கோவையைச் சேர்ந்த விஷ்ணு பிரபுவிற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் 

பப்புவா நியூ கினி நாட்டின் வர்த்தக ஆணையராக நியமனம்

 உழைப்பும் முயற்சியும் இருந்தால்  சாதாரண மனிதர்களும்  வாழ்க்கையில் நிச்சயம்  சாதிக்கலாம், அரசியில் அரங்கிலும்  ஏறுமுகம் காணலாம் என்பதற்கு கோவையைச் சேர்ந்த விஷ்ணு பிரபு ஒரு முன்னுதாரணம்.

தன்னுடைய அரசியல் பயணத்தை இளம் வயதிலே கோவையில் துவங்கி, 27 வயதிலேயே அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநில துணை செயலர் பொறுப்பினை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க பெற்று அரசியல் பணியாற்றியவர் இவர். அம்மையாருடைய மறைவிற்குப்பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்கு பின்னர்

2021-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு தொண்டனாக தன்னை இணைத்து கொண்டு கட்சி பணிசெய்து வரும் கோவையைச் சேர்ந்த இந்த இளம் அரசியல் பிரமுகர், தற்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு அருகாமையில் உள்ள பப்புவா நியூ கினி எனும் நாட்டின் இந்தியாவுக்கான வர்த்தக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த புதிய அயல்நாட்டு பொறுப்பினையும், தான் கண்டுவரக்கூடிய சமகால அரசியல் அனுபவங்களையும் பற்றி நம்மிடம் சமீபத்தில் நடந்த நேர்காணலில் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துகளின் தொகுப்பு, கீழ்வருமாறு.

ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 2,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய  நாடுதான் பப்புவா நியூ கினி. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பல  தீவு நாடுகளில் மிகப்பெரும் நாடாக இந்நாடு திகழ்கிறது.

அண்மையில் இந்நாட்டிற்கான இந்தியாவின் வர்த்தக ஆணையராக விஷ்ணு பிரபு தேர்வானதை அடுத்து, சென்னையில்  நியமன விழா நடைபெற்றது.  இந்த விழாவில் இந்தியாவுக்கான பப்புவா நியூ கினியா நாட்டின் தூதர் பவுலிஸ் கோர்னியா மற்றும் தமிழக அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொன்னான வாய்ப்பு நாட்டிற்கு:

எப்படி அரபு நாடுகளில் எண்ணெய் வளம் மிகுதியோ அதேபோல் இந்த நாட்டில் தங்கமும், செம்பும் அதிக அளவில் உள்ளது. இங்கு உள்ள சுரங்கங்களில் தங்கத்தை அரசின் அனுமதியுடன் எடுத்து, நம் நாட்டில் அமைந்துள்ள பத்திற்கும் அதிகமான சுத்திகரிப்பு நிலையங்களின் உதவியோடு இங்கு அதை மேம்படுத்தலாம். இதனால் இந்திய நாட்டில் வர்த்தகம் பெருகும், அதனால் அரசிற்கு வரி மூலம் நல்ல வருமானம் கிடைக்கும், மேலும் இங்கு நல்ல வேலை வாய்ப்பும் உண்டாகும் என்று விஷ்ணு பிரபு தெரிவித்தார்.

“அந்நாட்டினருக்கு, நம்முடைய விருந்தோம்பல் மற்றும் உணவு முறை மீது அபரிமிதமான பிரியம் உண்டு, அவர்களின் தலைநகரமான போர்ட்ஸ் மோர்ஸ்பீயில் நம்முடைய உணவு வந்தடைய அவர்கள் விருப்பமாக உள்ளனர். இந்த இரு நாடுகளுக்கும் பாலமாக இருந்து வர்த்தகத்தை அதிகரிக்க எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.”

“கொரோனா சூழல் சரியானதும் அந்த நாட்டின் அதிபர்  மற்றும் பிரதமர் நம் நாட்டிற்கு வந்து, பப்புவா நியூ கினியின் இந்திய வர்த்தக ஆணையர் அலுவலகத்தை திறக்க தமிழகம் வருவார்கள். நான் சென்னையில் அது அமையவேண்டும் என்று கூறினாலும், அவர்கள் என்னுடைய ஊரான கோவையில் அந்த அலுவலகம் இடம் பெறவேண்டும் என்று ஆவல் தெரிவித்துள்ளனர்”.

“விரைவில் நம் முதல்வர் முன்னிலையில் இது நிகழும், அத்துடன் கோவை நகரத்தைச் சேர்ந்த தங்க தொழில் துறையினர் உட்பட பலரும் இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கெடுப்பர். இது நம் நாட்டிற்கு ஒரு பொன்னான வாய்ப்பு” என்று தெரிவித்தார்.

தமிழகம் தலைநிமிர்ந்து:

திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்த பின் தான் ஒரு மிகச் சிறந்த ஆளுமையின் கீழ் செயல்படுவதாக உணர்வதாக கூறிய விஷ்ணு பிரபு, தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தபின் மக்கள் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நிலை இன்று மாநிலத்தில் உருவாகியுள்ளது என்று பெருமிதத்துடன் தற்போதைய  ஆட்சி குறித்து பதிவிட்டார்.

