தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையும் தேசிய தேனீ வாரியமும் இணைந்து நடத்தும் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு பயிற்சியின் துவக்க விழா வியாழக்கிழமையன்று நடைபெற்றது. இந்த பயிற்சியனாது 16.12.2021 முதல் 22.12.2021 வரை நடைபெறுகிறது.

இந்த பயிற்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உழவர் அறிவியல் மையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 25 விவசாயிகள் பங்கு பெறுகின்றனர். தேனீ வளர்ப்பில் உள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள், செயல்முறை விளக்கங்கள், கருத்துரைகள், களப்பணி பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் பயிற்சி தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில், தேனீ ஆராய்ச்சி திட்டத்தை செயல்படுத்தும் பேராசிரியர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். பூச்சியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் சாத்தையா பயிற்சியினை பற்றிய விளக்க உரையாற்றினார். பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு மையத்தின் இயக்குனர் பிரபாகர் தலைமை உரை நிகழ்த்தினார். உழவர் பெருமக்கள் தேனீ வளர்ப்பையும் ஒரு உப தொழிலாக மேற்கொண்டு கூடுதல் வருமானம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தேனீ வளர்ப்பு பயிற்சியினை தேசிய தேனீ வாரியத்தின் கூடுதல் இயக்குனர் நவீன் குமார் பட்லே காணொலி வாயிலாக துவக்கி வைத்து உரையாற்றினார். மத்திய வேளாண் அமைச்சகத்தின் தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்தி திட்டத்தின் மூலம் நடைபெறும் “மினி மிஷன்” திட்டங்களின் சிறப்பம்சங்களை விளக்கினார். “மதுகிராந்தி” இணையதளத்தில் தேனீ வளர்ப்போர் பதிவு செய்து பயன்பெற அறிவுறுத்தினார். அதன் மூலம் தேனீ வளர்ப்போர், தேன் உற்பத்தியை பெருக்குதல், தேன் சுத்திகரித்தல், மதிப்புக்கூட்டல், சந்தைப்படுத்துதல் ஆகிய விவரங்களை எளிதில் தெரிந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்தார்.

விரிவாக்க இயக்ககத்தின், பயிற்சிப் பிரிவின் பேராசிரியர் மற்றும் தலைவர் ரவிக்குமார் தியோடர், தேனீ வளர்ப்போர் வேளாண் உற்பத்தியாளர்கள் குழுக்களை அமைத்து தேனீ வளர்ப்பை வணிகரீதியில் லாபகரமான தொழிலாக மாற்றி பயன் பெற வேண்டினார். பொள்ளாச்சியை சேர்ந்த முன்னோடி தேனீ வளர்ப்பாளர் விவேக், பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார்.