மீண்டும் கொரோனாவா ?

கோவிட் 19 எனும் பெரும் தொற்று சீனாவில் மீண்டும் ஒரு அலையாக வீசத் தொடங்கியிருக்கிறது. இரும்புத்திரை நாடான சீனாவில் சில நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, ஷாங்காய் போன்ற நகரங்களில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

முதல் அலையிலேயே மற்ற நாடுகள் குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவை இந்த கொரோனா வைரஸால் பெரும் பாதிப்புகளை சந்தித்தன.  லட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து பொருளாதாரமும் பெரும் பாதிப்பை அடைந்தது.

இந்தியாவும் இந்த கொரோனா வைரஸால் கடுமையாக பாதிப்பு அடைந்தது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் ஆபத்துகள் அதிகரித்தன. ஆக்சிஜன் தட்டுப்பாடு உட்பட பல சிக்கல்கள் ஏற்பட்டன. தடுப்பூசி வருவதற்கு தாமதமாகியது. பல மாதங்கள் நாடே செயலற்றுப் போனது.

பொருளாதார பாதிப்பால் பல ஆயிரம் பேர் வேலை இழந்தனர். ஒருவழியாக சமாளித்து கரையேறிய போது மூன்றாம் அலை வந்து பயம் காட்டியது. என்றாலும் இரண்டு அலைகளை எதிர்கொண்ட அனுபவத்தில் இந்தியா அசாத்திய துணிச்சலோடு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் துணையோடு இந்த பெருந்தொற்றை சமாளித்தது.

இந்த நிலையில் தான்  நான்காம் அலை வரும் என்ற செய்தி வந்திருக்கிறது. இது எங்கோ சீனாவில் மட்டுமல்ல, நம்முடைய தலைநகர் டில்லியையும் கடுமையாக பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

மொத்தமாகப் பார்த்தால் ஆங்காங்கே சில இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருந்தாலும் மரணங்கள் வெகுவாக குறையத் தொடங்கி உள்ளன. இந்நிலையில் தான் மீண்டும் இங்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

தமிழ்நாட்டில் இன்னும் முதல் டோஸ் போடாதவர்கள் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் உள்ளதாகவும், இரண்டாவது டோஸ் போடாதவர்கள் இன்னும் கூடுதலாக உள்ளதாகவும் அரசின் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன. இந்த நிலையில் மீண்டும் கொரோனா வந்தால் நிலைமை என்னாகும் என்ற கேள்வி எழுகிறது. இரண்டு ஆண்டுகள் செயலற்றுப் போய் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் இப்போதுதான் மெல்ல எழுந்து நடமாட தொடங்கியுள்ளனர்.

தொழில், விவசாயம் இன்னும் முழுமையான பழைய நிலைக்கு திரும்பவில்லை. மூடியிருந்த பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து கல்வி கற்பிப்பது தொடங்கியுள்ளது. மறுபடியும் ஒருமுறை கொரோனா வைரஸ், மரணம், ஆக்சிஜன், ஊரடங்கு என்றால் ஊர் தாங்காது, மக்களும் தாங்க மாட்டார்கள்.

இந்த பெருந்தொற்றை எதிர் கொள்ள என்ன செய்யலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை கூறுகிறார்களோ அதனை உடனடியாக கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் 18 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கான தடுப்பூசி போடுவது இன்னும் விரைவுபடுத்தப்பட  வேண்டும். அடுத்து அரசு பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளடக்கிய சுகாதாரப் பணியாளர்கள், அதிகாரிகள் ஆகிய முன் களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணி நிறைவுபடுத்தப்பட வேண்டும். ஓரளவு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றாலும் எந்த சூழலையும் எதிர்கொள்ளும் அளவு நமது உட்கட்டமைப்பு உள்ளிட்ட மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

வருமுன் காப்பது போல இப்பொழுது நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். தற்போது டில்லியில், கேரளாவில் உள்ள கொரோனா வைரஸ் தமிழகத்துக்கு வருவதற்கு வெகுநாட்களாகாது.  எனவே நமது எல்லைகளில் சோதனை, நோய் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை தொடங்கலாம்.

அதைப்போலவே  பொது மக்களிடமும் கொரோனா வைரஸ் குறித்த ஒரு அலட்சியம் காணப் படுகிறது. தற்போது முகக் கவசங்கள் எல்லாம் மூலைக்கு போய்விட்டன.

கூட்டங்கள், திருமணங்கள், கோயில் திருவிழாக்கள் இவற்றில் சமூக இடைவெளி என்பது பெயர் அளவுக்குக்கூட காணப்படுவதில்லை. இவற்றை இனி மெல்ல கடைபிடிக்கவேண்டும்.  தேவையற்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் இந்த கோவிட் 19 பரவுகின்ற வேகமும் திசையும் தெரிந்து விடும். அது வரை காத்திராமல்  முன்கூட்டியே இதனை அணுகுவதே நல்லது.

கடந்த மூன்று அலைகளிலும் மேற்கத்திய நாடுகளை விட நம் நாடு பெரும் நஷ்டத்தை சந்திக்கவில்லை. அந்த வகையில் வருகின்ற நான்காம் அலையை எதிர்கொண்டு நம்மை நாம் காப்பாற்றுவதோடு, நமது பொருளாதாரத்தையும் காக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதைச் செய்து முடிப்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. பொதுமக்களும் அரசாங்கமும் இணைந்து செயல்பட வேண்டிய முக்கியமான நேரம் மீண்டும் ஒருமுறை வந்திருக்கிறது. இதனை எதிர்கொண்டு மீண்டெழுவோம்!