ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய இளைஞர் எழுச்சி தினம் கடைப்பிடிப்பு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின், நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் தேசிய இளைஞர் எழுச்சி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி, தேசிய இளைஞர் எழுச்சி தினம் புதன்கிழமை (12.01.2022) நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர் விவேகானந்தரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து இணையவழி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவைச் சேர்ந்த சுவாமி பக்திவ்ரதானந்தா, ‘சுவாமி விவேகானந்தரும்-இளைஞர் தலைமைப் பண்பும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: “சுவாமி விவேகானந்தரின் ஆளுமையும், கற்பித்தலுமே அவரை சிறந்த தலைமைப்பண்பு மிக்கவராக உருவாக்கியது. அவை கேட்பவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தக்கூடியது. அதனால் தான் அவர் இளைஞர்களின் அடையாளமாகப் பார்க்கப்பட்டார்.

13 முதல் 39 வயது வரையுள்ளவர்கள் இளைஞர்களாகக் கருதப்படுகின்றனர். இளமை என்பதற்கு மனித உடல் மட்டுமே போதுமானதாகாது. நம்முடைய மனம் நம்மை இளைஞர் என நம்ப வேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தலைமைப்பண்பு என்பது மிகவும் பிரபலமானச் சொல் என்றாலும், விவேகானந்தரின் சொற்கள் வலிமை மிக்கவை. நமக்குள் தீப்பொறிகளை ஏற்படுத்தக் கூடியவை. அவருடைய குணாதிசயங்கள் அவரைக் குறித்து நம்மைப் பேச வைக்கிறது. பயமின்மை, தன்னம்பிக்கை, ஒழுக்கம், பிரச்சினைகளை எதிர்க்கொள்ளுதல், இலக்குகளை நோக்கி பயணித்தல், மனவலிமை போன்றவை தலைமைப் பண்புகளை வளர்க்கும்” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பிரகதீஸ்வரன், சுபாஷினி, நாகராஜன், தீபக்குமார், ரெட் ரிப்பன் கிளப் அலுவலர் கீர்த்திவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.