உழுதுண்டு வாழ்வாரே வாழ்(சா)வார்

எல்லாவற்றையும் இழந்தவர்களை ‘நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள்’ என்று சொல்வது வழக்கம். இன்று விவசாயிகளின் நிலைமையும் கிட்டத்தட்ட அதுதான். தங்களது உயிரைத்தவிர வேறெதுவும் இல்லாமல் நடுத்தெருவில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.

தற்போது தில்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தைப் பார்த்தாலே இது புரியும். அவர்களைக் கேட்க ஒரு நாதி இல்லை. அவர்களுக்கு ஆதரவு தர, அவர்களது குறைகளைத் தீர்க்க இதுவரை யாரும் முன் வரவில்லை. கூட நின்று போட்டோ எடுக்கிறார்கள், செல்ஃபி எடுக்கிறார்கள், செய்தி ஊடகங்களுக்கு அறிக்கை, பேட்டி அளிக்கிறார்கள். அவ்வளவுதான். அதற்குமேல் ஒன்றும் இல்லை.

மழை இல்லை, நீர்ப்பாசனம் இல்லை, வெட்டிய கிணற்றில் நீர் இல்லை, மேலும் கிணறு வெட்டுவதற்கு பணம் இல்லை, மற்ற செலவுகளுக்கும் தகுந்த முதலீடு இல்லை, கடனுதவி தந்தாலும் கொடுத்த வங்கி அதிகாரிகள் கந்து வட்டிக்காரனைவிட மோசமாக நடக்கிறார்கள், தேவையான விவசாயத் தொழிலாளர்கள் இல்லை. எல்லா கஷ்டங்களையும் தாண்டி விளைவித்தாலும் அந்த விளைப்பொருட்களுக்கு தகுந்த விலை இல்லை, என்ன தான் செய்வார் விவசாயி?  என்னதான் செய்கிறது அரசாங்கம்?

விவசாயத்துறை அதிகாரிகள் நன்றாக வாழ்கிறார்கள், விவசாயப்பாடம் நடத்தும் பேராசியர்கள் நன்றாக வாழ்கிறார்கள், விவசாயப்பாடம் படிக்கும் மாணவர்கள் நன்றாக வாழ்கிறார்கள், விவசாயிகளுக்கு உரம், பூச்சி மருந்து விற்பவர்கள் நன்றாக வாழ்கிறார்கள், விவசாயிகளிடம் விளைபொருட்கள் வாங்கி விற்கும் தரகர்கள், வணிகர்கள், சந்தை, கடைக்காரர்கள் என விவசாயியைச் சுற்றியுள்ள எல்லாரும் நன்றாக வாழ்கிறார்கள். அதைவிடவும் விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தை விற்றால் அதை வாங்கும் ரியல் எஸ்டேட்காரர்கள் நன்றாக வாழ்கிறார்கள், ஆனால் விவசாயி மட்டும் நன்றாக வாழவில்லை, வாழ முடியவில்லை. ஏன்?

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த போது வையத்து நாடுகளில் எல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி நின்றது. அப்போது மக்கள் தொகை கிட்டத்தட்ட முப்பது கோடி, உணவு உற்பத்தி கிட்டத்தட்ட 500லட்சம் டன்கள்; இன்று மக்கள் தொகை சுமார் 130 கோடி, உணவு உற்பத்தி ஐந்து மடங்கு பெருகியிருக்கிறது. இது யாருடைய உழைப்பு? தன்னுடைய இரத்தத்தையும், வேர்வையையும் நமக்காகத் தந்த இந்திய விவசாயிகளின் உழைப்பு. இவ்வளவு பெரிய சாதனையைச் செய்த விவசாயிகளின் நிலை எப்படி இருக்கிறது? நடுத்தெருவில் போராடுவதும், தற்கொலை செய்வதும் தான் விவசாயியின் தலையெழுத்தா?

