துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம்: கே.பி.ஆர்.கல்லூரி மாணவர் சாதனை

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் மருத்துவ பிரிவான 6TN Med Coy-யை சார்ந்த மாணவர் அபினேஷ், துப்பாக்கி சுடுதல் போட்டியில் மண்டல அளவில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற மண்டல அளவிலான குழுக்களுக்கு இடையிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில், கோவை மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இருந்து சுமார் 150 மாணவர்கள் பங்குபெற்றனர்.

இதில் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் என்.சி.சி. மருத்துவ பிரிவின் மாணவர் அபினேஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் மாநில அளவில் நடைபெறும் என்.சி.சி. மாணவர்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார். இதில் வெற்றி பெற்ற பின் இறுதியில் தேசிய அளவில் நடைபெறும் அகில இந்திய ஜி.வி. மவ்லாங்கர் சாம்பியன்ஷிப் (All India GV Mavlankar Shooting Championship) எனும் போட்டியில் பங்கு பெற முடியும்.

இது பற்றி அபினேஷ் கூறுகையில், கல்லூரியின் என்.சி.சி. அளித்த தொடர் பயிற்சி, துப்பாக்கி சுடுதலில் உள்ள நுட்பங்கள் கற்றுக் கொடுத்து ஊக்கப்படுத்தியது இப்போட்டியில் வெற்றி பெற எனக்கு பெரிதும் உதவியது என்றார்.

வெற்றி பெற்ற மாணவனை கல்லூரியின் தலைவர் கே.பி.ராமசாமி, கல்லூரியின் முதல்வர் அகிலா ஆகியோர் பாராட்டினர்.

முதல்வர் அகிலா இது குறித்து கூறுகையில்: மாணவனின் கடின பயிற்சி, விடாமுயற்சி, உழைப்பு ஆகியவையே மாணவனின் வெற்றிக்கு உதவியது. கல்லூரியில் வழங்கப்படும் முறையான பயிற்சி மற்றும் மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்கள் ஊக்குவிப்பதன் மூலம், மேலும் அடுத்து அடுத்து நடைபெறும் பல்வேறு போட்டிகளில் அதிகப்படியான மாணவர்கள் பங்கு பெற்று வெற்றி பெற கல்லூரி பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்றார்.