தைரியமான இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும் – நீதிபதி ஜியாவுதீன்

சமூகத்துக்கு எதிராக அநீதி நடக்கும் போது, அதை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் உள்ள இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும் என மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் மகளிருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாதனை புரிந்த மகளிருக்கு விருது வழங்கும் விழா கோவை கேரளா கிளப்பில் ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் (ஓய்வு) கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில்: பெண்களுக்கான பாதுகாப்பான சட்டங்கள் எதுவும் இந்திய சுதந்திரத்துக்கு முன் இல்லை எனவும், இந்திய விடுதலைக்குப்பின் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு தான் பெண்களுக்கான சட்டமும் உரிமையும் உருவாக்கப்பட்டது என கூறினார்.

இதைப் பற்றிய போதிய விழிப்புணர்வு பெண்களிடம் இல்லை. இதனால் தைரியமும் தன்னம்பிக்கையும் இல்லாமல் கஷ்டங்களை அனுபவிப்பதோடு சிலர் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.

மாணவர்களின் கல்வி முறை பற்றி அவர் கூறுகையில், நமது கல்வி முறையும் பாடத்திட்டங்களும் மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் இல்லை என தெரிவித்த அவர், அதனால்தான் படித்தவர்கள் செய்யும் குற்றங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், நம் குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி பிற நூல்களையும் வாசிக்க ஊக்கப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், சமூக வரலாறும் பொது அறிவும் அறியாத குழந்தைகளால் அவர்களுக்கும், தேசத்துக்கும் பயனில்லை என்றார்.

சமூகத்துக்கு எதிராக அநீதி நடக்கும் போது, அதை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் உள்ள இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் கழகத்தின் தலைவர் குமார், அகில இந்திய செயலாளர் சுப்பிரமணியம், முன்னாள் காவல் உதவி ஆணையர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.