கோவையில் ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு!

கோவை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் நாள்தோறும் சராசரியாக 100 பேர் வரை கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனிடையே கடந்த ஒரு வாரங்களாக பாதிப்பு மெல்லமெல்ல அதிகரித்து வருகிறது. பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் கொரோனா பரிசோதனைகளும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் இன்று 981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதாரத் துறையினர் காலையிலேயே தகவல் அளித்த நிலையில் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது 4317 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் 246 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 58 ஆயிரத்து 414 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதுவரை 2528 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.