பருத்தி நெருக்கடியை சமாளிக்க ஜவுளித்துறை ஒன்றுபட வேண்டும் – சைமா வேண்டுகோள்

பருத்தி மற்றும் நூல் விலை நெருக்கடியை சமாளிக்க ஒட்டு மொத்த ஜவுளித்துறையும் ஒன்றுபட வேண்டும் என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

மத்திய அரசு ஏப்ரல் 14 முதல் செப்டம்பர் 30 வரையில், பஞ்சின் மீதான இறக்குமதி வரியை நீக்கியுள்ளது. ஜவுளித்துறை அமைச்சர் வரும் 17ம் மத்திய தேதி நிலைமையை மறுபரிசீலனை செய்ய மீண்டும் ஒரு கூட்டத்திற்கு ஒட்டு மொத்த ஜவுளித்துறைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சைமா தலைவர் ரவி சாம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் கூறியுள்ளதாவது: தற்போதுள்ள கடுமையான நெருக்கடியை சமாளிக்க ஜவுளித்துறையின் அனைத்து பிரிவுகளும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

பொதுவாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் குஜராத் சங்கர் -6 பருத்தி வகைகளின் விலை தற்போது ரூ.99,000 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஹொசைரி நூல் ரூ.481 என்ற அளவிலேயே உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுத்தமான பருத்தியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.376 ஆக உள்ளது. அதிக உற்பத்தி திறன், நியாயமான கூலி, காற்றாலை வைத்திருப்பவர்களுக்கு ஒரு யூனிட் மின் செலவு ரூ.5.85, நியாயமான வட்டி, தேய்மானம், போன்றவற்றை கணக்கிட்டாலும், 40 கவுண்ட் நுாலின் விலை கிலோ ஒன்றுக்கு இலாபம் இன்றி ரூ.502 ஆக உள்ளது. அதே நேரத்தில் தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.481 என்ற அளவில்தான் நூல் விற்கப்படுகிறது.

இறக்குமதியாகும் பருத்தி, தமிழகத்தில் விளையும் கோடை கால பருத்தி பஞ்சாலைகளில் வந்தவுடன் பருத்தி விலை குறைய தொடங்கும் என கணிக்கப்படுகிறது. சாதகமற்ற விலையினால், பருத்தி நுகர்வு கணிசமாக குறையும்.

ஒரு சமயத்தில் பருத்தி உற்பத்தித்திறன் ஹெக்டேர் ஒன்றுக்கு 565 கிலோ என்று இருந்தது. தற்போது 460 கிலோவாக குறைந்துவிட்டதாலும் பருத்தி உற்பத்தி 398 இலட்சம் பேல்களில் இருந்து 330 இலட்சம் பேல்களாக குறைந்து விட்டதாலும் பருத்தி தொழில்நுட்ப திட்டம் 2.0 வை அரசு அறிவிக்க வேண்டும்.

ஜவுளித்துறையினரும் ஒற்றுமையாக செயல்பட்டு தொழில்நுட்ப பருத்தி திட்டம் 2.0யை கொண்டுவர அரசிடம் கோரிக்கை வைத்து வற்புறுத்த வேண்டும். மேலும் பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கத்தை செப்டம்பர் 30 க்கு பிறகும் நீட்டிக்க ஒட்டு மொத்த ஜவுளித்துறையினரும் ஓரணியில் திரண்டு கோரிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு நீட்டித்தால் ஏற்கனவே பருத்தியின் விலை குறைந்தபட்ச ஆதார விலையை விட அதிகமாக உள்ளதால் அது விவசாயிகளை பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.