‘தமிழுக்கு ஓர் இழப்பு – பாலகுமாரன்’

மக்கள் மனதில் தன் எழுத்துக்களால் வாழும் மண்ணைவிட்டு மறைந்த தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் அவரின் கதைகளுடனே பயணித்த நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர் பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் சமூக ஆர்வலர் கவிஞர் மீ.உமாமகேஸ்வரி ,கவிஞர் புவியரசு கோவை விஜயா பதிப்பக உர¤மையாளர் மு.வேலாயுதம் மற்றும் எழுத்தாளர் மருதூர் கோடீஸ்வரன் ஆகியோர்…

கவிஞர் மீ.உமாமகேஸ்வரி கூறுகையில்,”எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் கதைகளினூடேபயணித்த நினைவுகள் மனதில் காட்சிப்படமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. கல்லூரி காலத்தில் பாலகுமாரனைப் படிப்பதும்,  அவரின் கதாபாத்திரங்ளைப் பற்றி விவாதிப்பதுமாக எங்கள் இலக்கியப் பொழுதுகள் கழிந்தன.

பாலகுமாரனின் கதாபாத்திரங்கள் வித்தியாச மானவர்கள். அவர்களின் அக உணர்வுகள் மிகமிக நுட்பமானவை. பாலகுமாரனின் வசீகரமான எழுத்து நடையில் கதாபாத்திரங்கள் மிளிரத் தொடங்கி வாசகர்களை வாரியணைத்துக் கொள்ளும். இவரின் பெண் கதாபாத்திரங்கள், காதலும் விடுதலை உணர்வும் மிக்கவர்களாக இருந்தனர். கதைக்கான தலைப்புகளில் கவித்துவமும், அந்தகதையின் உள்ளுறையும் உறைந்து கிடக்கும்.’இரும்புக் குதிரைகள்’, ‘மெர்க்குரிப்பூக்கள்’ உள்ளிட்ட பல்வேறு கதைகளின் தலைப்புகளே ஆயிரம் செய்திகளை வாசகனுக்குக் கடத்தி விடும் தன்மை வாய்ந்தவை. இவரின் சிலகதைகளில் இடையிடையே வரும் கவிதைவரிகள்பாலகுமாரன் மிகச் சிறந்தகவிஞர் என்பதனைஉணர்த்தி விடும்.அதிலும் ‘இரும்புக் குதிரைகளின்’ கவிதை வரிகள் என்றும் மறக்க இயலாதவை.

‘சவுக்கடி பட்ட இடத்தை
நீவிடத் தெரியா குதிரை
கண்மூடி வலியை வாங்கும்
அதுவுமோர் சுகம் தானென்று
கதறிட மறுக்கும் குதிரை
கல்லென்று நினைக்க வேண்டாம்
கதறிட, மேலும் நகைக்கும்
உலகத்தை குதிரை அறியும்’

என்ற வரிகள் எத்தனை அடர்த்தியானவை என்பதனை இப்பொழுது உணர்கிறேன்.

‘அன்பே’ தன் கதைகளின் ஊடுபாவாக இருக்கிறது என்றுரைத்த பாலகுமாரன் அன்பு, மெலிதானகாமம், பொறாமை, ஆர்ப்பரிப்பு, மனிதமனதின்சஞ்சலம், பழிவாங்கும் தன்மை, பனியென உறைதல், கடும் வெயிலென சுடுதல், மழையென விழுதல் எனஅத்தனை உணர்வுகளையும் தன் கதைகளில் இழைந்திருந்தார்.

சிறுகதைகள், தொடர்கள் தாண்டி பெரு நாவல்களை எழுதிய அசாத்திய திறமைக்காரர். இவரின் ‘உடையார்’ நாவல் தஞ்சை பெருவுடையார் கோயிலின் பெருங்கதையை சொல்லிய பெருங்கதை. கங்கை கொண்ட சோழனையும் எழுதித் தீர்த்தது இவரின் விரல்கள். தரை இறங்காது பறந்து கொண்டேயிருக்கிற பறவையைப்போல இடைவெளிவிடாது 200க்கும் மேற்பட்ட நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதிக் கொண்டேயிருந்தார்.

மையப் புள்ளியாக ஒரு கருவை எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி கதையை பின்னிக் கொண்டு போகிற அசாத்தியதிறமை இவருக்குண்டு. பெண் வாசகிகளை தன் கதைகள்பக்கம் திருப்பிய பாலகுமாரன் ஆகச்சிறந்தகதை சொல்லி.
காலங்களின் குதிரைப்பாய்ச்சலில் பாலகுமாரனின் கவனம் ஆன்மீகத்தை வசீகரித்துக் கொண்டது. அவரின் கதைகள் ஆழ்மன விசாரணைகளாக மாறின.கதை, கவிதை, திரைத்துறை எழுத்து, திரைஇயக்கத்தில் ஈடுபாடு என தன் எழுத்தை மடைமாற்றிக் கொண்டார். ஆயினும் ஆளுமை மிகுந்த அவரின் படைப்புகளை என் மனம் பற்றிக் கொண்டு ஊஞ்சலாடுகிறது. சென்று வாருங்கள் பாலகுமாரரே….”

