இலவசமாக உடற்பயிற்சி கற்றுத் தந்த இடத்தை அகற்றக் கூடாது – விவேகானந்தர் பேரவை

மாணவர்களுக்கு இலவசமாக உடற்பயிற்சி கற்றுத்தந்த இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளதாகவும், மீண்டும் இந்த கூடத்தை அமைக்க உதவ வேண்டும் என்று வலியுறுத்தி விவேகானந்தர் உடற்பயிற்சி நிலைய நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து பயிற்சியாளர் ஜலேந்தரன் கூறியதாவது:

“கோவை மாநகராட்சி ஒத்தச்செக்கார வீதியிலுள்ள மாநகராட்சி பள்ளிக்கு அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. பராமரிப்பின்றி இருந்த இந்த இடத்தில் கடந்த 1985ம் ஆண்டு உடற்பயிற்சி நிலையத்தை நடத்த மாநகராட்சி நிர்வாகமே சுவர் கட்டு இரும்பு கேட் அமைத்து கொடுத்தது.

அப்போது முதல், அங்கு, பளு தூக்கும் போட்டிகளுக்கு மாணவர்கள் தயாராகி வந்தார்கள் அதோடு பல மாணவர்களுக்கு இலவசமாக உடற்பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இதில் பயிற்சி பெற்ற பலர் அகில இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், ஓவியம், சிலம்பம் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டது.

அதோடு, வாரந்தோறும் 3 ஆயிரம் ஏழை மக்களுக்கு உணவு தயாரித்து இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

இதனிடையே கூடத்தை ஆக்கிரமிப்பு என்று கூறி அகற்றியதோடு, மாநகராட்சி அதிகாரிகள் கடிதத்தைக் கொடுத்து, எங்களுடைய உடற்பயிற்சி சாலைக்கு எவ்வித அனுமதியும் இல்லை என்று உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.

ஏழைகளுக்கு உதவி வந்த இந்த உடற்பயிற்சி நிலையத்தை வேறு இடத்தில் அமைத்து கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.