இரும்புத்திரை ஓர் இறுதி எச்சரிக்கை!

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம். நலம், நலமறியா அவா.

நான் உங்களிடம் ஒரு தகவலைச் சொல்வதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன். ஏன் கடிதம்? வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் என அறிவியல் நாகரிகம் வளர்ந்துவிட்ட காலத்தில் கடிதம் எழுதுகிறாயே என்று கேலி செய்வீர்கள் என அறிவேன். ஆனால், இனி இதுதான் நமக்கு பாதுகாப்பு, அதாவது நமது சுய தகவல்களுக்கு பாதுகாப்பு என்றாகிவிடும் காலமும் வரலாம். ஆம். இங்கே நான் நமது தகவல்களின் பாதுகாப்பு குறித்துத்தான் பேச விளைகிறேன்.

இன்றைய இணையதள உலகில் தகவல்கள் திருட்டு என்பது மிகப்பெரும் மோசடியாக உருவெடுத்துள்ளது. வீடுதேடி, பிக்பாக்கெட் என்ற காலமெல்லாம் மலையேறப்போகிறது. அதெல்லாம் தற்போது நாகரிகமில்லை, அத்தோடு அவை ‘Out of Date’. ஆம். நண்பர்களே. திருட்டிலும் நாகரிகம் வளர்ந்துவிட்டது. உட்கார்ந்த இடத்தில் இருந்து உங்களுடைய அனைத்துத் தகவல்களையும், அதாவது, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, வங்கிக்கணக்கு, கடன் கணக்கு என எல்லாவற்றையும் திருடிவிடலாம். அப்படியொரு காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆக, எச்சரிக்கையாய் வாழ வேண்டியது நமது கைகளில்தான் உள்ளது. ஆம். நமது ‘கைகளில்தான்’ (Smart Phone) தான் உள்ளது. இந்த ஸ்மார்ட் போன் நமது பாதுகாவலன் என்று தெரிந்திருப்பீர்கள். ஆனால் அதுவே நமக்கு எமனாகவும் கூடும்.

அண்மையில் வெளியான விஷால், அர்ஜூன், சமந்தா, டெல்லிகணேஷ் உள்ளிட்டோர் நடித்த ‘இரும்புத்திரை’ திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க நேர்ந்த-து. அதன் பின்னர் நான் உணர்ந்த, அதிர்ச்சியடைந்த, விழிப்புணர்வு பெற்ற தகவல்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம் எழுதுகிறேன்.

நல்லாசிரியர் ஒருவர் உதாரணங்களின் மூலம் கடைக்கோடி மாணவருக்கும் புரியும்படி பாடம் எடுப்பதுபோல், இப்படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், மிக எளிமையாக அனைவருக்கும் புரியும்படி, மக்களின் அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்து இப்படத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார்.

இன்றைய தேதியில் கடன் வாங்காதவர்கள் யாருமில்லை. நியாயமான தேவைக்காக, நேர்மையான முறையில் வங்கிகளை அணுகி முறையாக விண்ணப்பித்தால் நமது கோரிக்கை நிராகரிக்கப்படும். அதுபோல, தனது தங்கையின் திருமணச் செலவுக்காக கதாநாயகன் விஷால், அவர் ஒரு இராணுவ மேஜராக இருந்தபோதிலும் அவரிடம் வங்கிகள் கேட்கும் முறையான (-?!) ஆவணங்கள் இல்லாததால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

அப்போது அவரைத்தேடிவரும் ஒரு ஏஜெண்ட், கடன் வாங்க மாற்று வழியைக் கூறுகிறார். அங்கேயிருந்து திரைக்கதை சூடுபிடிக்கிறது. கடனும் கிடைக்கிறது. ஆனால், ஒருசில நாட்களில் அந்தப்பணம் வங்கிக்கணக்கில் இருந்து மறைந்துவிடுகிறது. அதுகுறித்து விஷால் தனது ஸ்டைலில் விசாரிக்கப்போக, அவரை மிரட்டுகிறார், ஓடஓட விரட்டுகிறார் இணையதள உலக ‘டான்’ அர்ஜூன். அப்போது இதுபோல் நிறையப்பேர் தங்களது பணத்தை இழந்து தவிப்பதைத் தெரிந்துகொள்கிறார். இருப்பினும், திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல், வில்லனிடம் சிக்கிக்கொள்கிறார் கதாநாயகன். இந்தப் போராட்டத்தில் தனது வேலையையும் இழக்கிறார். இந்நிலையில் தனது பணத்தைத் திரும்பப் பெற்றாரா விஷால்? தங்கையின் திருமணம் என்னவானது? ‘டானை’ வென்றாரா மேஜர்? என்பதையெல்லாம் நீங்கள் திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்றைய ‘ஸ்மார்ட்’ உலகத்திற்குத் தேவையான கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அறிவுரை சொல்லும் படமாக இருக்கும்போலிருக்கிறதே, போலாமா? என்றெல்லாம் சிந்திக்க வேண்டாம். ஒருவரிடம் கடன் பெறுவது என்பது விஷாலுக்குப் பிடிக்காத செய்கை. அதற்கு அவரது தந்தை (டெல்லிகணேஷ்) தான் காரணம். ஊரெல்லாம் கடன் வாங்கி வைத்திருப்பவர். அதனைக் கண்டு பொறுக்காமல், தாயை இழந்தவுடன், தங்கையையும், தந்தையையும் விட்டுவிட்டு இராணுவத்தில் பணியாற்றுகிறார். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், பக்கத்து வீட்டில் கடன் வசூலிக்கவந்த ஏஜெண்டை அடித்து துவைத்துவிடுகிறார். அப்போது இந்த அதிரடிக் கோபத்தைக் குறைத்தால்தான் மீண்டும் பணி என்று ஒரு நிலை வருகிறது, விஷாலுக்கு.

