யானைகள் மீது பட்டாசுகளை வீசி எறியக் கூடாது வனத்துறையினர் எச்சரிக்கை

கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளின் மீது பட்டாசுகளை வீசி எறியக் கூடாது என, வனத்துறை எச்சரித்துள்ளது.

கோவை புறநகர் பகுதிகளில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், நரசிம்ம நாயக்கன்பாளையம், பெரிய நாயக்கன்பாளையம் வட்டாரங்களில் மலையோர கிராமங்களில், தினசரி இரவு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கிராமங்களில் ஒரு சில இடங்களில், ஊருக்குள் புகும் காட்டு யானைகளின் மீது பட்டாசுகளை வீசி எறிகின்றனர்.

இதனால் காட்டு யானைகள் உடலில் தீக்காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஊருக்குள் காட்டு யானைகள் நுழைந்தால், உடனடியாக அப்பகுதியில் இருக்கும் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு தகவல் தெரிவித்தல் வேண்டும்.

யானைகளை விரட்ட பட்டாசுகளை வீசக்கூடாது. அவை வரும் பாதையின் ஓரத்தில் வெடிக்கலாம். யானைகளின் மீது பட்டாசு கொளுத்திவீசும் நபர்கள் மீது, வனத்துறை சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை வனச்சரகத்தில் நேற்று முன்தினம் மூன்று இடங்களிலும், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் தலா, 2 இடங்களிலும் சிறுமுகை வனச்சரகத்தில் ஒரு இடத்திலும் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன.

இப்பகுதிகளில், மலையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.