நம்பர் விளையாட்டு சரி, மக்கள்?

அடுத்த கர்நாடக முதல்வர் யார் என்பது குறித்த செய்திகளே இன்று இந்தியா எங்கும் பேசப்படும் பொருள்.

போட்டியிட்ட முக்கியமான மூன்று கட்சிகளில் பாரதிய ஜனதா அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியாக இருக்கிறது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. ஆனால் பதவி வகிக்கத் தேவையான மெஜாரிட்டி யாருக்கும் கிடைக்கவில்லை. அதன் விளைவாக அங்கு நம்பர் விளையாட்டு தொடங்கியது.

தனிக்கட்சியாக அதிக எண்ணிக்கை பெற்ற பாரதிய ஜனதா, தங்களை மந்திரி சபை அழைக்க வேண்டும் எனக் கேட்க ஆளுநரும் ஓகே சொல்லிவிட்டார். இதையடுத்து எடியூரப்பா புதிய முதலமைச்சராக பதவியேற்றார். விடுவார்களா, எதிர்க்கட்சியினர்? பாஜக வின் எண்ணிக்கையைவிட காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை அதிகம். எனவே இவ்விரு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவரான குமாரசாமி முதல்வராக, காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து மற்றொரு அரசியல் ஐபிஎல் மோட்ச் தொடங்கியது. எனவே இதுகுறித்த விவாதம் நாடு முழுவதும் தொடங்கியது. போதாததற்கு எடியூரப்பாவை முதலமைச்சராக பதவியேற்க அழைத்ததால் தங்களையும் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கோவா, பீகார், மணிப்பூர் மாநில கவர்னரிடம் கேட்கப்போவதாக அந்தந்த எதிர்க்கட்சிகள் கோஷம் போடுகின்றன.

இதற்கிடையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம் எல் ஏக்கள் ஹைதராபாத்துக்கு பிக்னிக்காக கொண்டு செல்லப்பட்டனர். அடுத்த நாளே சட்டசபையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்லியதால் பிக்னிக் பாதியிலேயே கேன்சல்.

இதற்கிடையே எடியூரப்பா, தாங்கள்தான் மெஜாரிட்டி என்கிறார். நமக்கு புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதேபோலத்தான் ஆளுங்கட்சியில் எத்தனை எம்எல்ஏ ஆதரவு என்று யோசித்தால் தலைசுற்றுகிறது. தற்போது துணை முதல்வராக இருக்கும் ஓபிஎஸ் வெளியே போனார், வந்தார், தற்போது உள்ளே இருக்கிறார். தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள் ஆதரவு தரமாட்டேன் என்றார்கள், ஆனால் வெளியே இருக்கிறார்கள். நீதிமன்ற வழக்கு, சபாநாயகர் தீர்ப்பு என்ற சாதாரண மூளைக்கு எட்டாத பல விஷயங்கள் நமது ஜனநாயகத்தில் நடக்கின்றன.

எத்தனை சட்ட நுணுக்கங்கள், எத்தனை டிவி விவாதங்கள், எத்தனை வல்லுநர்களின் கருத்துப்போர்? தற்போது வெளிப்படையாக காட்சி தரும் இவர்கள் மற்ற நாட்களில் மாயமாகி விடுகிறார்கள். நூறாண்டுகளுக்கு மேலாக இழுத்துக்கொண்டு கிடக்கும் வாழ்வாதார பிரச்னையான காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்னையில் இவையனைத்தும் மெதுவாகத்தானே நடைபெறுகிறது.அதுவே கர்நாடகத்தில் யார் முதல்வர் என ஒரு சிக்கல் வரும்போது இரவு இரண்டு மணி முதல் அதிகாலை ஐந்து மணி வரை வழக்கு நடத்தப்படுகிறது, வழக்குரைஞர்கள் வாதிடுகிறார்கள், நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள்; இது வரவேற்கத்தகுந்ததுதான். மக்கள் பிரச்னைகளுக்கும் இதேபோல முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுத்தால் நன்றாக இருக்கும். நடக்குமா?!

இதற்கு அரசியல் கட்சிகள் குரல்கொடுக்க வேண்டும். இதன்மூலம் தேவையற்ற பல சிக்கல்களைத் தவிர்க்கலாம். ஒவ்வொரு மக்கள் பிரச்னையிலும் காலதாமதம் செய்வதால் எவ்வளவு பொருள் நட்டம், கால விரயம்? அப்பா காலத்தில் தொடங்கும் ஒரு சிக்கல் மகன் காலத்தில்கூட முடிவதில்லையே?! உலக அளவில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. நாம் என்றால் நமது அரசியல் தலைவர்களையும் சேர்த்துத்தான். அவர்களுடைய ஜனநாயகப் பண்புகளையும், மக்கள் சேவையையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கு எடுத்துக்காட்டுதான் நாம் இன்னும் ஜனநாயக நாடாக நீடிப்பது. நம்முடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகளில் இராணுவ ஆட்சி வந்து மக்கள் அல்லல்படும் வேளையில் இங்கு இன்னும் மக்களாட்சி நடக்கிறது.

இந்த நிலையில் நமது குறைகளை நாமேதான் களைய வேண்டும். அதில் ஒன்றுதான், தேர்தலுக்குப் பிறகு நடக்கும் இந்த நம்பர் விளையாட்டு.

இதில் செலுத்தும் கவனத்தை மற்ற சிக்கல்களிலும், குறிப்பாக மக்களுக்கு நலன் பயக்கும் திட்டங்களில் காட்டுவது வீட்டுக்கு, நாட்டுக்கு நல்லது. இதனால் மக்களாட்சியில் நம்பிக்கை வைத்திருக்கும் எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விடுவர். அத்துடன் பல ஆண்டுகளுக்கு நமது ஜனநாயகம் தழைத்திருக்கும். உலகின் பெரிய ஜனநாயக நாடு என்ற பெயரும் காப்பாற்றப்படும்.

இந்த நம்பர் விளையாட்டில் உச்சகட்டமாக, எடியூரப்பா சட்டசபையில் தனது பலத்தை நிரூபிப்பதற்கு முன்பே ராஜினாமா செய்துவிட்டார். இத்தோடு இந்த விளையாட்டு முடியவில்லை. மீண்டும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சிகளின் ஆட்சியிலும் (வந்தால்) தொடராமல் இருந்தால் நல்லது.