வெயில்: என்ன கொடுமை சார் இது!

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம் அடித்து இருக்கிறது என்பது சமீபத்திய முக்கிய செய்திகளில் ஒன்று. வட இந்தியாவில் இன்னும் நிலைமை மோசம். தமிழ் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி வெயிலின் கொடுமைகளை விளக்கி அதற்காக  செய்ய வேண்டிய செயல்பாடுகளைப் பற்றியும் விளக்கியிருக்கிறார்.

சுகாதாரத் துறை சார்பாக அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். எல்லா பத்திரிகைகள் வாயிலாக மருத்துவர்களும் மற்றவர்களும் கொளுத்துகின்ற கோடை வெயிலை சமாளிப்பது எப்படி என்று ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

முதலில் இந்த கொளுத்துகின்ற கோடை வெயிலை கடப்பதற்கு மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை கவனிப்போம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது முதல் வேலையாகும்.  வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தவிர்ப்பது மிகவும் நல்லது.

கடுமையான உடல் உழைப்பு கொடுப்பவர்கள், கூடுதலாக நீர்ச்சத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். நீராகாரம் எடுத்துக் கொள்வது கூட நல்லது. வண்ணமிகு குளிர் பானங்கள், செயற்கை சுவையூட்டிகள் கொண்ட பானங்களை தவிர்க்க வேண்டும்.

முக்கியமாக டாஸ்மாக் சரக்குகளை தவிர்த்தால் கூட தப்பில்லை. பதிலுக்கு மோர், எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றையும், மற்ற பழச்சாறுகளையும் இளநீர் போன்றவற்றையும் குடிக்கலாம்.  நீராகாரம் கூட மிகவும் நல்லது.

வெளியிலும் அறைகளிலும் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் இயற்கையான காற்று கிடைக்கும் வகையில் ஜன்னல்களை திறந்து வைப்பதில் தொடங்கி பூங்காக்களில்  நடைப்பயிற்சியில் ஈடுபடுவது மிகவும் நல்லது.

இதுபோக வெயிலின் கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆனால் அதனை உணராமல் மயக்கம் போட்டு விழுந்தவர்களும் உண்டு. சக மனிதர்கள் இவ்வாறு பாதிக்கப்படும் போது தொலைக்காட்சி செய்தி என்று கடந்து போகாமல் நின்று அவர்களுக்கு உதவுவது நல்லது. கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெப்பநிலையை குறைப்பதற்கு ஒரு குடம் தண்ணீரை தலையில் ஊற்றினால் கூட தப்பில்லை.

மனிதர்களைப் போலவே விலங்குகளும் பறவைகளும் கூட வெயிலின் கொடுமையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அதற்காக ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகளும், யானை உள்ளிட்ட வனவிலங்குகளும் பயன்பெறும் வகையில் தொட்டி கட்டி நீர் வைப்பது நல்லது. பறவைகளுக்காக வாட்ஸ்அப் போடுவதோடு நிறுத்திவிடாமல் சிறிய கிண்ணங்களில் மொட்டை மாடிகளில் நீர் வைப்பது நல்லது.

அவ்வளவு கொடுமையா, இந்த வெயில் என்றால் ஆம் என்பதே இதற்கு உண்மையான பதிலாக இருக்க முடியும். அந்த அளவுக்கு வெயில் கொடுமையான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.

அதுவும் இதுவரை பதிவான வெப்பநிலையில்களில் இந்த ஆண்டு உச்சகட்டமாக பதிவாகியுள்ளது. இனிவரும் ஆண்டுகளில் இந்த வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே போகும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.  குறிப்பாக சுற்றுச் சூழலியலாளர்கள் பலர் எச்சரிக்கைகளை விடுகிறார்கள்.

இந்த அளவு வெயிலின் கொடுமை அதிகரித்து இருப்பதற்கு காரணம் நமது சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் பருவநிலை மாற்றத்தையும் காரணமாக கூறுகிறார்கள். அதிலும் பூமியின் பசுமைப் பரப்பு குறைந்தது, பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவற்றை குறிப்பிடுகிறார்கள். இதற்கெல்லாம் காரணமாக நவீன வளர்ச்சி, நுகர்வோர் கலாச்சாரம் ஆகியவற்றை குறிப்பிட்டாலும் இனி நாம் இதிலிருந்து பின்னோக்கி செல்ல வழியில்லை. அந்த வகையில் முன்னோக்கிச் செல்வதற்கு இனி என்ன செய்ய வேண்டும்,  இந்த உலகத்தையும் பாதுகாத்துக் கொண்டு, நம்மையும் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு வெயில் அதிகரித்துக்கொண்டே போவது, வெப்பநிலை அதிகரிப்பது என்பது பூமிக்கு நல்லதல்ல. குடிநீர் மற்றும் மற்ற பயன்பாட்டுக்கான நீர்வளம் குறைந்து விடும். பனிமலைகள் விரைவில் உருகி வெள்ளம் ஏற்படும். அந்த வெள்ளத்தால் கடற்கரையோரங்களில் உள்ள மிகப் பெரிய நகரங்கள் கூட நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். பசுமைப் பரப்பு குறைவதால் வனத்தின் வளங்கள் பாதிக்கப்படும். வெப்பநிலை அதிகரிப்பதால் வேளாண்மைக்கு தேவைப்படும் நீரின் தேவை அதிகரிக்கும். மனிதர்கள், கால்நடைகள், பறவைகள் என  அனைத்து உயிரினங்களின் உடல் நலமும் பாதிக்கப்படும்.

இவற்றில் இருந்து மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று உடனடியாக சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது. பெட்ரோலிய எரிபொருட்கள் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் அறிமுகம் என்பது ஒரு நல்ல திருப்பம்.

அதைப்போலவே பூமியில் இருந்து நிலக்கரி தோண்டி எடுத்து அதன் மூலம் மின்சாரம் தயாரிப்பதை விட இயற்கையின் கொடையான காற்றாலை, சூரிய ஒளி மின்சாரம் ஆகியவற்றை பயன்படுத்துவது மிகவும் நல்லது. கூடவே மரம் நடும் விழாக்களை நடத்துவதை நிறுத்திவிட்டு மரம் வளர்ப்பதற்கான உண்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு பசுமை பரப்பை விரைவில் அதிகரிக்க வேண்டும்.

நமது ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் தொடர்பு உண்டு என்று புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது இந்த வெயில் இதமான வெயில் ஆக மாறிவிடும். இந்த பூமியும் காப்பாற்றப்படும். மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என்று அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழும் சூழ்நிலை அப்போதுதான் உருவாகும்.