பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்: நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி 8 – 8.5% இருக்கும் என கணிப்பு

நாட்டின் பொருளாதார அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில், 2022-23 ஆம் ஆண்டின் வளர்ச்சியானது, தடுப்பூசி பாதுகாப்பு, விநியோக பக்க சீர்திருத்தங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை தளர்த்துதல், வலுவான ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் மூலதன செலவினங்களை அதிகரிக்க நிதி இடம் கிடைப்பது ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், 2022-23 ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிதிநிலை அறிக்கையில், 2023-23 ம் நிதியாண்டில் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பொருளாதாரம் இருப்பதாகவும், தனியார் துறை முதலீடுகள் மூலம் பொருளாதாரம் மறுமலர்ச்சிபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால், பணவீக்கம் அதிகரித்து, உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளின் மத்திய வங்கிகள் ரொக்கப் புழக்கத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றன.

நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை, நிதி நிலைக் குறியீடுகள் மற்றும் நிதித்துறை, சுகாதாரத் துறை பண வீக்கம் ஆகியவை வரும் நிதியாண்டில் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.