“தமிழகத்தின் தற்போதைய  நிலைமை மாறியுள்ளது. முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ் நாட்டின் மக்களுக்கு எது நல்லது, எதை செய்தால் அவர்களுடைய வாழ்க்கை உயர்ந்திடும் என்பதை சிந்தித்து செயல்படக்கூடிய அரசாக, மக்களுக்கான  இந்த அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது,”என்றார்.

திராவிடம் நம் சொந்தம்:

2005ல் தன்னுடைய  அரசியல் பயணம் ஆரம்பமான நாள் முதல் இந்நாள் வரை தேசிய கட்சிகளுக்குள் செல்லாமல்  திராவிட கட்சிகளில்  இணைந்து பணியாற்றிவருவது ஏன்? என்ற கேள்விக்கு அவர், திராவிட கட்சிகள் மக்களுடன் என்றும் ஒரு சொந்தம் போல், பக்கத்து வீடு நண்பர் போல்  நெருங்கி இருக்கும். மக்களின் தேவைக்காக தலைவர்களை எளிதில் அணுகமுடியும், நாம் விடுக்கும் கோரிக்கைகள், வேண்டுகோளுக்கு உடனடி பதில் கிடைக்கும், அதனால் திராவிடக் கட்சிகளில் தொடர்வதாக விளக்கமளித்தார்.

மக்கள் பணியில்:

2021 மே மாதத்தில் திமுகவில் இணைந்த பின்னர் பல வழிகளில் மக்கள் நலனிற்காக முயற்சிகளை எடுத்துள்ளதாக பகிர்ந்துகொண்டார், மேலும்  கோவை பகுதி மக்களின் தேவைகள் பற்றியும் முதல்வரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

“கொரோனா பேரிடர் காலத்தில் நிவாரணப் பொருட்களையும், தீபாவளிக்கான மக்கள் நலத்திட்ட உதவிகளை  பல இடங்களில் வழங்கினோம்” என்றார்.

“திமுக ஆட்சி அமைந்த பின்னர் , இந்த கொரோனா பெருந்தொற்று ஒரு மிகப்பெரிய சவாலாக அமைந்தது.   இதுபோன்ற அசாதாரண சூழலில் மக்களுக்கு தொடர்ந்து உதவ முதல்வர் பல முயற்சிகளை எடுத்து வருகிறார், அவரின் கரங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் நிவாரணப் பொருட்களை வழங்கி, அது மக்களுக்கு சென்றடைய ஒரு தூணாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்,” என்றார்.

“கோவைக்காக முதல்வரிடம் மற்றும் அமைச்சர் பெருமக்களிடம் பேசும்போது, இங்கு ஒரு ‘ரிங் ரோடு’ இல்லை, அது வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். அந்த திட்டம் வரும்பட்சத்தில் அது போக்குவரத்து நெரிசலை மாநகரத்தில் குறைக்கவும், வெவ்வேறு இடங்களுக்கு விரைந்து செல்வதற்கும்  பெரும் உதவியாக அமையும். தற்போது சமுதாயத்தில் உள்ள இக்கட்டான சூழ்நிலை முடிந்தபின், இதுகுறித்து மீண்டும் பேசுவேன்.”

கோவை கழகத்திற்கு பெருகும் செல்வாக்கு:

இந்த புது ஆட்சியால் ஏற்பட்டு வரும் மாற்றம் கோவை மக்களுக்கு நன்கு தெரிவதாக குறிப்பிட்டார், விஷ்ணு பிரபு. “கடந்த ஆட்சியை விட தற்போது உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் , மக்களுக்கான பல புரட்சிகரமான நலத்திட்டங்களை கொண்டுவந்து  மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது, நிச்சயமாக  அவை  இளைஞர்களுக்கும், வெகுஜனத்திற்கும் நன்கு தெரிகிறது.”

“முதல்வர் அவர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கட்சியை வழிநடத்துகிறார், இதனால் எந்த இடத்திலும் ஊழல் கிடையாது, குற்றச்சாட்டுகள் இல்லை. எங்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கிடையாது. பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்தாண்டு வழங்கிய ஸ்கூல் பேக்கில் முந்தைய  ஆட்சியில் இருந்த முதல்வர் படத்துடன் தான் இந்த அரசு வழங்கியது.  அம்மா உணவகத்தை இந்த அரசு பெயர்  மாற்றம் செய்ய  முயலும் என்றெல்லாம் பேசினார்கள், ஆனால் இப்போதும் அதே பெயரில் தான் செயல்படுகிறது. இவை அனைத்தும் இங்கு நல்ல பெயரில் கழகத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.”

உடனடி தேவை

கோவை மக்களோடு மக்களாக நான் பழகிவருவதில் தற்போது அவர்கள் தேவையாக தெரிந்துகொண்டது,  நம் இளைஞர்களுக்கு இங்கு அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும் என்பதை தான். அப்போது அவர்களால் தங்களின் நிலையை எளிதில் உயர்த்திட முடியும்.

அத்துடன் நம்முடைய பெண்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும். முதல்வர் இவற்றில் பெரிதும் கவனம் செலுத்தி வருகிறார். நிச்சயம் அவர் வழிகாட்டுதலில் தமிழகம் வெல்லும்.