கோவையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர்

கோவையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஜல்லிக்கட்டு போட்டியை வரும் 21ம் தேதி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனா தொற்றால், தமிழக அரசின் நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு கோவையில் 21ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. 64 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் இந்த ஜல்லிகட்டு போட்டியில் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 5 வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் 500 முதல் 600 காளைகள் பங்கேற்க உள்ளன. போட்டியை பாதுகாப்பாக நடத்த மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை ஜல்லிக்கட்டு போட்டிகயை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஜல்லிக்கட்டு போட்டியின் காட்சிகள் தொலைகாட்சிகள், லோக்கல் சேனல்களில் நேரிடையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

மாடுபிடி வீரர்கள் இரு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம், ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.