இலங்கைக்கு உதவி: தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானம்

இலங்கைக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை அனுப்பி வைக்க அனுமதி கோரி முதல் அமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு தமிழ்நாடு அரசு அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு முதலிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க தயாராக உள்ளது.

இதற்கு மத்திய அரசு தேவையான அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. எனினும் இதுகுறித்து மத்திய அரசிடம் இருந்து எவ்விதமான தெளிவான பதிலும் இதுவரை பெறப்படவில்லை.

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளை செய்து உரிய அனுமதி வழங்க வேண்டும் என சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

இலங்கை மக்களுக்கு உதவிட அனுமதி கோரும் தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.