புகழ் அஞ்சலி

காக்கும் காங்கல்லார் குலக்கொழுந்து சீர்மிகு செருக்கூரார்

குலம்தழைக்க, விளக்கேற்றியது சென்ற நூற்றாண்டின் வரலாறு.

உந்தையும் தாயும் தவமிருந்து ஈன்றெடுத்தது நவரத்தினங்கள்.

அதில் நீ கடைக்குட்டி – செல்லக்கட்டி – படுசுட்டியும் கூட!

 

நீ எத்தனை கொடுத்து வைத்தவன், எவ்வளவு அதிர்ஷ்டக்காரன்?

பேர் சொல்லும் பாரம்பரியம், பாசம் பொழியும் தாய்தந்தை,

அவர்தம் இருவழி பெரும்குடும்ப உற்றாரும், உறவினரும்,

தாய்க்கும் தந்தைக்கும் சற்றும் சளைக்காத மாமன்மார் உறவுமுறை,

மல்லிகைப்பூ செண்டாலே சீண்டி உனை தூக்கி தோளில் சுமக்க,

மாமன்மார் நால்வருண்டு: நால்வரும் திருமால் நாமம் கொண்டோர்

உன் பெயரில் திருமுருகன், அந்த திருமால்களுக்கு நீ மருகன்

 

உன் கதை தொடர்வதெல்லாம், முன் கதையை தொட்டுத்தானே?

இல்லத்தின் இடுகைதன்னில், இறைவன் நம்மைக் காக்க வேண்டி,

தைமகள் வருமுன்னே காப்புக் கட்டுவதும்

பூளை மலர்கள் கொண்டு,

அந்தப் பூளை பூத்த புண்ணிய மண்ணில்

என்றும் நலம் காக்கவல்ல

காங்கல்லார் நால்வர் நட்டிய கற்பகவிருட்சம்தானே – பூ.சா.கோ!

தலைகாக்கும் தர்மத்தின் ஊற்றுக்கண் உயிர் பெற்று வாழும் தலம்

அறத்தை நிறுத்தி செழிப்பை வளர்த்த அறிவுக்கூடம் பூ.சா.கோ.

இணையாத திருமகளும் கலைமகளும்

இணைந்திருக்கும் அறக்கோவில்

எண்ணற்ற பேர்களுக்கு வடிவமைத்து வாழ்வமைத்த

அட்சய பாத்திரம்.

 

வேளாண்மை கற்ற பின்னர் மேலாண்மை பயில

நீ எண்ணிய காலை,

திருமாலின் பன்னிரண்டாம் பேரோன் உன் மாமன் தாமோதரன்,

அன்று உன்னை கைப்பிடித்து வழிநடத்தி

அறப்பணியில் அமரச்செய்தார்.

என்ன தவம் செய்தாய் நீ? அறத்திற்கு அர்ச்சகராய்

பணியாற்றும் வாய்ப்பிற்கு!

 

ஐநூறு பிறைக்காலம் அறப்பணி செய்தாய்,

அதன் பலனை நீயும் பெற்றாய்.

அறங்காவலர் அனைவருக்கும் இயங்கும் கரமாகும்

பேரும் பெற்றாய்

மாமன்மார் குடும்பச்சொத்தில் உனக்கு பங்கில்லை

இது வழக்கம்தான்

அவர்தம் அறத்தின் விளைவில், புண்ணியத்தில்

உனக்கும் உண்டு பங்கு

 

தாமோதரன் விட்ட பணியும், அவர் பின்னோர் இட்ட பணியும்,

தொய்வின்றி தொடர்ந்து செய்தாய், அறங்காவலர்கள் தலைமையேற்று!

பெற்றோரைப் பிரிந்து கற்கவந்த, எண்ணற்ற மாணவ மணிகளுக்கு,

உறவினனாய்,காப்பாளனாய், அரணாக, அவர்தம் நலம் காத்து,

பெற்றோரின் வயிற்றில் பால் வார்த்த புண்ணியமும்

உன்னைச் சேரும்.

 

உன் நிர்வாகத்திறனையும், ஆய்ந்து உணரும் அறிவையும்,

இசையின் பால் உனது இசைவினையும், ஈரம் கசியும் நெஞ்சையும்,

முடிவெடுக்கும் துணிவையும், வழி நடத்தும்

தலைமைப் பாங்கையும்,

இல்லையென்பார்க்கு இல்லை என்று இயம்பாத இயல்பையும்

தேனொத்த சொல்லையும், நெறிபிறழாத் தலைமையையும்

செருக்கூரார் குலத்திற்கான ஞானச் செருக்கையும்,

அரசியல்வாதிகளையும் அவர்தம் அதிகாரம் மிக்கோரையும்,

அகலாது அணுகாது அளந்து நின்று தீக்காயும் சாணக்கியத்தையும்,

பழத்தை நழுவ விட்டு பாலில் விழவைக்கும் சாமர்த்தியத்தையும்

கல்லிலும் நார் எடுக்கும் உன் சொல்லாட்சித் திறமையையும்

சல்லடையில் சலித்து நல்லதைப் பொறுக்கி எடுக்கும் பாணியையும்

இன்னும் பலவற்றையும் நானறிவேன் – சொல்ல இங்கு இடமில்லை

 

ஊர்கூடித்தான் தேர் இழுப்பார் – இது தெரிந்தது தான்

அந்த ஊரையே கூட்டி வரிசையில் நிறுத்தும் தலைவன் நீ!

ஊரகமோ, நகர்ப்புறமோ, தொழிலகமோ, ஆய்வகமோ

கல்விச்சாலையோ, கட்டுமானமோ உன் கால்படாத இடமேது?

வார்ப்படத்தொழில் வீறுகொண்டு எழுவதற்கு எரிபொருளே தானே நீ?

 

எனக்கு இன்னும் ஒன்று மட்டும் புரியவேயில்லை -அதுதான்

உனது வேழமொத்த வியக்கவைக்கும் நினைவாற்றல்!

ஒருவேளை ஆதிசிவன் மறந்து விட்ட பிரணவ மந்திரத்தை.

அந்த சாமியின் மடியிலமர்ந்து செவியில் ஓதியது நாதனல்லவா?

அந்த சுவாமிநாதன் பெயர்தான் இதற்குக் காரணமோ?

இவையெல்லாம் மனிதன் மறந்திடுவான்

இறைவன் அறிந்திடுவான், வாழ்க உன் புகழ் என்றும்!

-A.V.வரதராஜன்