அலங்கார ஊர்தி விவகாரம்: ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும்

நிகழாண்டில் தில்லி குடியரசு தின விழா அணி வகுப்பில் மேற்கு வங்கம், தமிழகம், கேரளம் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி அளிக்கப்படாதது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாநில மக்களுக்கும் பொதுவான நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சில மாநிலங்களை மட்டும் மத்திய பாஜக அரசு குறிவைத்து அரசியல் செய்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் தில்லியில் குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கோலாகலமாக நடப்பது வழக்கம். இதில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பண்பாடு, கலாசாரம், சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் அவற்றை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வாடிக்கை. பல்வேறு மாநிலங்களின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையிலான அலங்கார ஊர்திகள் இடம்பெற்று காண்போரை கவர்ந்திழுக்கும். நிகழாண்டு 75வது குடியரசு தின விழா என்பதால் வழக்கத்தைவிட விமர்சையாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் வாகன பேரணியில், மத்திய அரசு முன்கூட்டியே மாநிலங்கள் அனுப்பும் மாடல்களை பரிசீலனை செய்து விழாவில் இடம்பெறும் ஊர்திகளை தேர்வு செய்யும். நிகழாண்டில், தமிழக அரசும் மாநிலத்தின் சார்பாக இடம்பெற வேண்டிய ஊர்திகளின் மாதிரிகளை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது. ஆனால், இம்முறை தமிழக அரசு அனுப்பிவைத்த மாதிரிகளையெல்லாம் மத்திய அரசு நிராககரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் முக்கிய விழாவான குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழகத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்குவகித்த தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை மத்திய அரசு அங்கீகரிக்க மனமில்லாமல் இருப்பதாகவே கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதற்கு கண்டனம் தெரிவித்தும், உடனடியாக வாகன அணிவகுப்பில் தங்களது மாநில ஊர்திகளை இடம்பெற செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், “தங்கள் மாநில அலங்கார ஊர்தியை நிராகரிக்க எந்தவித காரணமுமே இல்லை, மேற்குவங்க மாநில மக்களை வேதனைப்படுத்த மட்டுமே இது செய்யப்பட்டுள்ளது. எந்தவித காரணமும் சொல்லாமலேயே எங்களின் அலங்கார ஊர்தி நிராகரிக் கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், வேதனை யையும் அளிக்கிறது. இந்திய தேசிய ராணுவத்துக்கு நேதாஜியின் பங்களிப்பு என்ற தலைப்பில் நாங்கள் அலங்கார ஊர்தியை தயார் செய்திருந்தோம். அந்த ஊர்தியில், ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தர், சித்தரஞ்சன் தாஸ், அரபிந்தோ மாதங்கினி, பிர்சா முண்டா உள்ளிட்ட தேசபக்தர்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன. இந்த ஊர்தியை நிராகரித்து சுதந்திரப் போராட்ட வீரர்களை மத்திய அரசு சிறுமைப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.

இந்நிலையில், கொல்கத்தா பாஜக செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா, ஏதேனும் தொழில்நுட்பக் காரணங்களுக்காகவே இந்த ஊர்தி நிராகரிக்கப்பட்டிருக்கும். நேதாஜியின் பங்களிப்பு என்னவென்று பாஜகவுக்கு தெரியாமல் இல்லை. நேதாஜி போன்ற தலைவர்களை வைத்து அரசியல் செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளார்.

இதேபோல், கேரளாவிலும் குடியரசு தின விழாவுக்கான ஊர்தியை மத்திய அரசு அனுமதிக்காததை காங்கிரஸ் கடுமையாக கண்டித்துள்ளது. இது குறித்து கேரள மாநில காங்கிரஸ் தலைவர் பி.கே.ஹரிபிரசாத் கூறுகையில், “குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு எதிராக பாஜக பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்து கொள்கிறது. இதனால் பாஜக ஆளாத மாநிலங்களில் விரோத மனப்பாண்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், மாநில முதல்வர்கள் பிரதமருக்கு அடுத்தடுத்து கடிதம் எழுதியுள்ள இந்தப் போக்கு பழைய தந்திரம். குறிப்பிட்ட சில மாநிலங்களின் முதல்வர்கள் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றனர். நாட்டின் கூட்டாட்சி மாண்பை சிதைக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். இந்த மாநில முதல்வர்களுக்கு என்று தனியாக நேர்மறையான கொள்கையே இல்லை. அதனால், பழைய தந்திரங்கள் மூலம் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக மத்திய அரசு வட்டாரம் பதிலடி தெரிவித்துள்ளது.

