15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த திட்டம்

கோவை: 15 முதல் 18 வயதுகுட்பட்ட மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே சென்று தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஜனவரி 3-ந் தேதி முதல் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஜனவரி 10-ம் தேதி முதல் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 33 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 3-ந் தேதி முதல் பள்ளிகளுக்கே சென்று நேரடியாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கோவையில் முதற்கட்டமாக 15 முதல் 18 வயது வரை உள்ள 22, 800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறோம். கோவை மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக அரசு பள்ளி மாணவர்கள் 22, 800 பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அருகில் உள்ள அரசு பள்ளிகளில் வருகின்ற ஜனவரி 3-ந் தேதி முதல் நேரடியாக பள்ளிக்கு சென்று தடுப்பூசிகளை செலுத்த உள்ளோம். படிப்படியாக அடுத்த கட்டமாக கோவை மாநகராட்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பள்ளியிலேயே நேரடியாக தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் நேரடியாக ஆன்லைனில் கோவின் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொரோனா, ஒமைக்ரான் நோய்த்தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.