கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்: கோவையில் கண்காணிப்பு பணி தீவிரம்

கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சலின் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையான கோவை வாளையார் சோதனை சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும் இந்த காய்ச்சல், சருமத்தில் சிவப்பு திட்டுக்கள் ஏற்படுத்துகிறது.

இதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு, உடல்வலி, சோர்வு, கைகால்கள் வெள்ளை நிறமாக மாறுதல், முகத்தில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் தமிழக – கேரளா எல்லைப்பகுதியான வாளையார் பகுதிகளில், காய்ச்சல் அறிகுறிகளுடன் வருவோரிடம் கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து கோவையில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.