ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்நுட்ப திருவிழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கணினி அறிவியல் துறை சார்பில் மாநில அளவிலான தொழில்நுட்ப திருவிழா (Ordusion 22) நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராகக் கோவை வருமான வரித்துறை இணை ஆணையர் ஸ்ரீ விஜய் கலந்து கொண்டு பேசியதாவது: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி நடத்தும் தொழில்நுட்ப திருவிழா என்னும் இந்நிகழ்வு தற்போதைய சூழலில் முக்கியமானது. பிளாக் செயின், கிரிப்டோ கரன்சி போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வினாடி வினா, மார்கெட்டிங், போஸ்டர் டிசைன், டிரஸ்சர் அன்ட், ஆய்வுக்கட்டுரை வழங்குதல் போன்ற பல நிகழ்வுகள் நடத்துவது பாராட்டுக்குரியது.

என்னுடைய கல்லூரி நாட்களில் இதுபோன்ற நிகழ்வுகளில் ஆர்வத்தோடு பங்கேற்ற மகிழ்ச்சியான தருணம் நினைவுக்கு வருகிறது. கோவையின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து பங்கேற்க வந்திருக்கும் மாணவர்களுக்குப் பாராட்டுக்கள்.

இத்தருணத்திலே ஆனந்த் மஹிந்திராவின் வரிகளை குறிப்பிட விரும்புகிறேன். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பின்னோக்கிப் பார்ப்பதில்லை. தங்களின் இருபுறமும் பார்ப்பதில்லை. அவர்கள் முன்னோக்கி மட்டுமே பார்க்கிறார்கள். ஆதலால் நம்முடைய பார்வை முன்னோக்கியதாக இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்வில் உயர்ந்த பதவிகளை எளிதில் பெற முடியும். இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த நல்வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன் என கூறினார்.

அதைத் தொடர்ந்து கணினி அறிவியல் துறையின் முதுநிலை மாணவர் சங்கத் தலைவர் மற்றும் செயலாளர், இளநிலை மாணவர் சங்கத் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், இணை செயலாளர் போன்ற பல்வேறு பொறுப்புகளுக்கு மாணவர்களை நியமித்து பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

மேலும், இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களில் பணிவாய்ப்பு பெற்றுள்ள கணினி அறிவியல் துறையில் பயிலும் மூன்றாமாண்டு மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மற்றும் இதனைச் சுற்றியுள்ள 50 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 500 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கணினி அறிவியல் துறைத்தலைவர் மரிய பிரிசில்லா, நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், நாகராஜன், பல்வேறு துறைகளைச் சார்ந்த துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.