எப்போதும் அமைதியாக இருக்க முடியவில்லையே…

அடிக்கடி கோபம், படபடப்பு, வருத்தம், எரிச்சல் என மாறி மாறி மனம் குழம்பிக் கொண்டிருக்கிறதா… உடலில் பிரச்சனை என்றால் வைத்தியத்தில் சரி செய்துவிடலாம், இப்படி மனதில் பிரச்சனைக்கு என்ன செய்யலாம்…!?

சத்குரு: பெரும்பாலானவர்களைக் கவனித்து ஓர் ஆராய்ச்சி செய்ததில், அவர்கள் எட்டு மணி நேரம் வேலை செய்தால், அதில் அதிக பட்சம் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கான திறமைதான் வெளிப்படுகிறது என்று தெரிய வந்திருக்கிறது.

பேனாவை எடுப்பதும், திருகுவதும், கீழே வைப்பதும், தேவையில்லாமல் திரும்பிப் பார்ப்பதும், நாற்காலியை நகர்த்துவதும், விரல்களின் நுனிகளை ஆராய்ச்சி செய்வதும் போன்ற குழப்பமான செய்கைகளிலேயே பெரும்பாலானோர் தங்களை அறியாமலேயே நேரத்தை வீணடிக்கிறார்கள்.

உங்களுக்குத் தெரியுமா… உடலின் இந்தக் குழப்பமான செய்கைகளெல்லாம் தெளிவற்ற மனதின் வெளிப்பாடுகள்.

இப்படிச் சிந்தனைகளை அலைக்கழிக்கும் செயல்களில் சக்தியைச் செலவிடாமல், அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினால், பெரும் மாற்றங்கள் நிகழக்கூடும். எந்த வேலையும் கடினமாகத் தோன்றாது. அந்தப் பணி வழக்கத்தைவிடப் பாதி நேரத்திலேயே முடிந்துவிடக்கூடும்.

சரி, மனம் எதனால் தெளிவற்று இருக்கிறது?

கோபம், படபடப்பு, வருத்தம், சந்தோஷம் என எல்லாமே உங்கள் உணர்ச்சிகளின் வெவ்வேறு வெளிப்பாடுகள்தான்.

பெரும்பாலும், உங்கள் உணர்ச்சிகள் வெளிச் சூழ்நிலைகளால்தான் தூண்டப்படுகின்றன.

அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதபோது, இந்த உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடியாமல் அலைகழிக்கப்படுகிறீர்கள்.

பதவி உயர உயர, எதிர்பாராத வெளிச் சூழ்நிலைகளை அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஒரு சாதாரண குடிமகனைவிட, தேசத்தின் முதல் குடிமகனான ஜனாதிபதியும், பிரதமரும்தான் வெளிச்சூழ்நிலைகளை அதிகம் சந்திக்கிறார்கள்.

அமைதியில்லாத மனதுக்குச் சின்ன மணல் கூடப் பெரும் பாறையாகத் தெரியும். மனம் தெளிவாக இருக்கும் போது, தடைகளைக் கூடப் படிகளாக மாற்றிக் கொண்டு மேலே உயர முடியும்.

இதற்கு உதாரணமாக ஒரு வேடிக்கைக் கதை சொல்லலாம்.

ஒரு குருவிடம் பல சீடர்கள் இருந்தனர். அவர்களில் இருவருக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. ஆசிரமத்தில் புகைக்க முடியாததால், தியானத்தில் மனம் செல்லாமல் அவர்கள் தவித்தார்கள்.

இப்படிக் கஷ்டப்படுவதைவிட, ’இங்கேயே நாங்கள் புகை பிடிக்கலாமா?’ என்று குருவிடமே கேட்டுவிட்டால் என்ன என்று இருவரும் யோசித்தார்கள்.

மறுநாள், நண்பர்களில் ஒருவன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தோட்டத்தில் உட்கார்ந்திருந்தான்.

அடுத்தவன் புகை பிடித்தபடி வந்தான். அவனைப் பார்த்ததும் இவன் பதறி எழுந்தான்.

“அதெப்படி நீ புகை பிடிக்கிறாய்? நான் கேட்டபோது குரு அனுமதி மறுத்தாரே?”