கவிஞர் புவியரசு கூறுகையில், “எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களை மிகச் சிறிய வயதிலிருந்தே எனக்குத¢ தெரியும். ‘புதிய தலைமுறை’ பத்திரிகையில் பணியாற்றி, தமிழ் இலக்கியத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவர் மிக நல்ல எழுத்தாளர், அனைத்து மக்களையும் கவரும் வகையில் எழுதக்கூடியவர். ஆரம்ப காலத்தில், சமூகம் சார்ந்த பிரச்னைகளை எழுதி வந்த அவர், பிற்காலத்தில், பக்தி நூல்களை எழுதினார்.

அவர் எழுதிய ‘உடையார்’ மிகச்சிறந்த காவியம் என்றே கூற வேண்டும். அவர் திரைப்படங்களில் பணியாற்றியபோது நான் அவர் அருகில் இருந்து இருக்கிறேன். பல துறைகளில் அவர் ஈடுபட்டு வந்தார். பாலகுமாரன் அவர்களது இழப்பு, தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் மிகப்பெரிய இழப்பு” என்றார்.

கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம் கூறுகையில், “எழுத்தாளர் பாலகுமாரனின் மறைவு பேரிழப்புதான். வாசகத்தளத்தில் புதிய சகாப்தத்தை உருவாக்கியவர். ஜெயகாந்தன், அகிலன், நா. பார்த்தசாரதி என்கிற பல ஆளுமை மிக்க படைப்பாளிகளின் சமகாலத்தில் எழுதத் துவங்கியவர். இறுதிவரை தன் படைப்புகளால் மக்கள் மனதில் தன்னை தக்க வைத்துக் கொண்டவர்.

1978 ஆம் வருடம் ‘சாவி’ பத்திரிகையில் தொடராக வந்து புத்தகமாக வெளியிடப்பட்ட அவரது நூல் மெர்க்குரிப்பூக்கள். இந்த நாவலின் வெளியீட்டு விழா சாவி அவர்களின் தலைமையில் டவுன்ஹால் விக்டோரியா அரங்கில் நடைபெற்றது. அந்த நிகழ்வுகள் இன்னும் என் மனதில் பசுமையாக உள்ளது.

அந்த நாவலின் இடையே கதாநாயகன் சங்கரன், ‘கோவைக்கு சென்று வேலாயுதம் அவர்களைச் சந்தித்து ஆலோசனை கேட்க வேண்டும்’ என்று ஒரு வசனம் வரும். ‘சாவி’ இதழில் தொடராக வந்த கதையை படித்துவிட்டு ஏராளமான வாசகர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு பேசிய நினைவுகளை மறக்க இயலாது.

1984 ஆம் வருடம் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் மணி விழா அசோகா பிளாசா வாசகர் திருவிழாவில் நடைபெற்றது. அதிலும் அவர் பங்கேற்று சிறப்பித்தார். அவருடைய பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு சாகித்ய அகாதமி விருது இன்னும் வழங்கப்படவில்லை. அதனை அவர் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் என்பதை இங்கே இப்போது பதிவு செய்ய விரும்புகிறேன்” என்றார்.

எழுத்தாளர் மருதூர் கோடீஸ்வரன் கூறுகையில், “சிறுகதைகளில் நாட்டம் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார் எழுத்தாளர் பாலகுமாரன். மரணத்திற்கு அப்பால் உள்ள உலகம் பற்றி ‘சொர்க்கம் நடுவிலே’ என்கிற நாவல் புதிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் எழுதுவது தான் தன் வாழ்வின் லட்சியம் என்று கூறிய பாலகுமாரன் அவர்கள் இன்று இல்லை என்பது பேரதிர்ச்சியாக உள்ளது.

இவர் தனது நாவல்களில் குடும்பம் என்பதின் முக்கியத்துவம் குறித்தும், பெண்ணியம் குறித்தும், சமூக மேம்பாப்டு குறித்தும் எளிய இனிய நடையில் எழுதக்கூடியவர். இதன்மூலம் மக்களிடைய சமூக விழிப்புணர்வை தந்து சகமனித வாழ்கையை வெளிப்படுத்தினார். வாசகர் இவரை எழுத்தாளர் என்று மட்டுமே கொள்ளாது, வழிகாட்டியாகவும் குருவாகவும் ஏற்றுக் கொண்டு மிகுந்த உயர் இடத்தில் இவரைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்”.