டெங்கு காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு, 15 குழந்தைகள் உட்பட, 28 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையில் கடந்த சில நாட்களாக, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சுகாதாரப்பணியாளர்கள் பல்வேறு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு, 20க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற, அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தற்போது, அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு,15 குழந்தைகள்,13 பெரியவர்கள் என, 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மக்கள் தங்கள் வீட்டை சுற்றிலும், நீர் தேங்குவதை தடுப்பதின் வாயிலாக டெங்கு பரவலை தடுக்கலாம். டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது யாருக்கும் எந்த பாதிப்பு இல்லை’ என்றனர்.