5 மாநில தேர்தல்: கொரோனா நிலவரம் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு

ஐந்து மாநில தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதாக மத்திய சுகாதாரத் துறை செயலாளருடனான ஆலோசனைக்குப் பின், தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையம் ஜனவரி மாதம் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து மாநிலத் தேர்தல்களில் பணியாற்ற உள்ள அரசு பணியாளர்களுக்குத் தேவையான தடுப்பூசி இருப்பில் உள்ளதா என ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் படி சுகாதார துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்றிய சுகாதாரத் துறையின் அறிக்கை மற்றும் உத்தர பிரதேசத்தில் தேர்தல் ஆணையர்களின் மூன்று நாள் சுற்றுப் பயணத்தில் பெறப்படும் கள நிலவரம் உள்ளிட்டவை அடிப்படையில், கூடுதல் கொரோனா நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் இரண்டாம் தவணை தடுப்பூசி 80% தாண்டியுள்ள நிலையில், மற்ற மூன்று மாநிலங்களில் பெரிய அளவில் தடுப்பூசி போடப்படவில்லை. எனவே, தேர்தலுக்குள் 100% தடுப்பூசி பயன்பாட்டை இந்த 5 மாநிலங்களிலும் கொண்டுவர சுகாதார துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சுகாதார செயலாளரால் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட தகவலின்படி, உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் 100% முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உ.பி.யில் 85%, பஞ்சாபில் 78-79% மற்றும் மணிப்பூரில் 70% முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் அச்சுறுத்தலைப் பொறுத்தவரை, தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் பாதிப்பு மிக குறைவாக உள்ளதாக சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், ஐந்து மாநிலத் தேர்தல்களை தள்ளிவைக்கை வேண்டிய அவசியம் இல்லை என்கிற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்துள்ளதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

SOURCE: KALAINGNAR SEITHIKAL