மெட்ரோ நகரங்களில் 75% ஓமைக்ரான் கண்டறியப்படுகிறது – என்.கே.அரோரா

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் மிக விரைவாகவே 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் 2ம் தேதி இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தியாவில் நாளுக்குநாள் இதன் பரவலின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஓமைக்ரான் தொற்றால் இதுவரை இந்தியாவில் 1,700-க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 123 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதோடு இருவர் உயிரிழப்பை சந்தித்துள்ளனர்.

ஓமைக்ரான் தொடர்பாக நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா பேசுகையில், இந்தியாவில் முதல் முறையாக டிசம்பர் முதல் வாரத்தில் ஓமைக்ரான் கண்டறியப்பட்டது. கடந்த வாரம், தேசிய அளவிலான கொரோனா பாதிப்புகளில் 12% அளவுக்கு ஓமைக்ரான் இருந்தது. பாதிப்பு அளவு இந்த வாரத்தில் 28% ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் ஏற்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது என்றும் கடந்த நான்கு-ஐந்து நாட்களில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இது உறுதி செய்யப்படுகிறது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய மெட்ரோ நகரங்களான மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் தான் 75% அளவுக்கு ஓமைக்ரான் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

15 முதல் 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கியுள்ளன. ஆனால் இவ்வாறு தடுப்பூசி செலுத்துவது பாதுகாப்பானதா என்ற சந்தேகம் ஒருபுறம் எழுந்துள்ளது. இது முற்றிலும் பாதுகாப்பானது.

“ஆரம்பத்தில் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் போது, ​​ஆய்வுகள் செய்யப்பட்ட அந்தக் காலகட்டத்திற்கு மட்டுமே ஒட்டுமொத்த shelf-life சிக்கல்கள் கிடைத்தன. இப்போது அனுபவம் மற்றும் நேரத்துடன், தடுப்பூசி தயாரிக்கப்பட்டதிலிருந்து, பல்வேறு விலங்கு ஆய்வுகள் மூலம் shelf-life மதிப்பீடு செய்யப்படுகிறது. தடுப்பூசி பயனுள்ளது மற்றும் செயலில் உள்ள ஆற்றல் 12 மாதங்கள் வரை பராமரிக்கப்படுகிறது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.