மாநில கல்விக் கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு – அமைச்சர் அன்பில் மகேஷ்

மாநில கல்விக்கொள்கை தான் தமிழக அரசின் நிலைப்பாடு எனவும், அதை முனைப்புடன் செயல்படுத்துவோம் எனவும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு பி.எஸ்.ஜி கல்லூரியில் கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரான பாஜகவின் மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன், புதிய கல்வி கொள்கையினை திறந்த மனதுடன் மாநில அரசு அணுக வேண்டும் என வலியுறுத்தினார். செயல் வழி கற்றல் முறை இருந்தாலும் அதை மேம்படுத்த புதிய கல்வி கொள்கை உதவும். புதிய கல்வி கொள்கையில் எத்தனையோ நல்ல விசயங்கள் இருக்கின்றன. கொள்கைகள் தாண்டி அதில் இருக்கும் நல்ல விசயங்கள் நமது மாநிலத்திற்கும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், சமீபகாலமாக சில பள்ளிகளில் நடைபெறும் சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும் இதனை தவிர்க்க, மாணவர்களுக்கு சைக்காலஜி மற்றும் வாழ்வியல் கல்வி கொடுக்க முயன்று வருகிறோம் எனவும் குறிப்பிட்டார்.

மாவட்ட மற்றும் தலைமை கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் தொடர் ஆய்வில் ஈடுபட வேண்டும். இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். குழந்தைகளை அடிக்க வேண்டாம். ஆனால் கண்டிப்பு காட்ட வேண்டும். இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக விழிப்புணர்வு மட்டும் போதாது செயல் வேண்டும் என தெரிவித்தார்.

தேர்வு காலம் துவங்கிவிட்ட நிலையில் தேர்வெழுத வரும் மாணவர்களுக்கு சிறு தயக்கம் இருக்கும் என்பதால் அதனை தீர்க்க ஆசிரியர்கள் முயல வேண்டும். நூலகத்தை அதிகம் பயன்படுத்த மாணவர்களை பழக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு திட்டங்களை தீட்ட வேண்டும் என குறிப்பிட்டார்.

தமிழகத்தில் சுமார் 7 ஆயிரம் ஸ்மார்ட் கிளாஸ்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க சில பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. அதற்காக பள்ளிகளை திறக்காமல் இருக்க கூடாது. தற்காலிக கட்டிடங்களை வாடகைக்கு எடுத்தாவது பள்ளி வகுப்புகளை நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

சுமார் 6 லட்சம் குழந்தைகள் அரசுப்பள்ளிகளை நம்பி வந்துள்ளதாகவும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் அடிப்படை கல்வியை அறிந்திருக்கிறார்களா என்பதை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களாக இருந்தாலும் தங்கள் பகுதிக்கு கல்வித்துறைக்கு தேவையான வசதிகள் குறித்து மனுக்கள் அளித்து, அவ்வசதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மண்டல அளவில் களநிலவரம் குறித்தும் கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது எனவும், ஒவ்வொரு மண்டலத்திலும் அங்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சொல்லும் கருத்துகளை ஆய்வுக்கு உட்படுத்துகிறோம் என தெரிவித்தார்.

இது போன்ற ஆலோசனைகள், துறைக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என தெரிவித்த அவர், 11 மாதத்தில் பல திட்டங்களை தமிழக முதலமைச்சர் அறிவித்து இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 12,300 பள்ளி கட்டிடங்கள் பாழடைத்து இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதில் கவனம் செலுத்தி வருகின்றோம்.

இரு வருடங்ளாக மாணவர்களுக்கு கற்றல் இல்லாமல் போனதால், அவர்களின் செயல்பாடுகள் மாறுகின்றது. மாணவர்களிடம் நிறைய தவறுகள் வராமல் தடுத்து இருக்கின்றோம், இனி மேல் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்ற உணர்வும் இருக்கின்றது.

மாணவர்கள் வரம்பு மீறும் போது அதை கண்டித்தால் தான் பிற மாணவர்கள் அதை செய்ய மாட்டார்கள். சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

புதிய கல்வி கொள்கை என்பது எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் கருத்து எனவும், தமிழக அரசை பொறுத்த வரை மாநில கல்வி கொள்கைதான் நிலைப்பாடு எனவும், இதை செயல்படுத்துவதில் எங்கள் முனைப்பை காட்டுவோம்.

கொரோனா பரவல் குறித்து முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வரும் முடிவுகளுக்கு பள்ளி கல்வித்துறை கட்டுப்படுவோம். இரு மொழி கொள்கைதான் எங்கள் நிலைப்பாடு. ஆங்கில லேப் அமைக்க 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அரசியல் பார்க்க கூடாத துறை, அதிமுக கொண்டு வந்தது என்பதற்காக கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது என கூறினார்.

பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தைரியமாக மகிழ்ச்சியாக தேர்வு எழுத வேண்டும் என தெரிவித்தார்.