“நீ அவரிடம் என்ன கேட்டாய்?”

“தெளிவாகவே கேட்டேனே… ’தியானம் செய்யும்போது சிகரெட் பிடிக்கலாமா?’ என்று கேட்டேன். ’கூடவே கூடாது!’ என்றாரே?” ”நான் அதையே கொஞ்சம் மாற்றிக் கேட்டேன். ’புகை பிடிக்கும்போது தியானம் செய்யலாமா?’ என்று கேட்டேன். ’தாராளமாக!’ என்று அனுமதி அளித்துவிட்டார்”  என்று சிரித்தான் அடுத்தவன்.

மனம் அமைதியாக இருந்தால் எதுவுமே பிரச்சனையாகத் தெரியாது.

எப்போதெல்லாம் அமைதியை உணர்ந்திருக்கிறீர்கள்?

வயிறார உண்டு முடித்தவர்களைப் பாருங்கள். களைப்பில் படுத்திருப்பார்கள்.

’நிம்மதிக்காகக் குடிக்கிறேன்’ என்று சிலர் மது அருந்திவிட்டு நினைவில்லாமல் கிடப்பார்கள்.

இந்த மாதிரி செயலற்று இருப்பதல்ல அமைதி.

உள்ளே அமைதியாக இருந்தால், மனம் முழு விழிப்பு உணர்வுடன் எதையும் சந்திக்கத் தயாராயிருக்கும்.

பச்சைப் பசேலென்ற ஒரு மலையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். அப்போது மனம் அமைதியாக இருக்கும். ஆனந்தமாக இருக்கும்.

தீடிரென்று மரங்களின் மறைவிலிருந்து நீண்ட தந்தங்களுடன் ஒரு யானை வெளிப்பட்டால், அத்தனை அமைதியும் போய், படபடப்பு ஏறும். என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறுவீர்கள் அல்லவா? ஆனால், உள்ளே நீங்கள் அமைதியாக இருந்தால், யானையைப் பார்த்தவுடன் மனம் ஸ்தம்பித்து நிற்காது. உடனடியாக உங்களைக் காப்பாற்றிக் கொள்ளச் செயல்படுவீர்கள்.

பொதுவாக எப்போதெல்லாம் உங்கள் அமைதி கலைக்கப்படுகிறது?

நீங்கள் எதிர்பார்த்தபடி மற்றவர்கள் நடந்து கொள்ளாதபோது கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது. எங்கே மனிதர்கள் எதிர்த்து கேள்வி கேட்காமல், உங்களுக்குப் பணிந்து உங்கள் செய்கைகளைச் சகித்து ஏற்றுக் கொள்கிறார்களோ, அங்கே அமைதியாக உணர்கிறீர்கள்.

அதாவது, நீங்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்றால், உங்கள் அகங்காரத்துக்குத் தீனி போட வேண்டி இருக்கிறது.

புரிந்து கொள்ளுங்கள்… உங்கள் அகங்காரத்தையும், ஆணவத்தையும் ஆதரிப்பவர்கள் உண்மையில் உங்கள் நண்பர்கள் அல்ல. உங்களை அறியாமையிலேயே வைத்திருந்து, உங்கள் வளர்ச்சிக்குத் தடை போடும் மோசமான எதிரிகள்!

நீங்கள் உள் சூழ்நிலையை அமைதியாக வைத்திருக்கத் தவறியதால்தான் இத்தனை குழப்பங்களும்!

உங்களுக்குள் இருக்கும் சக்தியை ஒழுங்காகக் கட்டுப்படுத்தி உங்கள் விருப்பப்படி செயல்படுத்தக் கற்றுக் கொள்ளாததால்தான் இத்தனை அவதிகளும்!

நீங்கள் உள்ளே முழு அமைதியாகவும், வெளியே வெகு சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.

உள்ளே அமைதியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

முறையான யோகாவாலும், தியானத்தாலும் உங்கள் சக்தியைச் சிதறாமல், கட்டுக்கோப்பில் வைத்திருக்க முடியும்.

மனதை அப்படி ஒரு கட்டுக்கோப்பில் வைத்திருந்தால்தான், உங்கள் திறமை முழுமையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்!