இரவு ஊரடங்கை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

ஒமைக்ரான் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், இரவு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

டெல்டாவை விட மூன்று மடங்கு வேகத்தில் பரவும் ஒமைக்ரானைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், ராஜஸ்தான் போன்ற தொழில் மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் பரவல் ஆரம்பித்து விட்டது.

மேலும், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 220 ஆக உயர்ந்துள்ளது. டெல்டாவை விட தீவிரத்தன்மை கொண்டதால் 3-வது அலையை தடுக்க கட்டுப்பாடு அவசியமாகிறது. மேலும், பண்டிகை காலம் நெருங்குவதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் இரவு ஊரடங்கு, எப்போதும் செயல்படும் உதவி மையம், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் பாசிட்டிவ் சதவீதம் 10-க்கு மேல் அதிகரிப்பு அல்லது ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 40 சதவீத படுக்கைகள் நோயாளிகளால் நிரப்பப்பட்டுள்ள மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உச்சத்தை அடைவதற்கு முன்னதாக கட்டுப்படுத்த வேண்டும்.

பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். மக்கள் கூடுவதை நெறிமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் பணியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளது. அதிக பாதிப்பு இருக்கும் இடங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாக ஆய்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.