ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் கோவை மண்டல போக்குவரத்து அலுவலகம் ஆகியவை சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் வரவேற்றார்.

கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: விபத்து ஏற்படுவதற்கு சில காரணங்களை உதாரணமாகக் கூறலாம். இயந்திரக் கோளாறால் விபத்து ஏற்படும். இதனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் வாகனங்களைப் பழுதுபார்த்துக் கொள்ளுதல் அவசியம். பெரும்பாலான விபத்துகள் கவனக்குறைவால்தான் ஏற்படுகின்றன. சாலை விதிகளைப் பின்பற்றாமல் இருப்பது இதற்கு முக்கியக் காரணம்.

மற்ற வாகன ஓட்டிகள் ஹார்ன் ஒலிப்பதைக் கவனிக்க வேண்டும். இன்டிகேட்டரைக் கவனிக்க வேண்டும். சாலைகளில் வரையப்பட்டுள்ள கோடுகளைக் கவனிக்க வேண்டும். சிக்னலை கவனித்து வாகனத்தை இயக்க வேண்டும். இதை தவிர்த்து மனதில் ஏதேதோ கற்பனைகளுடனும், திட்டமிடலுடனும் வாகனத்தை இயக்கினால் விபத்து ஏற்படும்.

இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். கார்களில் பயணிக்கும் போது அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும். இறுதியாக தற்காப்பாக வாகனம் ஓட்டும் முறையொன்று உள்ளது. ஒன்று இடதுபுறமாகமோ அல்லது வலது புறமாகவோ குறிப்பிட்ட வேகத்தில் வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படாது. எனவே அனைவரும் சாலை விதிகளை மதித்து, விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்ப்போம் எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் நாகராஜன், சுபாஷினி, தீபக்குமார், செஞ்சுருள் சங்க அலுவலர் கீர்த்திவாசன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.