புது குடுவையில் பழைய சரக்கு?

வீரராகவன் (விஜய்) ரா எனும் உளவுத்துறையில் சீனியர் அதிகாரியாக உள்ளார். தீவிரவாதிகளின் முக்கிய நபரை பிடிக்கும் மிஷனில் ஓர் எதிர்பாராத விபத்தால் வீரராகவன் மனதளவில் காயப்பட்டு அந்த ரா அமைப்பை விட்டு விலகி உள்ளார்.

சில மாதங்கள் கழித்து தனது காதலி ப்ரீத்தியுடன் (பூஜா ஹெக்டெ) மாலுக்கு சென்ற போது மாலை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

மாலில் வீரராகவன் இருப்பதை அறிந்த அரசு அதிகாரி அல்தாப் ஹுசைன் (செல்வராகவன்) மக்களை மீட்குமாறு அவரை கேட்கிறார். அதில் வீரராகவன் என்ன செய்கிறார், எவ்வாறு தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவார் என்பதே படத்தின் கதை.

மாஸ் ஆன ஹீரோ என்றாலே லாஜிக் இல்லாத சண்டை காட்சிகள் வைப்பது சகஜம், ஆனால் அந்த சண்டை காட்சிகளை நம்பும்படி காட்சிப்படுத்தி காட்டுவது இயக்குனர்களின் வேலை. அதை தவறவிட்டார் நெல்சன்!

மாஸான ஹீரோவுக்கு மொக்கையான திரைக்கதையை அமைத்திருக்கிறார். விஜய்க்காகவே தீவிரவாதிகள் துப்பாக்கிகள் இல்லாமல் கத்தியுடன் வந்து சண்டையிடுவதும், ஒரே கத்தியை வைத்துக்கொண்டு தீவிரவாதிகளின் துப்பாக்கிளுக்கு டஃப் கொடுப்பதும், மாலுக்குள் கார் ஓட்டுவதும், இரண்டு இரும்புக் கதவில் ஒளிந்துகொண்டு எல்லா தீவிரவாதிகளையும் சுட்டுத் தள்ளுவது போன்ற காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன.

படத்தில் வீரராகவன் என்ற கதாபாத்திரத்தை காட்டாமல் விஜயை காட்டியதே படத்தின் முதல் மைனஸ். “ஒரு தடவ முடிவு பண்ணிட்டேன்னா ஏன் பேச்ச நானே கேட்கமாட்டேன்” போன்ற வசனங்களை ஒரு ரா அதிகாரி ஃபைட்டர் ஜெட்டில் அமர்ந்து பேசுவது சற்று காமெடியாகவே உள்ளது. படத்தின் இன்னொரு பெரிய மைனஸ் வில்லனை டம்மியாக காட்டி திரைக்கதையின் கனத்தை குறைத்தது. ப்ரீத்தியாக வரும் பூஜா ஹெக்டெவின் பெரிய வேலையே வீரராகவனை காதலிப்பதுதான் வேறு ஏதும் பெரிய ரோல் இல்லை. கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பூஜா. படத்தில் நகைச்சுவைக்கு சேர்க்கப்பட்ட கதாபாத்திரம் ஏதும் பெரிதாக கைகொடுக்கவில்லை என்பதே உண்மை. நகைச்சுவை திணிக்கப்பட்டதாகவே உள்ளது.

செல்வராகவன் படத்தில் எதார்த்தமான வசனங்கள் பேசி அவரது பெஸ்ட்டை கொடுத்திருக்கிறார். படத்திற்கு அனிருத்தின் இசை சில இடத்தில் கைகொடுத்துள்ளது. படத்தின் முதல் பாதியை காதல், காமெடி, பேன் வேர்ல்ட் பாடலான அரபிக் குத்து வைத்து கொண்டு சென்றிருந்தாலும் இரண்டாம் பாதியில் கதையை நகர்த்த இயக்குனர் சிரமப்பட்டிருப்பதை உணரமுடிகிறது.

படத்தின் க்ளைமேக்சில் வீரராகவன் செய்யும் தெளிவில்லாத வேலைகளை, இயக்குனர் மழுப்பி இருக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது. தனது முன்னாள் படங்களின் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் தந்த முக்கியத்துவத்தை இந்த படத்தில் தரவில்லை இயக்குனர். விஜய் ஒருவரே படத்தை நகர்த்தி செல்கிறார். விஜய் மட்டுமல்ல விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து எடுக்கும் அனைத்து இயக்குனர்களும் இந்த தவறை செய்கிறார்கள்.

விஜய் தனது பழைய படங்களில் தந்த அதே மாஸ், பஞ்ச் வசனங்களை கொண்டே இப்படத்தில் நடித்துள்ளார். அவரது பாணியை மாற்றியோ, அவரது மாஸை குறைத்து, கதைக்கும் வில்லனுக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கவில்லை.

விஜய்யின் நடிப்பு புது குடுவையில் பழைய சரக்கு (Old wine in New Bottle) என்றே சொல்லலாம். மொத்தத்தில் பீஸ்ட் திரைப்படம் விஜயை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட படமாகும்.

Review By: Sathis Babu.Ponraj