இதுதான் சுதந்திர இந்தியாவின் சாதனையா? சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ராக்கெட்டுகள் விடுகிறோம். செல்போன், கம்பியூட்டர் என்று வளர்கிறோம். ஆனால் விவசாயத்தில் மட்டும் நிலைமை தலைகீழ். ஊருக்கெல்லாம் உணவளித்தவர்கள் இன்று ஊரைவிட்டு ஓடும் நிலையில் இருக்கிறார்கள். விவசாயப் பணிகளைச் செய்ய ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இந்த தலைமுறையினர் விவசாயப்பணிகளைச் செய்து அழிய விரும்பவில்லை. கொத்தடிமை வேலை கிடைத்தாலும் சரி என்று நகர்ப்புறங்களை நோக்கி படையெடுக்கிறார்கள.

இன்னொரு பக்கம் விவசாய முறைகளும் மாறிவிட்டன. அந்த காலத்தில் தோட்டத்தில் வளர்க்கும் காளையைக் கொண்டு ஏர் உழ முடியும். இன்று லட்சக்கணக்கில் கடனாவது வாங்கி டிராக்டர் வேண்டும். கடைசிக்கு வாடகைக்கு எடுக்க வேண்டும், தண்ணீர் இல்லை என்று கடன் வாங்கி ஆயிரம் அடிக்கு போர் போட்டாலும் ‘வெறும் காத்து தான் வருகிறது’. கூடவே மாதா மாதம் கடன் தொகையும், வட்டியும் கட்ட வேண்டிய நிலையும் வருகிறது. நிலத்துக்கு தொழுஉரம் போட்ட காலம் போய் ஆயிரக்கணக்கில் செலவு செய்து மூட்டை, மூட்டையாய் செயற்கை உரங்களைப் போட அரசே சிபாரிசு செய்கிறது. பலஆயிரம் பூச்சிகள், அதைக் கொல்ல பல நூறு விஷ மருந்துகள் என்று ஒரு பக்கம் இருக்கிறது. எல்லாமே கடனில் தான்.

போர்வெல் போடக் கடன், டிராக்டர் வாங்க கடன், மாடு வாங்க கடன், விவசாயக் கூலிகளுக்கு தர வேண்டிய பணமும் கடன், பூச்சி மருந்து கடன் என்று எல்லாமே கடனில் தான் ஓடுகிறது. அரைசாண் வயிறு வளர்க்க, ஒரு முழம் கோவணம் கட்ட இந்த கஷ்டம்பட வேண்டுமா என்று யோசிக்கும் விவசாயிகள் படிப்படியாக தங்கள் விவசாயத்தில் இருந்து வெளியேறி வருகிறார்கள். நிலத்தை தரிசாக போடுகிறார்கள், பிறகு இதற்காகவே காத்திருக்கும் ரியல் எஸ்டேட் காரர்களுக்கு விற்று விட்டு கிடைக்கின்ற பணத்தோடு எங்காவது கட்டடத்தில் வாட்ச்மேனாக போய்விடுகிறார்கள்.

இன்னொருபக்கம் கோடிக் கணக்கான நகர மக்கள் தங்கள் உணவுக்கு இந்த கோவணம் கட்டிய மன்னர்களை, ஆம், இந்த வறுமை தாண்டவமாடும் விவசாயிகளைத் தான் நம்பியிருக்கிறார்கள். புழுத்ததோ, பூச்சி அரித்ததோ ரேஷன் அரிசி சாப்பிட்டு உயிர் வாழும் மனிதர்கள் இன்னும் இந்தியாவில் கோடிக் கணக்கில் உள்ளனர். இந்த நிலைக்கு பொறுப்பேற்க வேண்டிய அரசாங்கம் உள்நாட்டு விவசாயத்தைக் கொன்றொழித்து விட்டு வெளிநாட்டில் இருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டுகிறது. முன்பிருந்த ராகி, சோளம், கம்பு, சாமை, தினை ஆகியவற்றைக் காணவில்லை; அதற்கு பதிலாக ஓட்ஸ் போன்ற தானியங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்ளூர் நிலக்கடலை, நல்லெண்ணெய் ஆகியவற்றைக் காணவில்லை. பதிலாக, பாமாயில் கப்பல், கப்பலாக வந்து இறங்குகிறது. பிறகு விவசாயம் அழியாமல் என்ன செய்யும்?

