உக்ரைனிய வீரர்கள் 3,000 பேர் உயிரிழப்பு – அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில், உக்ரைனிய வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரானது 50 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவுடனான இந்த போரில் உக்ரைனிய படையை சேர்ந்த ராணுவ வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். 10 ஆயிரம் பேர் வரை காயமடைந்து உள்ளனர் என உக்ரைனிய அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்து உள்ளார்.

இந்த போரில் எத்தனை பேர் உயிர் பிழைத்திடுவார்கள் என்று கூறுவது கடினம் என்றும் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.

ரஷியாவின் போர் கப்பல் ஒன்று கருங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட பின்னர், கீவ் நகரின் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும் என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது. இந்நிலையில், உக்ரைனியர்கள் பலர் கொல்லப்பட்டது வெளியே தெரிய வந்துள்ளது.

உக்ரைனில் தொடர்ந்து போர் நீடித்து வருவதுடன் பொதுமக்கள் மற்றும் வீரர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை இருதரப்பிலும் அதிகரிக்க கூடிய சூழல் காணப்படுகிறது.