சவீதம் பேர் போதிய கழிவறை வசதியின்றி உள்ளனர் என்பது தேசிய குடும்பநலத் துறை (NFHS) மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு யுனிசெஃப் அமைப்பு, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான திறந்த வெளியில் மலம் கழிக்கும் மக்கள் (சுமார் 62 கோடி பேர்) இந்தியாவில் இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக இந்திய கிராமங்களில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. கழிப்பறை இல்லாதது, போதிய தண்ணீர் இல்லாதது, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இல்லாமை ஆகியவை மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

மேலும், கடந்த 2015-2016 ஆண்டில் மலம் கழிப்பதற்கு திறந்தவெளியைப் பயன்படுத்துபவர்களின் விகிதம் 39 சதவீதமாக பதிவாகியிருந்த நிலையில், 2019-2021 இல் இந்த விகிதம் 19.4 சதவீதமாக குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இவ்விகிதம் அதிகரித்திருந்தாலும் கழிவறை பயன்பாட்டில் பீகார் 61.2 சதவீதமும், ஜார்க்கண்ட் 69.6 சதவீதமும், ஒடிஸா 71.3 சதவீதமும் பின்தங்கியுள்ளன.

இந்த மாநிலங்களின் நிலை இவ்வாறு இருக்க, லட்சத்தீவில் 100 சதவீத மக்களும் கழிவறை வசதியைப் பயன்படுத்துகின்றனர் என்பதும், மிசோரத்தில் 99.9 சதவீதம் பேரும், கேரளத்தில் 99.8 சதவீதத்தினரும் கழிவறையைப் பயன்படுத்துகின்றனர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கழிப்பறை பயன்பாடு பற்றி தேசிய குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறருடன் பகிர்ந்துகொள்ளாத மேம்படுத்தப்பட்ட கழிவறைகளை நாட்டில் 69.3 சதவீதம் பயன்படுத்துகின்றனர். 8.4 சதவீத குடும்பத்தினர் கழிவறையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். 2.9 சதவீதம் பேர் வசதிகளற்ற கழிவறையைப் பயன்படுத்துகின்றனர்.

நாட்டில் 19.4 சதவீதமே பேருக்கு கழிவறை வசதியே இல்லை. இவர்கள் திறந்தவெளியையே மலம் கழிப்பதற்குப் பயன்படுத்துகின்றனர் என்ற தகவலும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நகர்ப்புறங்களில் 6.1 சதவீத வீடுகளில் திறந்தவெளி மலம் கழிக்கும் பழக்கம் உள்ளது. இதுவே கிராமப்புறங்களில் அந்த எண்ணிக்கை 25.9 சதவீதமாக உள்ளது.

நகர்ப்புறங்களில் உள்ள குடும்பங்களில் 80.7 சதவீதத்தினருக்கு மேம்படுத்தப்பட்ட கழிவறை வசதிகள் உள்ளன. கிராமப்புறங்களில் 63.6 சதவீதம் மட்டுமே உள்ளது.

நகர்ப்புறங்களில் 10.5 சதவீத குடும்பத்தினர் மற்றவர்களுடன் கழிவறையைப் பயன்படுத்துகின்றனர். இது கிராமப்புறங்களில் 7.4 சதவீதமாக உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.