‘தடைகளைத் தகர்ப்பவள் தமிழ்ப்பெண்’

சினிமாத் துறையில் வெற்றி பெற வேண்டும் என்று பலர் ஆசைப்படுவது வழக்கம்.  ஆனால் பெண்கள் சினிமாத் துறையில் சாதிக்க முடியுமா என்ற கேள்விகள் மக்கள் மனதில் இருந்து வரும் சூழலில், “தமிழ் பெண்ணாக இருந்து நிச்சயமாக என்னால் வெற்றி பெற முடியும்” என்று மன உறுதியுடன் பயணித்துக் கொண்டிருக்கும் பிரியங்கா ரூத் அவர்களை அழகான மாலை வேளையில் சந்தித்தபொழுது நம்மிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களை காண்போம்.

உங்களின் சினிமா பயணத்தைப் பற்றி..

‘வணக்கம்,  நான் கோவைப் பொண்ணுதான். எங்க அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி என எல்லாரும் கோவையில்தான் இருக்காங்க. ரொம்ப நாட்களாக சினிமாத் துறையில் பயணிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்தது. எனக்குள் இருக்கும் ஆசையை வீட்டில் சொன்னபோது வேண்டாம் என்று மறுத்தார்கள். பிறகு எனக்குள் இருக்கும் திறமையைப் புரிந்து கொண்டு என்னை வழி நடத்தி கொண்டிருக்கிறார்கள் என் பெற்றோர்.

எனக்கு எந்த சினிமா பின்புலனும் கிடையாது. தானாக வாய்ப்புத் தேடி பல சினிமா அலுவலகங்களின் படிகளை ஏறி இறங்கி வந்தேன். என்றாவது ஒரு நாள் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் என் வாழ்க¢கை மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இயக்குநர் நலன்குமாரசுவாமி தான்  இயக்கிய ‘சூது கவ்வும்’ படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்தார். விஜய் சேதுபதி என்னை கடத்த முயற்சிக்கும் பொழுது, அவரை நான் அடிக்கும் காட்சிதான் நான் முதன்முதலாக நடித்த காட்சி. முதல் படம் நன்றாக பண்ண வேண்டும் என்று எனக்குள் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டு இருந்தது. அதே சமயம் ஒரு பக்கம் பயமும் இருந்தது. ஆனால் இயக்குநர் மற்றும் விஜய் சேதுபதி இருவரும்  என்னைப் புரிந்து கொண்டு காட்சி நன்றாக வர வேண்டும் என்று எனக்கு நிறுத்தி நிதானமாக சொல்லிக் கொடுத்து அந்த காட்சியில் நடிக்க வைத்தார்கள். அதை என்றும் என்னால் மறக்க முடியாது.

விஜய் சேதுபதி பற்றி உங்கள் கருத்து..

தற்போது விஜய் சேதுபதி இருக்கும் இடத்தை யாராலும் நெருங்க முடியாது. ஆனால் என்னை எங்கு பார்த்தாலும் பேசாமல் போக மாட்டார். நடிகர்கள் மீது அவர் வைத்து இருக்கும் பற்று என்னை மெய் சிலிர்க்க வைத்தது என்றுதான்  சொல்வேன்.

அடுத்த பட வாய்ப்பு ..

அந்த படத்திற்கு பிறகு, தீயா வேலை செய்யணும் குமாரு, குட்டிப்புலி என்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தேன். ஆனால் எனக்கு பேர் சொல்லும் அளவில் மெட்ரோ படம் அமைந்தது. அதற்கு காரணம் இயக்குநர் ஆனந்த் சார்தான். அவர் என்னைப் பார்த்தவுடன் “நீதான் இந்த கதாப்பாத்திரம் பண்ண வேண்டும்” என்று சொல்லி விட்டார். படம் வெளியான பிறகு, எனது நடிப்பை பார்த்து பலர் என்னைப்  பாராட்டினர். இதற்கு நடுவில் சின்னத் திரை வாய்ப்பும் அமைந்தது. இயக்குநர் திருச்செல்வன் ‘சித்திரம் பேசுதடி’ நாடகத்தில் பேர் சொல்லும் அளவிற்கு என்னை நடிக்க வைத்தார். அதை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ‘கேளடி கண்மணி’ தொடரில் நடித்தேன். இதை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகு தான் ஜீ தொலைக்காட்சியில் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். என் நடனத்தை பார்த்த கௌதமி, சினேகா, சுதா சந்திரன் அவர்கள் என்னை பல முறை பாராட்டி ஊக்கப்படுத்தினர். அந்த நாட்களை என்றைக்கும் மறக்க முடியாது.

இது ஒருபக்கம் இருக்க, எனக்கு சவாலாக அமைந்ததுதான் சன் டிவியில் இடம்பெற்ற ‘கிராமத்தில் ஒருநாள்’ நிகழ்ச்சி. அப்போட்டியில்  என்னுடன்  பல போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் என் மன வலிமை மற்றும் திறமையைக்  காண்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அதற்காக பல தடவை போராடி வெற்றியும் பெற்றேன். ஒரு பெண்ணுக்கு கஷ்டங்கள் வரும்போது அவளின் மன வலிமைதான் அவளை வெற்றியின் உச்சத்துக்கு கொண்டு போகும் என்பதை அந்த நிகழ்ச்சி எனக்கு உணர்த்தியது.

‘கிராமத்தில் ஒருநாள்’ நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகு தற்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். நடிகர் சத்யராஜ் தயாரிக்கும் படத்தில் அவரின் மகள் நடிக்க உள்ளார். அதில் பேர் சொல்லும் கதாப்பாத்திரம் எனக்கு அமைந்து உள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளது. என்னை மேலும் உற்சாகப்பட வைக்கும் அளவுக்கு படங்கள¤ல¢ நடிக்க தயார்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.

தமிழ்ப் பெண்களுக்கு வாய்ப்புகள் குறைவாகவே வருகிறது. தமிழ்ப் படங்களிலும், சின்னத் திரையிலும் தமிழ்ப் பெண்களுக்கு அதிக வாய்ப்பு கிடைத்தால் அவர்களின் திறமை உலகம் முழுக்க தெரிய வரும். பெண்கள் சாதிக்க முடியும் என்பதை நான் நம்பக் கூடியவள். பல தடைகள் வந்தாலும் அதை எதிர்நோக்கி நிற்பதுதான் ஒரு தமிழ் பெண்ணுக்கு அழகு என்பதை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கிறேன். தோல்விகளை எட்டி உதைத்து வெற்றி என்னும் சிம்மாசனத்தை பெண்கள் அடைய வேண்டும்” என்றார்.