தங்க கவச உடையில் ஈச்சனாரி விநாயகர்

கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு மூலவரான விநாயகர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

2022 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்கள் தேவாலயங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கோவில்கள் தேவாலயங்களில் அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் வழிபாட்டு தலங்களில் வழிபட்டு வருகின்றனர்.

கோவையில் நள்ளிரவில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிரார்த்தனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அதிகாலை முதல் கோவையில் உள்ள இந்து கோவில்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு காலை முதலே மக்கள் கோவிலில் வழிப்பட்டு வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகத்தினரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் இருப்பதற்காக உடனுக்குடன் தீபாராதனை காண்பித்து அனுப்பி வைக்கின்றனர். கோவில் வளாகத்திற்குள் பொதுமக்கள் அமர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் உடனுக்குடன் சாமி தரிசனம் செய்துவிட்டு பொதுமக்கள் வெளியேறுகின்றனர்.