பசுமைப் பொங்கல்!

உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே என்பது தமிழ்ப் பாடல் ஆகும். உணவு உற்பத்தியை அளிப்பவர்கள், உயிர் அளிப்பவர்கள் என்று இதற்குப் பொருள். என்றாலும் அந்த உணவை விளைவிக்க எவ்வளவு கேடுகளை இதே பூமிக்கு நாம் செய்து வருகிறோம் என்று எண்ணிப் பார்த்தால் துயரம்தான் மிஞ்சும்.

பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த பூமியில் வாழும் உயிர்களுக்கு, இயற்கையானது உணவு அளித்து வருகிறது. கடந்த நூறு, இருநூறு ஆண்டுகளில் ஏற்பட்ட போர்கள், நாடு பிடித்தல், வணிகம், உணவுத் தட்டுப்பாடு, உணவுப் பங்கீடு போன்றவை வந்தவுடன் கூடவே உணவு பஞ்சமும் வந்து விட்டது. அதன் தொடர்ச்சியாக வேதியியல் துறையில் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வேதியியல் உரத்தின்  பயன்பாட்டை பல மடங்கு  உயர்த்தின.

இன்னொரு புறம் பெருகி வரும் மக்கள் தொகையால் உணவுத் தேவையும் அதிகரித்தது. அதன் விளைவு பசுமைப்புரட்சி எனும் வேதியல் முறையில் உணவு உற்பத்தி உருவாகி இன்று நிலை பெற்றுள்ளது.

காலம் காலமாக இயற்கை முறையில் வேளாண்மை முழுமையாக இருந்த நிலை மாறி, இன்று பெரும்பாலும் வேதி உரங்கள், பூச்சி மருந்துகள் சார்ந்த வேளாண்மை இயங்கி வருகிறது. இயற்கை விவசாயம் எனும் பாரம்பரிய முறை கிட்டத்தட்ட மறைந்து போய்விட்டது. சொல்லப் போனால் இனி அது நடைமுறையில் சாத்தியமில்லை என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனாலும் விடாமுயற்சியுடன் ஒரு சிறு பிரிவினர் இயற்கை விவசாயத்தை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இயற்கை விவசாயம் ஏன் வேண்டும், அதனை தற்போது மீட்டெடுக்க வேண்டிய அவசியம் என்ன என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான். அதுவும் சுற்றுச்சூழல் சார்ந்த காரணம். பூமி பசுமையாக இருக்க வேண்டியது தான் அதற்கு காரணம். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக தன் வளத்தை இழக்காத இந்த மண் தன் உயிர் தன்மையை இழந்து வருகிறது. விவசாய உற்பத்தி என்று பார்த்தாலும் படிப்படியாக குறைந்து வருகிறது அல்லது குறிப்பிட்ட வேதியியல் உரம் பூச்சி மருந்துகளை பயன்படுத்தினால் தான் விளைச்சல் கிடைக்கும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. அதே போல இந்த முறையில் விவசாயத்திற்கான தண்ணீர் பயன்பாடு அதிகமாக   தேவைப்படுகிறது.

நேரடியாக சுற்றுச்சூழல் சீர்கேடு என்று பார்த்தால் வேதியியல் உரங்கள்,  பூச்சிக்கொல்லி மருந்துகளை  தெளிக்கும் போது தாவரங்கள் பயன்படுத்தியது போக அதில்  மீதமாகும் வேதிப்பொருட்கள் எனும் நச்சு அந்த நிலத்தில் தங்கி நிலத்தை பாழ்படுத்துகிறது. இன்னொருபுறம் அந்த நிலத்திலிருந்து பரவி பக்கத்தில் உள்ள நிலங்கள்  என காற்றிலும், நீரிலும் கரைந்து பரவி கேடு உருவாக்குகிறது. இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு நீலகிரியில் உள்ள தேயிலை தோட்டங்கள் ஆகும். அங்கு தேயிலைத் தோட்டங்களுக்கு  இடப்படும் வேதி உரங்கள், பூச்சி மருந்துகளை அங்கு அந்தப் பயிர்கள் பயன்படுத்தியது போக மேலிருந்து கீழாக நீரில் அடித்து கொண்டு வந்து கீழுள்ள சமவெளிப் பகுதியிலும் மண்ணிலும் கலந்திருப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

சுற்றுச்சூழல் சீர்கேடுகள் அதிகரித்து வரும் நிலையில் அதன் பாதிப்புகளை அதீத மழை, வெள்ளம், திடீர் புயல் என நாம் உணரத் தொடங்கி இருக்கிறோம். அதற்காக ஒரே நாளில் விவசாயம் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றி உணவு உற்பத்தி போன்றவற்றை பராமரிக்கவும் முடியாது. இந்த நிலையில் படிப்படியாக நமது பாரம்பரிய விவசாய முறைக்கு  மாறுவதுதான் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.

தமிழர் திருநாளான பொங்கல் என்பது உழவர் பெருவிழா.  இயற்கையின் பங்களிப்பை போற்றி வணங்கும் ஒரு நாள். அந்த வகையில் இனி வரும் நாட்களில் இயற்கை வேளாண்மையை கடைபிடித்து பொங்கலை பசுமைப் பொங்கலாக கொண்டாடுவோம்!