கோவையில் வாகனங்கள் நிறுத்த அதிக கட்டணம்

வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கண்டனம்

கோவை மாநகரில் சில பகுதிகளில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதற்கு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்த செய்தி குறிப்பில் அவர் கூறியிருப்பது, கோவை மாநகரில் 30 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு கார்களை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ. 30, சில பகுதிகளில் ரூ. 40 எனவும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 என்று மிக அதிக அளவில் கட்டணம் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. திமுக அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறு, சிறு தொழில்கள் நிறைந்த கோவை மாநகரில் சொந்த வாகனங்கள் வைத்திருப்போர் மிக மிக அதிக அளவில் உள்ளனர். இவர்கள் அனைவரும் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள். அதிக கட்டணத்தால் வாகனங்களை குடியிருப்பு பகுதியில் நிறுத்தி விடுவார்கள். இதனால் வேறு சில பிரச்சினைகள் எழக்கூடும். வியாபாரமும் பாதிக்கப்படும். கோவை மாநகர பகுதியில் காலியாக உள்ள வணிக வளாகங்கள், காலி இடங்களை பயன்படுத்தி வருவாய் ஈட்டுவதில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

மாறாக, வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலித்து மக்களைக் கசக்கிப் பிழிவது எந்த வகையிலும் நியாயம் அல்ல. நடுத்தர ஏழை எளிய மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்க முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.