குடியரசு தின விழாவில் எந்த அலங்கார ஊர்தி இடம்பெற வேண்டும் என்பதை, நிபுணர் குழுவே தேர்வு செய்கிறதே தவிர மத்திய அரசு அல்ல. இந்தக் குழுவில் கலை, கலாச்சாரம், சிற்பக்கலை, இசை, நடனம் என பல்துறை வித்தகர்கள் இடம்பெற்றிருப்பார்கள். அவர்களே மாநில அரசுகளின் பரிந்துரைகளை பரிசீலித்து முடிவு செய்வார்கள். அலங்கார ஊர்தியின் வடிவமைப்பு, கருத்துரு, அதன் கண்கவர் நேர்த்தி ஆகியனவற்றின் அடிப்படையிலேயே தேர்வு நடைபெறும். நேரமின்மையால் 51 விண்ணப்பங்களில் சிலவற்றை நிராகரிக்க நேர்ந்தது என்றும் மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. உள்ளிட்டோர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்தியை வடிவமைக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அனுமதி அளிக்காதது இங்குள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வ.உ.சி.யின் வாரிசுகள் கூட இதை கண்டித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மத்திய அரசு அனுமதி மறுத்த நிலையில், தமிழக அரசு திட்டமிட்டிருந்த அலங்கார ஊர்தியை, சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெற செய்வோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஐந்து மாநில தேர்தல்களுக்கு இடையே குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தி அரசியல் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

மோடி எதிர்ப்பு ஸ்டாலினுக்கு லாபம்

இது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறும்போது, காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆளும்போது கூட இதுபோல தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் கட்சியாக இருக்கும்போது தமிழக வாகனங்கள் இடம்பெற்றுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள நிபுணர்களின் உதவியுடன் தான் இது தேர்வு செய்யப்பட்டது. கொரோனா காலகட்டம் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் இடம்பெற்றுள்ளன. 7 ஆண்டுகளில் 4 முறை மேற்கு வங்கம், 5 முறை கேரளம் இடம்பெற்றுள்ளன. இந்த முறை பிற மாநில வாகனங்கள் சிறப்பாக இருந்ததால் அவை இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத் தேர்தலில் நேதாஜிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்தார். நேதாஜி, நாராயண குரு, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது பிரதமர் மோடி எப்போதும் மரியாதை வைத்திருக்கிறார். ஆனால், இப்போது சிறந்த மாதிரிகள் அடிப்படையிலும், குறைந்த எண்ணிக்கையில் சிறந்த வாகனங்கள் இடம்பெற செய்வது என்ற நிலையிலும் தான் மேற்கு வங்கம், தமிழகம், கேரள வாகனங்கள் தேர்வாகவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.

எந்த ஒரு விஷயம் கிடைத்தாலும் அரசியல்வாதிகள் அரசியல் செய்வது இயல்புதான். பிரதமர் மோடியையும், பாஜகவையும் விமர்சனம் செய்வது திமுகவுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் அதிக அரசியல் லாபத்தை தரும். தமிழகத்தைப் பொறுத்தவரை மோடி எதிர்ப்பு என்பது திமுகவுக்கு அரசியல் லாபம் தரும் என்பதால் இந்த வாய்ப்பையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகச்சரியாக பயன்படுத்தி வருகிறார்.

பாஜகவின் ‘பி’ டீம் என திமுகவை, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்யும் நிலையில், மோடி எதிர்ப்பில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என்ற பிம்பத்தை கட்டிக்காக்க குடியரசு தின அலங்கார ஊர்தி அரசியல் உதவும்.

எதற்கு வீண் சலசலப்பு!

வரும் குடியரசு தினத்தில் 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் மட்டும் பங்கேற்கவிருப்பதை விட, விருப்பம் தெரிவித்த எந்த மாநிலமாக இருந்தாலும் அதற்கு வாய்ப்பளித்திருக்கலாம், ஏனென்றால் இது நம் நாட்டின் 75ம் குடியரசு தினம், இதில் கலந்து கொள்ளவேண்டும் என்ற விருப்பம், இயல்பாகவே அனைத்து மாநிலங்களுக்கும் இருக்கும்.

தயாராக இருந்த அனைத்து மாநிலங்களுக்கும் வாய்ப்பு வழங்கியிருந்தால் எந்த வீண் சலசலப்பும் நேர்ந்திருக்காது. ஆனால் தற்போது நிகழ்வில் நிராகரிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் பெரிதளவில் பாரதிய ஜனதா ஆட்சி செய்யாதவைகளாக தான் இருக்கிறது. என்னதான் தணிக்கை குழுவின் முடிவு தான் இந்த நிராகரிப்பு என்று சொன்னாலும் மத்திய அரசு தான் நிராகரித்து விட்டது என்ற குற்றசாட்டு எழும், எழுந்து வருகிறது ஆங்காங்கே.

தற்போது தமிழ்நாடு அரசு, தன்னுடைய நிராகரிக்கப்பட்ட ஊர்தியை மாநிலத்தின் தலைநகரத்தில் குடியரசு தின நிகழ்வில் உபயோகிக்கவும், தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு அனுப்பிவைக்கவும் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் உள்ளன. இப்படி ஒரு நிகழ்வு நடக்க, அந்த நிராகரிப்பே காரணம்.

தேசபக்தியை ஒவ்வொரு நொடியும்பேசும் கட்சியாக பா.ஜ.க. இருந்தாலும், ஒட்டுமொத்த நாட்டிற்கே சிறப்பான 75 வது குடியரசு தினத்தில் அனைத்து மாநிலங்களையும் ஊர் கூடி தேர் இழுக்க வைக்க தவறிவிட்டதாக தான் பார்க்கப்படும்.