பஞ்சமி நிலங்களை மீட்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டுத் தர வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்கட்கிழமை மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் இருக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பஞ்சமி நில சட்டம் ஏற்படுத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் வருவாய் அதிகாரிகள் இதனை முறையாக கண்காணிப்பதில்லை. மேட்டுப்பாளையத்தில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உரிய மக்களுக்கு சேராமல் உள்ளது.

இந்த இடங்களை மீட்டு அங்குள்ள 128 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் எங்கள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. இந்த சூழலில், இன்று மீண்டும் மனு அளித்துள்ளோம். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்களை நடத்துவோம் எனக் கூறியுள்ளனர்.