முன்னெச்சரிக்கையும் முன்னேற்பாடும்!

2020–ல் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா நம் அனைவரின் வாழ்விலும் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக வாழ்வாதாரச் சிக்கல், பொருளாதார நெருக்கடி போன்றவற்றையும் எதிர்கொண்டோம்.

கொரோனா பெருந்தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்து நிலைமை சீராகி இயல்பு நிலைக்கு திரும்பும் தருணத்தில், கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் பரவி, நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்டா பரவலின் வேகத்தை விட இதன் பரவும் வேகம் அதிகமாக உள்ளது எனவும் இது அபாய கட்டத்தை எட்டியுள்ளது எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஓமைக்ரானால் மூன்றாம் அலை ஏற்படுமா என்ற அச்சமும், இதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கைகொடுக்குமா என்ற கேள்வியும்  எழுந்துள்ளது.

இதுகுறித்த பல சந்தேகங்களை கோவையைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையின் மருத்துவர்களிடம் கேட்டபோது அவர்கள் அளித்த பதில்களின் தொகுப்பு:

தடுப்பூசி செலுத்தியிருந்தால் ஓமைக்ரான் தாக்கம் குறைவே

டாக்டர் நிர்மலா, டீன், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை   

கோவையைப் பொறுத்தவரை கொரோனாவினால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தற்போது உருமாற்றம் அடைந்துள்ள ஓமைக் ரான் தொற்று இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் ஏற்படுகிறது என பதிவாகியுள்ளது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஓமைக்ரான் பாதிப்பு ஏற்படாது என்று கூறிவிட முடியாது. ஆனால் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும். மேலும் ஓமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதும் மிக மிக குறைவு தான்.

கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலையினால் ஏற்பட்ட தாக்கம் அதிகமாக இருந்தது. அதனால் அப்போது கோவை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் இப்போதும் உள்ளது. எனவே மூன்றாம் அலை ஏற்பட்டால் அதை எதிர்கொண்டு சமாளித்து விடவும் முடியும்.

மிதமான பாதிப்பு ஏற்படுபவர்கள் ஆங்காங்கே அருகில் உள்ள மருத்துவமனைகளிலே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். மேலும் தீவிர பாதிப்பு இருந்தால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்றவற்றில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். மிதமான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான சிகிக்சை மையத்தை அமைப்பதற்கான போதுமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருகிறது.

மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயார்!

டாக்டர் சுகுமாரன், டீன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

குளிர்காலத்தில் நமது உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறையும் சமயத்தில், ஓமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இது போன்ற நேரத்தில் வயதானவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா போன்றவை இருந்தால், அவர்கள்  ஓமைக்ரான் தொற்றினால் பாதிப்படைய வாய்ப்புள்ளது. ஆனால் மிக அதிகளவில் பாதிப்பு இருக்காமல் மிதமான அளவில் பாதிப்படையலாம்.

உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் குறித்த மதிப்பீட்டு தகவல்கள்  முழுமையாகத் தெரியவில்லை. அதனால் தற்போதைய சூழ்நிலையில் குறிப்பிட்ட வயதினர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்று கூற முடியாது.

ஓமைக்ரான் மற்றும் டெல்டா என்ற இரண்டு வைரஸ்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளையே வெளிப்படுத்துகின்றன. இரண்டிற்கும் காய்ச்சல், தொண்டை வலி, இருமல், தசைவலி போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

ஓமைக்ரான் தொற்று ஏற்பட்டவர்களில், அவர்களின் நுரையீரலின் மேல் சுவாசப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும், நுரையீரலுக்குள் ஆழமாக சென்று பாதிப்பை ஏற்படுத்துவதில்லை எனவும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். டெல்டா வைரஸ் பரவும் வேகத்தை விட ஓமைக்ரான் பரவலின் வேகம் 3 மடங்கு அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், இதுவரை தடுப்பூசியே செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு ஓமைக்ரான் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் இனிவரும் காலங்களில் 24 மணிநேரமும் கூடுதல் படுக்கை வசதியுடன் சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 150 படுக்கைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தயாராக உள்ளோம். தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருக்கும் வண்ணம் எங்கள் மருத்துவமனை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள எங்கள் மருத்துவமனை தயாராக உள்ளது.

More knowledgeable, Well-equipped

Dr.Ragupathy Veluswamy, CEO, GKNM Hospital

Compared to first and second wave we are well equipped to manage and deal with the third wave if it becomes an issue. Our physicians are more knowledgeable about the disease and treatment process. We never eased up on COVID 19 precautions.

உயிரிழப்பை ஏற்படுத்தாது!

டாக்டர் வருண் சுந்தர மூர்த்தி, தொற்று நோய் சிகிச்சை நிபுணர், கே.எம்.சி.ஹெச்

ஓமைக்ரான் மற்ற நாடுகளில் வேகமாக பரவுவதைப் போல இந்தியாவிலும் அதே வேகத்தில் தான் பரவும். நோயின் தீவிரத் தன்மை மட்டும் குறைய வாய்ப்புள்ளது. ஏனென்றால் இந்தியாவில் தடுப்பூசி போதுமான அளவு செலுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் ஏற்படும் சூழ்நிலையை இந்தியாவிலும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஓமைக்ரான் பாதிப்பு அதிக தீவிரமாகவும், உயிரிழப்பையும் ஏற்படுத்தாது.

ஓமைக்ரான் பரவலின் வேகம் மருத்துவத்துறையில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும். நோயாளிகள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் தீவிரமாக இருப்பவர்களுக்கு கொரோனா என்றில்லாமல் வேறு எந்த தொற்று நோய் ஏற்பட்டாலும் பாதிப்பு சற்று தீவிரமாகவே இருக்கும்.

இரண்டாம் அலையில் அதிக பாதிப்பு ஏற்பட்ட போது அதை சமாளிக்கக் கூடிய வகையில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருந்தது. மருந்து போன்றவற்றிக்கு எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை.  தற்போது மூன்றாம் அலை ஏற்பட்டால் எதிர்கொள்ளக்கூடிய வகையில் இட வசதி, படுக்கை வசதி, மருத்துவர்கள், மருந்துகளின் இருப்பு என தேவையான அனைத்தும் போதுமான அளவு உள்ளது.