அதனால் மனோதத்துவ மருத்துவரான சமந்தாவை சந்திக்க நேர்கிறது. அது அப்படியே அழகான ஒரு காதல் தொடராக செல்கிறது. இதுவரை கதாநாயகிகள் வெறுமனே ‘டூயட்’ பாட மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டனர். இத்திரைப்படத்தில் அதெல்லாம் இல்லை. உண்மையான காதல், அழகான பாசப்பிணைப்புகள், நிறைவான உரையாடல்கள் மூலம் காதல் செய்கிறார் சமந்தா. இதுவும் இப்படத்தில் ஓர் அழகு.

சரி. நகைச்சுவை இல்லையா என்றால் அதுவும் இருக்கிறது. சின்னத்திரை புகழ் ரோபோ சங்கர், தனது பங்கை கதையோடு சேர்த்து கொண்டுசெல்கிறார். ஆனால் எங்கேயும் கதை, திரைக்கதை தடம்மாறிச் செல்லவில்லை. எதை நோக்கி கதை ஆரம்பிக்கிறதோ, அதை நிறைவு செய்கிறது படம். யுவன்சங்கர் ராஜா, தனது இசையால் நம்மை இருக்கையைவிட்டு நகர விடாமல் செய்கிறார். ஒளிப்பதிவு, கலை இயக்கம், எடிட்டிங் என அனைத்துத் தொழில்நுட்பங்களும் கதைக்கு வலு சேர்க்கின்றன. ஆக, ஒரு திரைப்படம் என்ற வகையில் இரண்டு மணிநேரம் மிக அழகாக செல்கிறது. திருப்தி.

அத்துடன், இன்று நாம் அதிமுக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு செய்தியை தௌ¢ளத் தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். உங்களுடைய அனைத்துத் தகவல்களும் திருடப்பட்டால் என்னவாகும்? அப்போது உங்களிடம் உள்ள பணம், பொருள், வீடு என எதுவுமே மிஞ்சாது. ஆக, இதுபோன்ற சூழ்நிலை நமக்கு வராமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் சொல்லித்தராவிட்டாலும், இத்திரைப்படம் பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அதனை நெத்தியடியாக சொல்லுகிறார் ‘ஸ்மார்ட்’ வில்லனாக வரும் அர்ஜூன். வழக்கம்போல் தேசப்பக்தியுள்ள கதாநாயகனாக நடித்திருந்தாலும்கூட, இதுபோல் ஆணித்தரமாக ஒரு நல்ல கருத்தை அவரால் சொல்லியிருக்க முடியாது. அவருக்கு ஒரு சல்யூட்.

இந்த விடுமுறை காலத்தில் சுற்றுலா, பொருட்காட்சி என்று போகாவிட்டாலும், இத்திரைப்படத்தை முக்கியமாக உங்கள் குழந்தைகள், பெற்றோர் என அனைவருடனும் திரையரங்கிற்கு சென்று பார்த்து விடுங்கள். ஏனெனில், தகவல்கள் நமது சொத்து (Information is Wealth). அதைக் காப்பாற்றிக்கொள்வதற்கான விழிப்புணர்வைப் பெறுவது நமது கடமை. இந்தியா, டிஜிட்டலாக உருமாறி வருகிறது. நாம் மட்டும் எதுவும் தெரியாமல் இருப்பது நமது முட்டாள்தனம். நமது அறியாமை, தகவல்கள் திருடர்களுக்கு வழிகாட்டும் பாதையாகிவிடும். இதுபோன்ற கதையைத் தேர்ந்தெடுத்து நடித்து, தயாரித்த விஷாலின் தைரியத்துக்கு ஒரு சல்யூட்.

நம்மைச் சுற்றியிருக்கும் இணையதள வலையில் சிக்காமல், அங்கே நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இத்திரைப்படம் நமக்கு ஒரு இறுதி எச்சரிக்கை.

நன்றி நண்பர்களே.

எனக்குத் தெரிந்த தகவலை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். நல்லது நினைப்போம். நல்லதைப் பார்ப்போம். பாதுகாப்புடன் வாழ்வோம். மீண்டும் சந்திப்போம்.

– கா.அருள்