ஒமைக்ரான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் – பில் கேட்ஸ் எச்சரிக்கை

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும் உலக கோடீஸ்வரர்களின் ஒருவருமான பில் கேட்ஸ் , ஒமைக்ரான் வைரஸ் குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துக்களை அவர் பதிவு செய்துள்ளார்.

அதில், வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றிருந்த நிலையில், தொற்று நோயின் மிக மோசமான பகுதிக்குள் நாம் நுழைந்து விட்டோம். எனது நெருங்கிய நண்பர்களுக்கும் ஒமைக்ரான் பாதிப்பு வந்து விட்டது எனவும், தனது சுற்றுலா பயண திட்டத்தை ரத்து செய்து விட்டதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வரலாற்றில் மற்ற அனைத்து வைரஸ்களையும் விட ஒமைக்ரான் மிகவும் வேகமாக பரவுகிறது என்றும், விரைவில் உலகின் அனைத்து நாடுகளிலும் இது பரவத் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஓமிக்ரான் உங்களை எப்படி நோய்வாய்ப்படுத்துகிறது என்பது தெரியாத விஷயம். அதைப் பற்றி மேலும் அறியும் வரை நாம் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது டெல்டாவை விட சற்று பாதிப்பு குறைவாக கடுமையானதாக இருந்தாலும், நாம் இதுவரை பார்த்தவற்றில் மிக மோசமான எழுச்சியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் கொரோனா முன்னெச்சரிக்கைகள் எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்தி பில் கேட்ஸ், அனைவரையும் முகமூடி அணியவும் , தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.மேலும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவது நமக்கு மேலும் பாதுகாப்பை நல்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் மீண்டும் ஒரு ஊரடங்கிற்கு செல்வது எரிச்சலாக இருந்தாலும், இந்த நிலை எப்போதும் இப்படி இருக்காது. ஒரு நாள் இந்த பெருந்தொற்று முடிவுக்கு வரும் என்றும், அப்போது நாம் ஒருவரையொருவர் நன்றாக கவனித்துக் கொள்ள முடியும் என்றும், அந்த தருணம் விரைவில் வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.