தீவிரமாக பரவும் டெங்கு காய்ச்சல்: கோவை அரசு மருத்துவமனையில் 20 பேர் அனுமதி

கோவை அரசு மருத்துவமனையில் 17 குழந்தைகள் உட்பட 20 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருவதால் மாவட்டத்தில் ஊரக மற்றும் மாநகர பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கொசுவை ஒழித்து மருந்து தெளித்தல், கொசு மருந்து அடித்தல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இருந்தபோதிலும் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்குக் காய்ச்சலானது பெரியவர்களைவிட குழந்தைகளை அதிகமாக பாதித்து வருகிறது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பின் காரணமாக 17 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் 3 பேர் என மொத்தம் 20 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அங்கு உள்ள சிறப்பு வார்டில் வைத்து டாக்டர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.