அறிகுறியின்றி தாக்கும் குளுக்கோமா நோய், விழிப்புணர்வு அவசியம்! – தி ஐ பவுண்டஷன்

உலக குளுக்கோமா விழிப்புணர்வு வாரம் மார்ச் 6 முதல் 12 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
இந்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கோவையில் செயல்பட்டு வரும் தி ஐ பவுண்டஷன் சார்பில் ஆண்டும்தோறும் மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கண்ணின் நீர் அழுத்தம் அதிகமாவதால், அது பார்வை நரம்பை பாதித்துக் கண் பார்வை இழப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் எந்தவித முன்அறிகுறிகள் தென்படாமல் பார்வை இழப்பு ஏற்படும். கண்ணின் நீர் அழுத்த நோயே குளுக்கோமா எனப்படுகிறது. உலகில் 64.3 மில்லியன் மக்களுக்கு குளுக்கோமா பாதிப்பு உள்ளதோடு, 4.5 மில்லியன் மக்கள் கண் பார்வையை இழந்துள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலக குளுக்கோமா விழிப்புணர்வு வாரம் வருவதையொட்டி, ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் அமைந்துள்ள தி ஐ பவுண்டஷன் மருத்துவமனையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது மருத்துவமனையின் தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், இந்தியாவில் 3 – 5% மக்கள் குளுக்கோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்தவித முன் அறிகுறியும் இன்றி பார்வை இழப்பு ஏற்படுகிறது. மேலும், எந்த வயதினருக்கும் இந்நோய் ஏற்படுவதோடு, பிறந்த குழந்தைகளுக்கு கூட இதன் பாதிப்பு ஏற்படலாம். சிறிது சிறிதாக பக்கவாட்டு பார்வையை இழந்து இறுதியில் முழு பார்வையையும் இழக்க நேரிடுகிறது. அவ்வாறு இழந்த பார்வையை மீண்டும் கொண்டு வர முடியாது. 40 வயதிற்கு மேலானவர்கள், வழக்கமான கண்பரிசோதனையுடன், குளுக்கோமா பரிசோதனையும் செய்து கொள்வது அவசியம். விழிப்புணர்வு, உரிய நேரத்தில் சிகிச்சை, தொடர் கவனிப்பு மூலம் இந்தப் பாதிப்பைத் தடுக்கலாம்.

உலக குளுக்கோமா விழிப்புணர்வு வாரமான மார்ச் 6 முதல் 12 ஆம் தேதி வரை முழுமையான கண்பரிசோதனை செய்து, குளுக்கோமாவை ஆரம்ப நிலையில் கண்டறியும், இலவச கண் அழுத்த நோய் பரிசோதனையை எங்கள் மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் வழங்கவுள்ளோம். நோய் கண்டறியப்படும் நபர்களுக்கு பரிசோதனை, சிகிச்சை, அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் செய்து தரப்படும் என்றார்.

குளுக்கோமா மருத்துவ நிபுணர் முரளிதர் கூறுகையில், இந்நோய் குறிப்பிட வயதினரை மட்டுமல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. ஆரம்ப நிலையில் இந்த நோயை கண்டறிவது கடினம் என்றாலும், முறையான கண் பரிசோதனையின் மூலம் அடையாளம் கண்டுவிட முடியும். குளுக்கோமாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் நோயின் இறுதி நிலையிலேயே மருத்துவமனைக்கு வருகின்றனர்.

40 வயதுக்கு மேல் சர்க்கரை நோய், உயர் கிட்டப்பார்வை, காயம், வீக்கம், ஸ்டீராய்டு உபயோகித்தல் மற்றும் பிறவி கண் குறைப்பாடு உள்ளவர்களுக்கு குளுக்கோமா ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. கண்ணின் நீர் அழுத்தம் மற்றும் நரம்பு பரிசோதனைகள் செய்வதன் மூலம் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும். நோய் பாதிப்படைந்தவர்கள் உரிய சிகிச்சை மேற்கொள்ளவில்லை எனில் கண் பார்வை இழப்பு ஏற்படும். இடைவெளி இல்லாமல் இதற்கான சிகிச்சையை மேற்கொள்வதும் அவசியம் என கூறினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது குளுக்கோமா மருத்துவ நிபுணர் வைஷ்ணவி உடனிருந்தார்.