நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுகவை சமாளிக்குமா அதிமுக?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான திமுகவுக்கு, அதிமுக வலுவான போட்டியைக் கொடுக்குமா என்ற கேள்வி தமிழக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

தமிழகத்தில் எதிர்வரும் பிப் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதில் 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் திமுக அணி, அதிமுக அணி,  பாஜக, பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், தேமுதிக என 9 முனை போட்டி நிலவுகிறது. திமுக அணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக, கொமதேக, தவாகா போன்ற கட்சிகள் திமுக கொடுக்கும் இடங்களை அப்படியே பெற்றுக் கொண்டு கூட்டணியில் நீடிக்கின்றன.

அதேவேளையில் அதிமுக அணியில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக முரண்பட்டு தனித்து போட்டியிட்டது. இப்போது பாஜக இடப்பங்கீட்டில் திருப்தி இல்லாததால் அதிமுக கூட்டணியை முறித்துவிட்டது. கடைசி நிமிடம் வரை பேச்சுவார்த்தை நடத்தி, இடப்பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத சூழலில் தனித்து போட்டியிடுவதாகவும் பாஜக அறிவித்துள்ளது. இருப்பினும், தேசிய அளவில்  தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுக தொடருவதாகவும் இரு கட்சிகளுமே அறிவித்துள்ளன.

அதிமுகவை பொறுத்தவரை இரண்டாம் கட்டத் தலைவர்களில் சிலருக்கு பாஜக கூட்டணியில் தொடருவதில் விருப்பம் இல்லாமல் தான் இருந்தது. குறிப்பாக வடமாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்ற எண்ணம் இருந்தது. இதற்கு காரணம், அப்பகுதியில் பாஜகவுக்கு வாக்கு வலிமை இல்லை. அதேவேளையில் பாஜக கூட்டணியில் இருப்பதால் கிறிஸ்தவ, இஸ்லாமிய வாக்குகள் திமுக அணிக்கு குவிந்தது தான் தங்களது தோல்விக்கு காரணம் என வடமாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் (விழுப்புரம்), ஜெயக்குமார் (ராயபுரம்),  சம்பத் (கடலூர்), கே.சி.வீரமணி (ஜோலார்பேட்டை), அருண்மொழித் தேவன் (பெரம்பலூர்) ஆகியோருக்கு உள்ளது.

அதேநேரத்தில், தெற்கு, மேற்கு மாவட்டங்களிலும் உள்ள அதிமுக தலைவர்கள் பாஜக கூட்டணியை விரும்புகின்றனர். குறிப்பாக கொங்கு மண்டல மாவட்டச் செயலர்கள் பாஜக கூட்டணியை விரும்புகின்றனர். இந்த மண்டலத்தில் பாஜகவின் வாக்கு வலிமையுடன் இருப்பதாலும், மதவழி சிறுபான்மை வாக்குகள் குறைவாக இருப்பதுவும் தான் இதற்கு காரணம். அதேபோல, தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலர்களும், பாஜகவால் தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள் தங்களுக்கு பரிமாற்றம் ஆனதால் பாஜக கூட்டணியை எதிர்க்கவில்லை.

மேலும், எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை மத்தியில் பாஜக அதிகாரத்தில் இருப்பதாலும்,  அதேவேளை எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த இந்து நாடார், இந்து தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர் சமூகங்கள் 2021 பேரவைத் தேர்தலில், தனது தலைமைக்கு இச்சமூக வாக்குகள் கணிசமாக கிடைத்ததற்கு பாஜக கூட்டணி தான் காரணம் என எண்ணுகிறார். இதை மனதில் வைத்தே எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் நீடிப்பதில் தவறு ஏதும் இல்லை என்று கணக்குப் போடுகிறார்.  ஓ.பன்னீர் செல்வமும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாகவே இருக்கிறார்.  எனவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இக்கூட்டணி உடைந்தாலும் மீண்டும் மக்களவைத் தேர்தலில் நட்பு உருவாகும்.

இருப்பினும், இந்தக் கூட்டணி முறிவு காரணமாக கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு வலுவான போட்டியை அதிமுக கொடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக வெளியேறியதால் கொங்கு மண்டலத்தில் திமுக எளிதாக வெற்றிபெறும் சூழல் உருவாகியுள்ளது.  பாஜகவைப் பொறுத்தவரை கோவை, திருப்பூர்,  சேலம், ஒசூர் மாநகராட்சிகளில் கணிசமான வாக்குளை பிரிக்கக்கூடும் என்பதால் இவற்றில் திமுக எளிதான வெற்றியைப் பெறும்.

இப்போது கூட்டணி இல்லாத சூழலில் 5 முதல் 10 சதவீத வாக்குகளை இந்த மாநகராட்சிகளில் பாஜக  எடுக்கக் கூடும் என்பதால் அதுவே அதிமுகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அதேவேளையில் நாகர்கோவில் மாநகராட்சியில் பாஜக இல்லாமல் அதிமுக போட்டியிட்டால் அதிமுக மூன்றாவது இடத்துக்கு போகக்கூடிய சூழல் உருவாகும். காரணம்,  2011 இல் அப்பகுதி நகராட்சியாக இருந்தபோது நேரடி தேர்தலில் அங்கு பாஜக தனித்து வெற்றி பெற்றிருந்தது.

திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் திமுக கொடுக்கும் அனைத்து இடங்களும் சீட்டுகள் அல்ல, கவுன்சிலர் பதவிகள் என எண்ணி அவற்றை கூட்டணி கட்சிகள் பெற்றுக் கொண்டன. இதனால், சொற்பமான இடங்களை திமுக கொடுத்தாலும் கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

அதிமுகவைப் பொறுத்தவரை கொங்கு மண்டலத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி இருக்கும்.  பிற இடங்களில் போட்டி இருக்குமா என்பது சந்தேகமே.   பாஜகவை பொறுத்தவரை மாநகராட்சி, நகராட்சி தாண்டி, பேரூராட்சிகளில் அனைத்து இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவது சிரமம். 12000 பதவிகளில் எத்தனை பதவிகளில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திமுக மற்றும் காங்கிரஸ்:  திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் திமுக கொடுக்கும் அனைத்து இடங்களும் சீட்டுகள் அல்ல,  கவுன்சிலர் பதவிகள் என எண்ணி அவற்றை கூட்டணி கட்சிகள் பெற்றுக் கொண்டன.  இதனால், சொற்பமான இடங்களை திமுக கொடுத்தாலும் கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளன.  குறிப்பாக கரூரில் ஜோதிமணி தனது கட்சியின் சக்திக்கு மீறிய பேரத்தை நடத்தியதால், திமுக ஜோதிமணியை வெளியேறச்சொல்லும் சூழல் உருவானது. விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை 234 தொகுதிகளுக்கு 6 பேரவைத் தொகுதி கொடுத்தது போல அதே விகிதத்தில் இப்போதும் இடப்பங்கீடு செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் வெற்றி பெற்றுத் தருவதாக ஆளும் கட்சி உறுதி அளித்துள்ளதால் அதையும் விசிக ஏற்றுக்கொண்டது. இடதுசாரிகள், மதிமுக, கொமுதேக போன்றவையும் ஆளும் கட்சி சொல்படியே நடந்துகொள்கின்றன.

நாம் தமிழர்: இந்த தேர்தலில் அதிகப்படியான இடங்களை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கியுள்ளது. குறிப்பாக அனைத்து கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக நாம் தமிழர் பார்க்கிறது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 172 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் மேலும் 24 இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் உள்ளது. 2 இடங்களுக்கு மட்டுமே இழுபறி நீடித்து வருகிறு. தமிழகம் முழுவதும் 85 முதல் 90 சதவீதம் வேட்பாளர்களை நிறுத்த வாய்ப்பு உள்ளது.  இப்போதுள்ளபடி மறைமுக தேர்தல் இல்லாமல் நேரடி தேர்தல் நடந்திருந்தால் அது நாம் தமிழர் கட்சிக்கு கூடுதல் வாய்ப்பைக் கொடுத்திருக்கும்.

பாமக: பாமக ஊரகப் பகுதிகளில் செல்வாக்குப் பெற்ற கட்சி என்பது உண்மை. 2011 இல் தனித்து உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கியபோது ஊரகப் பகுதிகளில் 4.8 சதவீத வாக்குகளை எடுத்த பாமக, நகர்ப்பகுதியில் 1.9 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆகையால் சென்னை மாநகராட்சியில் 2.25 சதவீதம், சேலத்தில் 4.3 சதவீதம், வேலூரில் 2.3 சதவீதம் மட்டுமே பெற்றது. இப்போதைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக எப்படி போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

குறிப்பாக தேர்தல் முடிவில் அதிக இடங்களையும், வாக்கு சதவீதத்தையும் பாஜக அல்லது பாமக பெறப்போகிறதா என்பது தான் சுவாரசியமான போட்டியாக இருக்கக்கூடும். 2011 இல் பாமகவை விட, பாஜக சற்று கூடுதல் இடங்களை கைப்பற்றியது. இந்த முறை  என்னவாகும் என்பது போக போக களத்தில் தெரியும்.

மக்கள் நீதி மய்யம்: ம.நீ.ம. கட்சியைப் பொறுத்தவரை அது நகர்புற கட்சி. மாநகராட்சி பகுதிகளில் 80 சதவீத வேட்பாளர்களை நிறுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுவே, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்களை இக்கட்சியால் முழுமையாக நிறுத்த முடியாது. அதேவேளை மநீமவுக்கு நகர்ப்புறத்தில் வாக்குகள் அடர்த்தியாக இருப்பதால் பதவிகளை அதிகம் கைப்பற்ற வாய்ப்பு அதிகம். குறிப்பாக கோவை, மதுரை, சென்னை மாநகராட்சிகளில் கடந்த மக்களவை, பேரவைத் தேர்தல்களில் மநீமவுக்கு  நல்ல வாக்குகள் விழுந்தன. இந்த முறை அதை அக்கட்சி எப்படி பயன்படுத்திக் கொள்ளப்போகிறது என்பதை போகப் போகத் தான் பார்க்க வேண்டும்.

ஒரு கட்டத்தில் தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக சோபித்த தேமுதிக இப்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.  2011 இல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை காங்கிரஸிடம் இருந்து தட்டிப் பறித்தது தேமுதிக. இப்போது 20 சதவீத இடங்களுக்கு கூட வேட்பாளர்களை அக்கட்சியால் நிறுத்த முடியுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மறைமுக தேர்தல் நடப்பதாலும், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதாலும், திமுகவின் கூட்டணி கட்சிகள் 90 சதவீத இடங்களில் போட்டியிட ஒத்துக் கொண்டதாலும், நகர்ப்பகுதிகளில் திமுகவுக்கு பாரம்பரியமாகவே கட்டமைப்பு இருப்பதாலும் வரலாறு காணாத வெற்றியை திமுக பெறக்கூடும் என ஆளும் கட்சி தரப்பு நம்புகிறது.