மின்சாரத்தை மிச்சப்படுத்த இலங்கையில் தெருவிளக்குகள் அணைப்பு

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள 22 மில்லியன் மக்கள் தினமும் 13 மணிநேரம் மின்வெட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதற்காக இலங்கையில் தெருவிளக்குகள் இரவில் அணைக்கப்படுவதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இலங்கை மின்சாரத்துறை அமைச்சர், பவித்ரா வன்னியராச்சி செய்தியாளர்களிடம் பேசியதாவது: மின்சாரத்தை சேமித்து உதவுவதற்காக நாடு முழுவதும் உள்ள தெரு விளக்குகளை அணைக்குமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம்.

இந்தியாவிலிருந்து 500 மில்லியன் டாலர் கடன் மூலம் பெறப்படும் டீசல் இறக்குமதி சனிக்கிழமையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அதுவும் பிரச்சினையை முற்றிலும் தீர்க்காது என்றும் தெரிவித்துள்ளார்.

டீசல் வந்தவுடன் நிலைமை ஓரளவுக்கு சமாளிக்கமுடியும் என்றாலும், மழைக்காலம் வரையில் மே மாதத்தில் சில மணி நேரம் வரை மின்தடைகள் தொடரும் என கூறியுள்ளார்.

நீர்மின் திட்டங்கள் நடந்து வந்த நீர்த் தேக்கங்களில் தண்ணீர் இருப்பு வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளது எனவும், அதேசமயம், வறண்ட மற்றும் வெப்பகாலத்தின் தேவை மிகவும் உச்சமைடந்துள்ளதனால் இப்போதைக்கு எங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.