விளையாட்டும் வேண்டும்!

நம் தமிழ்நாட்டில் சமீபத்தில் தான் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. பார்க்கவே பரவசமாய்,  சில நேரத்தில் பதற்றமாய் இருக்கும் இந்த வீர விளையாட்டு தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கின்ற ஒரு விளையாட்டாகும்.

ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கை உள்ள இளைஞர்களின் குறிப்பாக கிராமப்புற மக்களின் விளையாட்டு இது என்று கூற வேண்டும். இது போக ஆங்காங்கே கபடி, வாலிபால் ஆடும் கிராமப்புற இளைஞர்களும் உண்டு. இதுவல்லாமல் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அளவில் விளையாடுவோர் தவிர வேறு  இளைஞர்கள் யாருக்கும் இயல்பான உடற்பயிற்சி இருப்பதாக தெரியவில்லை.

ஒரு காலத்தில் பள்ளிக்கு செல்வது விளையாடுவதற்காக தான் என்ற நிலைமை கூட இருந்தது. ஆனால் இன்று படிப்பு படிப்பு என்று படிப்பே எல்லாம் என்றாகி விட்டது. ஏட்டுக்கல்வி தான் எல்லாம் என்று ஆகிவிட்டது. விளையாட்டு இளைஞர்களின் வாழ்க்கையில் இருந்து விடைபெற்று விட்டது போலவே தோன்றுகிறது.

உண்மையில்  உடல் நலமும், மன நலமும் பெற்று மக்கள் வாழ்வதற்கு விளையாட்டு என்பது ஒரு முக்கியமான துணையாகும். இன்று ஒருவர் தனது கால்களால் நடந்து போவது ஒரு பெரிய உடற்பயிற்சி என்பது போல நிலைமை மாறிவிட்டது. சைக்கிள் சாலைகளில் இருந்து காணாமல் போய்விட்டது. திரும்பிய பக்கமெல்லாம் டூவீலர்களில் இளைஞர்கள் பறக்கிறார்கள். கார்கள் கூடவே போட்டியிடுகின்றன. இதில் உடலுக்கு பயிற்சியே இல்லை. இது குறித்து உடனடியாக சமூகமும், அரசும் சிந்திக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களிடம் விளையாட்டு ஆர்வம் உடல் நலனுக்காக உருவாக்கப்பட வேண்டும். இல்லை என்றால் கோடிக்கணக்கான ரூபாய்களை சுகாதாரத்திற்காக மட்டுமே இந்தியாவின் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட வேண்டியிருக்கும்.

முன்பெல்லாம் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் உடற்பயிற்சி சாலைகள் ஆங்காங்கே இருக்கும். படிக்கின்ற இளைஞர்கள் போக பணிக்கு சென்று வருபவர்கள் கூட மாலை நேரத்தில் இங்கு உடற்பயிற்சி செய்வதை காண முடியும். ஆனால் இப்போது அப்படி ஒரு நிலைமையே இல்லை. எங்கெங்கே பூங்காக்கள் இருக்கிறதோ, அதுபோல சில இடங்களிலும் கடற்கரை போன்ற இடங்களிலும் சிலர் நடந்து போவதையும், ஜாக்கிங் போவதையும் பார்க்க முடிகிறதே தவிர, மற்றபடி எங்கு பார்த்தாலும் வாகனங்களின் பவனி தான் ஊர்வலமாக தெரிகிறது.

பூமியின் சுற்றுச்சூழலை  பாதுகாக்க வேண்டிய தேவையில் இங்கே நாம் நகர்ப்புறங்களில் உள்ள நுகர்வோர் கலாச்சாரத்தையும்  மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். சுழற்சங்கங்கள் தங்கள் பணிகளில் ஒன்றாக இதையும் முன்னெடுத்து செய்ய வேண்டும். ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தி ஊக்குவிக்கலாம். விளையாட்டை ஒரு பண்பாடாக இங்கு மலர வைக்க வேண்டும். பள்ளி,  கல்லூரி மதிப்பெண் சான்றிதழில் இதற்கு தனி மதிப்பெண் அளிக்க வேண்டும். நமது வாழ்வை பிரதிபலிக்கின்ற நமது திரைப்படங்களில் கூட தற்பொழுது விளையாட்டுக்கு முக்கியத்துவத்தை காணமுடிய வில்லை. உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கிடைப்பதை காணமுடிவதில்லை. ஆனால் முன்பெல்லாம் அப்படி அல்ல. குறிப்பாக எம்ஜிஆர் காலத்து திரைப்படங்களில் பார்த்தால் உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல்வேறு வீர விளையாட்டுகள் இடம்பெறும். சண்டைக் காட்சிகளில் கூட அற்புதமான உடற்பயிற்சிகள்  மற்றும் உடற்பயிற்சி கருவிகளை கையாளுவதை காண முடியும். ஆனால் இப்போது அப்படி அல்ல எல்லாம் கணிணி என்றாகிவிட்டது. இல்லாவிட்டால் அனிமேஷனில் காட்டிவிடுகிறார்கள்.

இந்த பெருந்தொற்று வந்து உலக அளவில் மனித குலத்தின் உடல் நலனில் குறிப்பாக இளைஞர்களின் நலனை தோலுரித்துக் காட்டி விட்டது.  இதிலிருந்து மனிதகுலம் மீள்வதற்கு சத்தான உணவு, சரியான வாழ்க்கை முறை மட்டும் அல்லாது, நல்ல உடல் நலமும் மிக முக்கியம். அதற்கு எளிமையான இயல்பான ஒரு வழி விளையாட்டு ஆகும்.

உலகத்தின் மிகப்பெரிய இளைஞர் பட்டாளத்தை கொண்ட நம் நாட்டில்  தொப்பையும், கண்ணாடியும், ஓவர் வெயிட்டுமாக இளைஞர்கள் திரியாமல் உடற்பயிற்சி செய்து அதுவும் மாலை நேர விளையாட்டுகளில் ஈடுபட்டு உடல் நலனை காப்பது நாட்டைக் காப்பதற்கு சமமாகும்.