இந்த விவசாயிகளின் துன்பம் இன்று திடீரென தோன்றியதல்ல; 1970களில் கோயம்புத்தூரில் நடை பெற்ற மாட்டுவண்டி போராட்டம் வரலாற்றுப்புகழ் பெற்றது. தமிழகத்தை நிலைகுலையச் செய்த அந்தப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். அதுபோல இன்னொரு முறையும் நடைபெற வேண்டுமா?

ஐ.டி.படித்தவன் அமெரிக்காவில் செட்டில் ஆகலாம். மற்றவர்கள் ஏதோ ஒரு வகையில் ஒரு பிழைப்பைத் தேடிக்கொள்ள முடியும். விவசாயிக்கு தனது பூமியை விட்டால் போக்கிடம் ஏது? எனவே விவசாயிகளின் குரல் அரசாங்கத்தின் அதிகார காதுகளுக்கு எட்ட வேண்டும். வருடத்தில் ஒரு நாள் நடத்தும் ஜல்லிக்கட்டுக்கு குமுறி, கொந்தளித்து, பொங்கி எழுந்த நமது இளைஞர்கள், பொதுமக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதற்கும் தேவையாக உள்ள நமது வாழ்வாதாரமான விவசாயிகளின் குறைகளில் கவனம் செலுத்தி அவர்களை ஆதரிக்க வேண்டும்.

நிலைமை இப்படியே ஆயிரம் அடி போர்வெல், வங்கிக்கடன் வசூல், ஜப்தி, விவசாயி தற்கொலை, தலைநகரில் விவசாயிகள் போராட்டம் என்று போனால், விவசாயம் இனி மெல்லச்சாகும்; கூடவே நாமும்…

 

மக்கள் பார்வை:

கந்தசாமி (விவசாயிகள் சங்கம் கோயம்புத்தூர்):

விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கதக்கது. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும். சும்மா இருந்த விவசாயிகளை கடனாளியாக்கிவிட்டு  இன்று தற்கொலை செய்யும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது.

சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி):

நம் நாட்டின் முதுகெலும்பாய் விளங்கக் கூடிய விவசாயிகளுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண குடிமக்களின் கதி? விவசாயிகளின் போராட்டத்திற்கு செவி சாய்க்காத தமிழகம் நம் நாட்டை விற்க தயாராகிக் கொண்டிருக்கிறது. இது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். ஒன்றிணைந்து போராடுவோம், விவசாயத்தை காப்போம்.

சௌந்தரராஜன் (நடிகர்):

நாம் எவ்வளவோ இழந்திருக்கிறோம். ஆனால் விவசாயம் நம் நாட்டின் எதிர்காலம் அதை அழிய விடக் கூடாது. டெல்லியில் நடக்கும் விவசாய போராட் டத்துக்கு குரல் கொடுப்போம்.

பவித்ரா (மாடல்):

கொங்கு மண்ணில் பிறந்தவள் நான். நாம் உண்ணும் உணவில் தாய்மண்ணின் மனம் இருந்தால் விவசாயத்துக்கு குரல் கொடுப்போம். விவசாயத்தை மீட்டு எடுப்போம்.

மனோஜ் (மென்பொறியாளர்):

என் தாய்நாட்டில் பல கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் விவசாயமும் ஒன்று. விவசாயி அழிந் தால் தாய் நாட்டில் உள்ள மண்வாசனை காணாமல் போய்விடும். என் விவசாய மக்களுக்கு என் ஆதரவு என்றும் இருக்கும்.

விக்கி (மென்பொறியாளர்):

என் நாட்டில் உள்ள மக்கள் கஷ்டப்படுவதை பார்த்து என் நெஞ்சு பொருக்கவில்லை. குரல் கொடுப்போம் விவசாயத்திற்காக போராடும் மக்களுக்கு.

லக்ஷ்மண் (தொழிலதிபர்):

மானமே பெரிதென நினைக்கும் தமிழக விவசாயிகளுக்காக நாமும் போராடுவோம்.

– ஆசிரியர் குழு