பாதி உண்மை, பாதி கற்பனை – எஸ். ராமகிருஷ்ணன்

நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளரான எஸ். ராமகிருஷ்ணன், கடந்த 25 ஆண்டுகாலமாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருபவர்.

மனித மனங்களின் அன்பை, துயரை, பரிதவிப்பை தன் எழுத்துகளின் வழியே கடத்தும் இவர், இந்தியா முழுவதும் சுற்றியலைந்து தான் பெற்ற அனுபவங்களை, பரவசத்தை தன் எழுத்தின் மூலம் வாசகனுக்குக் கடத்துவதில் வல்லவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆனந்த விகடன் வலைதள பக்கத்தில் அவரின் உரையாடல் இடம்பெற்றிருந்தது. அதில் இடம்பெற்ற பதிவின் தொகுப்பினை இங்கே காணலாம்.

புதுமையும், கற்பனையும்:

மனிதனின் தனித்துவமாக நான் நினைப்பது அவனுடைய கற்பனையை தான். வேறு எந்த ஜீவராசிகளுக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பாக மனிதருடைய கற்பனை உள்ளது.

கற்பனையின் துணையைக் கொண்டு தான் மனிதன் அனைத்து கலைகளையும் உருவாக்கினான். குறிப்பாக படைப்புகளை உருவாக்குவதில் மனிதனுக்கு இருந்த ஒரு மேதமைக்கு காரணம் அவனுடைய கற்பனையின் ஆற்றல் தான். ஓவியம், இசை, எழுத்து, கவிதை என படைப்பாற்றல் என்று சொல்லக் கூடிய அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது கற்பனையே.

மனிதர்கள் புதிது புதிதாக கற்பனை செய்து கொண்டே இருப்பார்கள். அவை புதிய வடிவம் பெற்று தொழில் நுட்பமாக மாறுகின்றன. ஒவ்வொரு மனிதரின் கற்பனையும் தனியானது. புதுமையும், கற்பனையும் ஒன்றோடொன்று தொடர்புடையது. காலத்தை தாண்டி தனது கற்பனையின் மூலம் பெரிய படைப்புகளை மனிதர்கள் செய்து இருக்கிறார்கள்.

தெரிந்த உலகம் தெரியாத கதை:

எனது ஆசிரியர் வகுப்பில் ஒரு சமயம் கதை கூறினார். அனைவருக்கும் தெரிந்த கதைதான். காகம் பானையில் இருக்கும் தண்ணீரை மேல் கொண்டு வருவதற்காக கல்லை போட்டு மேல் கொண்டு வரும் கதை. அந்த கதையை கூறி முடித்த பின் அவர் கூறியது, அந்த காகம் சிந்திக்க தெரிந்தது என்றும் புதிய வழியை அது கண்டறிந்துள்ளது என்றும் கூறினார். இதை கூறி முடித்த பின்னர் “எல்லா கதையும் பாதி உண்மை, பாதி கற்பனை” என்று கூறினார்.

அவர் கூறிய பாதி உண்மை, பாதி கற்பனை என்ற ஒரு வரி என்னை எழுத்தாளனாக உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்துள்ளது. சிறுவயதில் காகம் எங்கிருந்து இந்த சிந்தனையை பெற்றது என்று யோசிக்க ஆரம்பித்தேன். மனிதர்களிடம் இருந்து இந்த சிந்தனையைப் பெற்றதா அல்லது தானாக பெற்றதா என்று யோசித்த போது, நமக்கு தெரிந்த ஒரு உலகை தெரியாததாக கதை மாற்றுகிறது.

நிஜத்தில் இருந்து பிரியாது:

நாம் அடிக்கடி பார்த்த ஒரு விஷயம் கதையில் வரும்போது புதிதாக தோன்றும். கதையில் இருக்கும் உண்மை, கற்பனை என்ற அளவு எவ்வளவு உள்ளது என்று கண்டுபிடிக்க முடியாது. மேலும் அதில் எந்த பாதி உண்மை என்றும் கண்டுபிடிக்க முடியாது. கற்பனையின் உடையே உச்சமே கற்பனையை நிஜத்தில் இருந்து பிரிக்க முடியாது என்பது தான்.

வாசகன் எது உண்மை என்று கருதுகிறானோ அது கற்பனையாக இருக்கலாம். கற்பனை என்று நினைப்பது உண்மையாக இருக்கலாம். மனிதர்களைப் போல கதைகளும் உலகம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்கின்றன.

நேரடியாக விலங்குகளின் மீது அச்சம் இருந்தாலும், கதைகள் வழியாக விலங்குகள், பறவைகள், தாவரங்கள் நம்முடன் பேச ஆரம்பித்தன. உலகம் எதையெல்லாம் அச்சுறுத்தி, நம்மை விட்டு விலக்கி வைத்திருக்கிறதோ அதையெல்லாம் கதைகள் நமக்கு தருகிறது.

சிங்கத்தை நேரில் பார்ப்பதற்கு முன்னரே கதை வழியாக பார்த்து விடுகிறோம். ஆனால் சிங்கத்தை சர்க்கஸ் கூண்டிற்குள் பார்க்கும்போது கதையில் பார்த்த சிங்கமும், கூண்டில் பார்த்த சிங்கமும் ஒன்றல்ல எனத் தோன்றுகிறது. காட்டு ராஜா என்று சொல்லக்கூடிய சிங்கத்தை ஏன் கூண்டிற்குள் அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

ஆனால் சர்க்கஸில் இருக்கும் சிங்கம் எனக்கு பிடிக்கவில்லை. கதையில் கண்ட காட்டுக்கே ராஜாவாக இருந்த சிங்கம், காட்டின் உயரமான பாறையில் ஏறி நின்று சூரிய உதயத்தை பார்க்கும் சிங்கத்தை தான் எனக்கு பிடித்திருந்தது.

