நேரு ஆர்க்கிடெக்சர்ஸ் கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா

கோவை குனியமுத்தூரில் உள்ள நேரு குழும நிறுவனத்தின் ஆர்க்கிடெக்சர்ஸ் கல்வி நிறுவனத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை நேரு குழுமங்களின் தலைமை செயல் அலுவலர் மற்றும் செயலாளர் கிருஷ்ணக்குமார் துவக்கி வைத்தார். கல்லூரியின் ஆண்டறிக்கையை என்.எஸ்.ஏ இயக்குனர் அமுதா வாசித்தார்.

தமிழ்நாடு மாநில திட்ட கமிஷன் உறுப்பினர் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் முதலாவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், “பட்டம் பெற்று செல்லும் மாணவர்கள், தங்களது படிப்பிற்கான அறிவுசார் மதிப்புகளை பெற்று செல்கிறீர்கள். நீங்கள் கற்ற கல்வியை, உரிய இடத்தில் பயன்படுத்தாவிட்டால் அது வீணாகி விடும். அனுபவத்தில் அதை உணர்ந்து, புதுமை படைக்க பயன்படுத்திட வேண்டும். ஏற்கனவே அறிந்துள்ளவற்றைக் கொண்டு வாழ்க்கையில் வெகுதூரம் செல்லப்போவதில்லை. ஆனால், இங்கு கற்றதோடு, எவ்வளவு கற்க உள்ளீர்களோ அதைக் கொண்டு தான், நீண்ட தூரம் பயணிக்க முடியும்,” என்றார்.

டிட்ராய்டீ ஆர்க்கிடெக்ட் மற்றும் ஆராய்ச்சி முதல்வர் பேராசிரியர் பாலகிருஷ்ணன் விழாவில் கவுரவ விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார். மாணவர்களின் வேலை வாய்ப்பு குறித்து அவர் பேசுகையில், “ஒரு மருத்துவரின் தவறு, புதைக்கப்பட்டு விடும்; ஆனால், ஒரு ஆர்க்கிடெக் செய்யும் தவறு வெட்ட வெளிச்சமாகிவிடும். புதுமையான வடிவமைப்பையும், துல்லியமாக செய்ய வேண்டும். சொந்தமாக சிந்தித்து புதிய வடிவமைப்புகளை உருவாக்க வேண்டும்,” என்றார்.

தலைமை விருந்தினர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.