“மனிதர்கள் தங்களின் சுய லாபத்திற்காக எதை வேண்டுமானாலும் அடக்கி, ஒடுக்கி தனக்கானதாக மாற்றி பணிய வைப்பார்கள்”. பின்னாட்களில் இதில் இருந்து நான் புரிந்து கொண்டது உங்களது வாழ்க்கை உங்களை காட்டு சிங்கமாக ஆக்க போகிறதா அல்லது சர்க்கஸ் சிங்கமாக ஆக்க போகிறதா என்பது உங்கள் கையில் தான் உள்ளது என்பதை தான்.

சர்க்கஸ் சிங்கமாக இருந்தோமானால் யாரோ ஒருவரின் சவுக்கடிக்காக முக்காலியில் ஏறுவீர்கள். ஆனால் ஒரு காட்டின் சிங்கமாக இருந்தோமானால் தனி சுதந்திரம் இருப்பதோடு, முடிவில்லாத வெளியில் தனியாக ஒரு பாதையில் நடந்து செல்லலாம்.

 

உண்மையும், எதிர் வினையும்:

சிறு வயதில் ஆசிரியர் சொன்ன “கதை என்பது பாதி கற்பனை, பாதி உண்மை” என்ற
வரி எனக்குள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. முழு உண்மையை ஒரு கதை கூற கூடாதா என்றால், முழு உண்மை ஒருபோதும் இந்த உலகிற்கு வேண்டியதில்லை. ஏனென்றால் முழு உண்மையை கண்ட போதெல்லாம் இந்த உலகம் அதற்கு கடுமையான எதிர் வினையை அளிக்கிறது.

மனிதன் உண்மையை தேடுபவனாக இருக்கிறான். ஆனால் முழு உண்மையை ஏற்றுக் கொள்ளாதவனாக இருக்கிறான். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப உண்மையை வளைத்து கொண்டே இருப்பதுதான் மனிதன் உடைய இயல்பாக இருக்கிறது.

பொய் என்பது வெறும் கற்பனை மட்டுமல்ல. பொய் என்பதில் உண்மையும் உள்ளது. ஆனால் குறைவாக உள்ளது அல்லது உண்மை மறைக்கப்பட்டு இருக்கிறது. அதனால் தகுந்த நேரத்தில் தகுந்த விதமாக சொல்லும்போது, பொய் கூட அங்கீகரிக்கப்படுகிறது.

இரு வழி பாதை:

இந்த தலைமுறை, மெல்ல கற்பனையின் உடைய ஆற்றலை இழந்து கொண்டே வருகிறது அல்லது அவர்கள் கவனம் பெறவேயில்லை அல்லது அவர்களுக்கு கற்பனையின் உடைய வசீகரம் பெரிதாக இல்லை என்றே கூறலாம். அவர்களின் கற்பனை ரெடிமேடாக உள்ளது. வணிக காரணங்களுக்காக இந்த உலகம் எதையெல்லாம் செயற்கையாக செய்கிறதோ அதையெல்லாம் கற்பனை என்று நம்புகிறார்கள்.

ஒரு இலக்கியம் அல்லது உரை அதனுடைய அலைகளை மனதினுள் எழுப்பி கொண்டே இருக்கும். இன்றைக்கு நீதி போதனைகள் வகுப்பு என்பதே இல்லை. அதையும் தாண்டி நீதி என்ற சொல்லே இன்று கேலி பொருளாக மாறி விட்டது. ஆனால் உண்மை அப்படி அல்ல. மனிதனுக்கு எல்லா காலத்திலும் நீதி, அறம் வேண்டும். நீதி மறுக்கப்படும் போதேல்லாம் அதற்காக குரல் எழுப்ப வேண்டும்.

எழுத்து, இலக்கியம் என்றும் அனைத்திற்கும் அடிப்படையான ஒரு தேவை இருக்கிறது. அது நீதியின் குரலை ஒலிக்க வேண்டும். அதுவும் ஒரு சாமானியனுக்கான நீதியாக இருக்க வேண்டும். அவனுக்கு மறுக்கப்பட்ட நீதிக்கான குரல் ஒலிக்கும் போது தான் இலக்கியம் பேரிலக்கியமாக மாறுகிறது.

எல்லா இதிகாசத்திற்கு பின்பும் அறத்தின் குரல் உள்ளது. அது மனிதனுக்கு ஒரு நம்பிக்கையை தருகிறது. வாழ்க்கையில் நீதி மறுக்கப்பட்டாலும் படைப்பில் நீதி கிடைக்கும். படைப்பில் இருந்து அதை இன்னொரு தலைமுறை நிஜமாக மாற்றும். அப்போது அது படைப்பில் இருந்து வாழ்க்கைக்கு வரும், பின்னர், வாழ்க்கையில் இருந்து படைப்புக்கு வரும். இது ஒரு இரு வழி பாதை போல தான்.

எந்த கதையைப் படித்தாலும் அதில் உள்ள உண்மையையும், கற்பனையையும் பாருங்கள். உண்மை கற்பனையால் எப்படி செழுமைபடுகிறது என்றும், கற்பனை உண்மையை எப்படி ஒளிர வைக்கிறது என்பதையும் பாருங்கள். அப்படி பார்த்தால் கதையையும் புரிந்து கொள்வீர்கள், கதை வழியாக வாழ்க்கையும் புரிந்து கொள்வீர்கள்.

Article by: RAMYA SUBBURAJ